பாரிஸில் பயங்கரவாதம் | தெருவில் ஆசிரியரின் தலையைத் துண்டித்த கொலையாளி

பாரிஸில் பயங்கரவாதம் | தெருவில் ஆசிரியரின் தலையைத் துண்டித்த கொலையாளி

Spread the love

முஹம்மது நபியை அவமதித்தார் எனக் குற்றச்சாட்டு

பாரிஸ் நஹரின் வடமேற்குப் பகுதியிலுள்ள கொன்ஃப்ப்ளான் செயிண்ட்-ஒனொறீன் என்னுமிடத்தில் தெருவில் வைத்து இஸ்லாமிய பயங்கரவாதி எனக் கருதப்படும் ஒருவர் ஆசிரியர் ஒருவரின் தலையைத் துண்டித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முஹம்மது நபியை அவமதித்தார் என்பதனால் கோபமடைந்த இஸ்லாமியர் ஒருவர் அந்த ஆசிரியரைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

வெள்ளியன்று (அக்டோபர் 16) நடைபெற்ற இச் சம்பவத்தின்போது, சந்தேகநபரைப் பொலிசார் அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்றோன், “கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராடியதற்காக நமது நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இது ஒரு இஸ்லாமிய பயங்கரவாதம். தீவிரவாதத்துக்கு எதிராக நாட்டு மக்கள் அணிதிரளவேண்டுமென” தெரிவித்துள்ளார்.

முஹம்மது நபி பற்றிய கருத்துப்படங்கள்

இச் சம்பவத்தின்போது கொலை செய்யப்பட்ட ஆசிரியர், 10 நாட்களுக்கு முதல், தனது வரலாற்றுப் பாட வகுப்பில் “கருத்துச் சுதந்திரம்” பற்றிய உரையாடலை ஆரம்பித்திருந்தார் எனவும் அதில் முஹம்மது நபியின் கருத்துப்படங்கள் பேசுபொருளாக எடுக்கப்பட்டிருந்ததென்றும் கூறப்படுகிறது.

இவ் விடயம் ஒரு மதநிந்தனை என்று கருதிய, வகுப்பில் இருந்த ஒரு இஸ்லாமிய மாணவர் அவரது பெற்றோருக்கு இது பற்றித் தெரிவித்ததாகவும் இதனால் கோபமடைந்த பெற்றோர் அந்த ஆசிரியருக்கு எதிராகப் புகார் ஒன்றைச் செய்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்தவரின் பிள்ளைகள் எவரும் அப்பாடசாலையில் கல்வி கற்கவில்லை எனப் பொலிசார் தெரிவித்ததாகவும் அறியமுடிகிறது.

இச் சம்பவம் நடைபெற்றுச் சில மணித்தியாலங்களில், ஒரு சிறுவன் உட்பட, நான்குபேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாதத்துக்கு எதிரான பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர், மொஸ்கோவில் பிறந்த, 18 வயதுடைய செச்சென் பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு இஸ்லாமியர் என அவரது அடையாள அட்டை மூலம் அறிந்துகொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

மேற்கு ஐரோப்பாவில், பிரான்ஸ் நாட்டில் சுமார் 5 மில்லியன் இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள். இஸ்லாம், பிரான்ஸின் இரண்டாவது மதமாக உள்ளது. பிரான்ஸில் இஸ்லாமிய கலாச்சாரம் ஒரு சமாந்தர சமூகமாக வளர்ச்சிபெற்று வருகிறது எனவும் அதைக் கட்டுப்படுத்துவதற்காக மக்றோனின் அரசு பல சட்டங்களை இயற்றி வருகிறது எனவும் கூறப்படுகிறது.



முஹம்மது நபி பற்றிய கார்ட்டூன் சித்திரங்களினால் ஏற்பட்ட இரண்டாவது பயங்கரவாதச் சம்பவம் இதுவாகும். ஜனவரி 2015 இல் பாரிஸில் இருந்து வெளிவரும் ‘சார்ளி ஹெப்டோ’ என்ற பத்திரிகை முகம்மது நபி பற்றிய கார்ட்டூன் சித்திரங்களைப் பிரசுரித்தமைக்காக மூன்று இஸ்லாமியர் பாரிஸில் மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இக்கொலைவழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அப் பத்திரிகை மீண்டும் முஹம்மது நபி பற்றிய கார்ட்டூன் சித்திரங்களைப் பிரசுரித்தது. அப்போதும் பாகிஸ்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் பாரிஸில் இருவரைக் குத்திக் காயப்படுத்தியிருந்தார்.

Print Friendly, PDF & Email