பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை – உதவி கேட்டு பசில் ராஜபக்ச இந்தியா பயணம்
சுதந்திரமடைந்ததற்குப் பிறகு பொருளாதாரத்தில் மிக மோசமான நிலையை எட்டியிருக்கும் இலங்கையை மீட்டெடுப்பதற்காக நிதியமைச்சர் பசில் ராஜப்கச விரைவில் புதுடில்லி போகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார்.
இப்பயணத்தின்போது இந்தியாவிடமிருந்து கடன் பெறுவது மட்டுமல்ல, இலங்கை எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான இதர வழிகளிலும் அதன் ஒத்துழைப்பைப் பெறுவது குறித்து ஆராயப்படுமென பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவின் இப்பயணத்துக்கான ஒழுங்குகளை இந்திய தூதுவர் கோபால் பாக்லே மற்றும் இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட ஆகியோர் ஒழுங்கு செய்துள்ளனர். இப் பயணத்தின்போது, பசில் ராஜபக்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஹார்ஷ் வர்தன் ஷ்றிங்லா ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக அரசு பெருமளவு நாணயத்தை அச்சடித்தமையின் காரணமாக நாட்டின் பணவீக்கம் 8.35 வீதத்துக்கு உயர்ந்துள்ளது. இதன் விளைவாக நாடு மேலும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க சர்வதேச நிதியத்திடமிருந்து கடனைப் பெறும்படி எதிர்கட்சி தொடர்ந்து அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது. ஆனாலும் பீரிஸ் உட்பட, அரசாங்கத்தில் பாரிய எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் இந்தியாவின் உதவியை நாடி நிதியமைச்சர் அங்கு செல்லவுள்ளதாகத் தெரிகிறது. சர்வதேச நிதியத்திடமிருந்து கடன் பெற்ற எந்த நாடு உருப்பட்டுள்ளது என மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவாசம் கேட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதானால் அதற்கான பெறுமதியை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு டாலரில் மட்டுமே வழங்க முடியும். ஆனால் இலங்கையின் ஏற்றுமதி தளர்வடைந்ததனாலும், கொறோணாத் தொற்றினால் சுற்றுலாத்துறையின் வருமானம் குறைவடைந்ததாலும் வெளிநாடுகளுக்குச் செல்லும் பணியாளர் தொகை குறைவடைந்ததாலும் இலங்கையின் அந்நியச் செலாவணிச் சேமிப்பு ஏறத்தாள காலியாகிய நிலையில் இருக்கிறது. அத்தோடு அடுத்த வருடம் வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டி கொடுக்குமதி அண்மிக்கிறது. இந் நிலையில் அடுத்த வருட நடுப்பகுதியில் இலங்கை மிக மோசமான நிலையை எட்டுமெனப் பொருளாதார வல்லுனர்கள் எதிர்வுகூறி வருகிறார்கள்.
இந் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ‘அயலவர் முதல்’ கொள்கையின் பிரகாரம் இலங்கை, இந்தியாவின் முதலாமிடத்தில் இருக்கிறது. எனவே எவ்வழியாகிலும் இந்தியா இலங்கையைக் கைவிட்டுவிட மாட்டாது என்ற உத்தரவாதத்தை பிரதமர் மோடி இலங்கைக்கு வழங்கியிருப்பதாகத் தெரிகிறது.
இதே வேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கம் நிறைவுபெறும் நிலையில் இருப்பதாகவும் இதர பிரச்சினைகளின் மத்தியிலும் அம் முயற்சி தங்கு தடையின்றித் தொடர்கிறது எனவும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். இந் நிலையில் இந்தியாவை அதிருப்திக்குள்ளாக்கும் வகையில் இந்த அரசியலமைப்பு இருக்க மாட்டாது என எதிர்பார்க்கலாம். எனவே பசில் ராஜபக்சவின் டில்லி வரவும் அதைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இந்தியா விடுத்திருக்கும் அழைப்பும் தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வும் பேச்சுவார்த்தைகளில் இடம்பெறுமெனவும் எதிர்பார்க்கலாம்.