பாராளுமன்ற முன்றலில் முகமூடிகளுடன் வந்த ஆயுததாரிகளுக்கும் பொலிஸாருக்குமிடையில் வாய்த்தர்க்கம்

இன்று (05) பாராளுமன்ற முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொலிசாரது தடைகளையும் மீறி உட்புக முனைந்த ஆயுததாரிகளைப் பொலீசார் தடுத்து நிறுத்தினர். துப்பாக்கிகளுடன் வந்த அவர்கள் உண்மையில் இராணுவத்தின் ஒரு பிரிவு என அறிந்ததும் அவர்கள் தொடர்ந்து உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் அதற்கு முன்னர் சில போலீஸ் அதிகாரிகளுக்கும் ஓரிரு இராணுவத்தினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன் போது ஒரு போலீஸ் அதிகாரி இராணுவத்தினர் ஒருவரின் முகமுடியைக் கிழித்ததுடன் அவரது மோட்டார் சைக்கிளின் சாவியையும் பிடுங்கி எடுத்திருந்தார். முகமூடிகளுடன் வந்த ஆயுததாரிகளது மோட்டார் சைக்கிள்கள் ஒன்றும் பதிவுத் தகடுகளைக் கொண்டிருக்கவில்லை.

இவ்விராணுவத்தினர் உயரதிகாரிகளின் கடடளையின் பேரிலேயே அங்கு அனுப்பப்படடார்கள் என்றும் முறையற்ற வகையில் நடந்துகொண்ட இப் பொலிசார் மீது விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென்றும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ணா ஆகியோர் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய நிலவரம்:
இதே வேளை , இலங்கையில் நிலவிவரும் அரசியல் குழப்பநிலை மேலும் நாடுமுழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இது குறித்த பிந்திய செய்திகள்:

  • விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டு ஏப்ரல் 1 இலிருந்து நடைமுறைக்கு வந்த அவசரகாலப் பிரகடனம் இன்றிரவு (05) முதல் நீக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது
  • சிறிசேன உட்பட, சுதந்திரக் கட்சியின் 14 பா.உ.க்கள், வீரவன்ச அணியிலுள்ள 16 பா.உ. க்கள் மற்றும் ஆளும் கடசியைச் சேர்ந்த 12 பா.உ.க்கள் என மொத்தம் 42 பேர் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர்
  • பாராளுமன்றம் நாளை காலை 10:00 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
  • வன்முறையில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தாம் தயங்கமாட்டோமென பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ணா எச்சரித்துள்ளார்
  • நேற்றுப் பதவிப் பிரமாணம் செய்த முன்னாள் நீ தியமைச்சர் அலி சப்ரி 24 மணித்தியாலங்களுக்குள் தனது புதிய அமைச்சுப் பதவியையும் (நிதி) ராஜினாமா செய்துள்ளார்.
Video Courtesy: NewsFirst