Spread the love

சிவதாசன்

[wp-rss-aggregator]பாரிஸில் இரண்டு வாரமாக நடைபெற்ற ஐ.நா. உலகச் சூழல் மாநாடு முடிவுக்கு வந்திருக்கிறது. மாநாடு வெற்றி என்று தீர்மானம் வேறு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் கியோட்டோ, கொப்பென்ஹேகன் நகரங்களில் தோல்வியடைந்த மாநாடுகள் பாரிசில் வெற்றியளித்திருப்பதாகக் கொண்டாடுகிறார்கள்.

மாநாட்டின் நோக்கம் பூகோள வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பைக் குறைத்துக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்பது. அதைச் சாதிப்பதற்கு பல அபிவிருத்தியடைந்த, அடைந்துவரும் நாடுகளின் ஒத்துழைப்புத் தேவை. முன்னய மாநாடுகளில் அபிவிருத்தியடைந்த நாடுகள் பல ஒத்துழைக்கவில்லை. இந்த தடவை ஒத்துழைக்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இத் திட்டத்தை அமுற்படுத்துவது எளிதல்ல என்றும் கூறப்படுகிறது. காரணம் இந்நாடுகள் எல்லாமே தமது பொருளாதார முன்னெடுப்பில் மட்டுமே அக்கறை கொண்டனவாக இருக்கின்றன. உலக அதிகாரப் போட்டியின் வெற்றியைத் தீர்மானிப்பது பொருளாதாரம் என்று தான் வாய்ப்பாடு சொல்கிறது.

விஞ்ஞானிகள் மனிதகுல மேம்பாட்டை மட்டுமே கருத்திற் கொண்டு தமது ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுகிறார்கள். சூழல் மாற்றங்கள் எதிர்காலச் சந்ததியினருக்கு பலத்த பேரழிவுகளைக் கொண்டுவரக் கூடாதென்ற அக்கறை அவர்களுக்கு இருக்கிறது.

சூழல் மாற்றத்திற்கு அதி முக்கிய காரணம் காபனீரொக்சைட் வாயுவின் அதிகரிப்பு எனவும் இதை உற்பத்தி செய்யும் மூலங்களாக எரிவாயுப் பாவனையும் (57% வாகனங்கள், மின்னுற்பத்தி) மற்றும் காடழிப்பு (17%) என்பனவுமே காணப்படுகின்றன எனத் தரவுகள் மூலம் அவர்கள் நிறுவுகிறார்கள். ஆனால் பொருளாதார நலம் கருதும் அரசுகளும் அரசியல்வாதிகளும் இப்படியான விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை உதாசீனம் செய்தது மட்டுமல்ல அவர்களின் ஆய்வுகளை நம்பவும் மறுத்து வந்தார்கள். காரணம் அவர்களில் பலர் எண்ணை வியாபாரத்திலும் காடழிப்பு வருமானங்களிலுமே வாழ்ந்து வருபவர்கள். இப்படியானவர்களின் அழுத்தங்களினாலேயே கியோட்டோ, கொப்பென்ஹேகன் மானாடுகள் தோல்வியில் முடிந்தன. மக்களும் அவர்களை நம்பினார்கள்.

ஆனால் சமீப காலங்களில், குறிப்பாக கடந்த வருடம் (2014) வரலாற்றிலேயே அதியுச்ச வெப்பநிலையைக் கண்ட வருடமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தரவு பேணுதல் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இது வரை பார்த்தால் ‘வெப்பமான வருடங்கள்’ என அறியப்பட்ட 15 வருடங்களில் 14, 21ம் நூற்றாண்டிலேயே காணப்பட்டிருக்கின்றன.

2014 ம் ஆண்டின் அதியுச்ச வெப்பநிலை மக்களை விஞ்ஞானிகள் பக்கம் தள்ளிவிட்டது. லாபம் சம்பாதிப்பதைவிடவும் குழந்தைகளின் எதிர்காலமே முக்கியம் என அவர்கள் கிளர்ந்தெழுந்ததன் வெளிப்பாடே பாரிஸ் கொப் 21 மாநாட்டின் வெற்றி. அது அரசியல்வாதிகளுக்கான வெற்றி, மக்களுடையதல்ல.

வளிமண்டலத்தின் இன்றய சராசரி வெப்பநிலை 15 பாகை செல்சியஸ். பூமி உருவாகிய காலத்திலிருந்து இது பல தடவைகள் கூடியும் குறைந்தும் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இருந்தாலும் தற்போதய வெப்பநிலை அதிகரிப்பின் வேகம் விஞ்ஞானிகளைக் கவலை கொள்ள வைத்திருக்கிறது. இந்த வேகத்தில் அதிகரித்தால் பூகோளத்தின் பனி மூடிகள் உருகி கடலின் நீருயரம் அதிகரித்து பல தாழ்ந்த பிரதேசங்கள் அமிழ்ந்துவிடலாமென்றும் அதே வேளை சூரிய ஒளியின் பெரும் பகுதியைப் பிரதிபலிக்கும் பனி மூடிகள் இல்லாதபோது பூகோளம் இன்னும் வேகமாக வெப்பமடையும் எனவும் அவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால் வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பிற்கும் காபனீரொக்சைட் வாயுவின் அதிகரிப்பிற்கும் என்ன சம்பந்தம் என வாசகர்கள் சிலர் கேட்கலாம்.

பூகோளத்தில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி (வெப்பம்) முற்றாகப் பிரதிபலித்துவிட்டால் பூமி குளிரில் உறைந்துவிடும். எமது பூமியைச் சுற்றி இருக்கும் வளிமண்டலத்தில் இருக்கும் காபனீர் ஒக்சைட் போன்ற வாயுக்களின் படலம், தெறித்து வெளியே போகும் சூரிய வெப்பத்தின் ஒரு பகுதியை மீண்டும் பூமியை நோக்கித் தெறிக்க (இரண்டாம் தெறிப்பு) வைக்கின்றது. இதனால் தான் எங்கள் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை 15 பாகை செல்சியஸ் ஆக இருக்க முடிகிறது.

ஆனால் வாகனங்களினதும், மின்னுற்பத்தி மற்றும் ஆலைப் புகைபோக்கிகளிலிருந்து வரும் புகைகளில் உள்ள காபனீரொக்சைட் பெருமளவில் வளிமண்டலத்தை அடையும்போது பூமியிலிருந்து தெறிக்கும் வெப்பத்தின் கணிசமான பங்கு இந்த அதிகரிக்கப்பட்ட காபனீரொக்சைட் படலத்தினால் திரும்பவும் பூமியை நோக்கியே தெறிக்க வைக்கப்படுகிறது. இதையே கிறீன் ஹவுஸ் வாயு ( green house gas) என்கிறார்கள்.

இந்த பாரிஸ் மானாட்டின் தீர்மானத்தின்படி காபனீரொக்சைட் போன்ற வாயுக்களை அதிகம் உற்பத்தி செய்யும் அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் தங்கள் எரிவாயு மற்றும் நிலக்கரிப் பாவனைகளைக் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்பதே முடிவு.

இப்படியான நாடுகளின் பொருளாதாரத்தின் அடிநாதமே எரிவாயு மற்றும் நிலக்கரிப் பாவனைதான். ஆசியா, தென்னமெரிக்கா போன்ற நாடுகளில் நடைபெறும் காடழிப்புகள் கூட மேற்கு நாடுகளின் சந்தைகளை நிரப்புவதற்காகவே. அவர்கள் பாவனையைத் தாமாக முன்வந்து குறைக்கப் போவதில்லை. அப்படியானால் எல்லா நாடுகளுக்கும் ஒவ்வொரு அளவுக் கட்டுப்பாடு (கோட்டா) நிர்ணயிக்கப்பட வேண்டும். பணக்கார நாடுகளில் மக்கள் சூழலுக்காக எவ்வகையான சுய கட்டுபாடுகளுக்கும் தயாராக இருப்பார்கள் என நம்பலாம். ஆனால் இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் ஏற்கெனவே தமது அதிருப்தியைக் காட்டியிருக்கிறார்கள்..

எந்த நாட்டின் கோட்டா எந்தளவு என்பதை யார் எப்படித் தீர்மானிப்பது? வருடாந்த கோட்டாவை எட்ட முடியாத பட்சத்தில் அந்நாடுகள் மீதான தண்டனையை யார் எப்படி வழங்குவது?

இங்கு பிரச்சினை நாடுகளில் இல்லை. நாடுகளின் நாயகமாக இருக்கும் ஐ..நா. சபையில் தானிருக்கிறது.. இந்த பாரிஸ் மானாட்டை ஏற்பாடு செய்தது இச் சபைதான். எப்போதுமே அதிகார அரசியலின் நிழலில் ஒதுங்கி வாழும் இந்தச் சபையால் தீர்மானங்களை நிறைவேறற மட்டுமே முடியும். அதிகார நாடுகளின் தேவைகளைத் தீர்க்காத எவ்வித தீர்மானமும் வெற்றியடையப் போவதில்லை. இத் தீர்மானம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கால்களில் போடப்படும் ஒரு பொருளாதாரத் தளையாக ஏன் பார்க்கப்படக் கூடாது என்பதற்கும் ஆதரவாளர்கள் பலருண்டு.

விடயம் நல்லது. நம்பிக்கை தரும் உலக சபை உருவாகும்வரை எதிலும் நம்பிக்கையில்லை.

மார்கழி 13, 2015. – இக் கட்டுரை ஈகுருவி பத்திரிகஇயில் பிரசுரமானது

Print Friendly, PDF & Email