பாராளுமன்ற ஆர்ப்பாட்டத்துக்குத் தற்காலிக ஓய்வு – மீண்டும் வருவதாகச் சபதம்!

பாராளுமன்ற முன்றலில் (ஹொறுகோகம) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (06) தமது ஆர்ப்பாட்டங்களை முடித்துக்கொண்டுள்ளார்கள். மே 17 வரை பாராளுமன்றத்தை இழுத்து மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்த நிலையில் ஆர்ப்பட்டக்காரர்களும் அதுவரை தமக்கு ஓய்வு வழங்கியுள்ளதாகவும் 17ம் திகதி தாம் திரும்பவும் வருவோம் எனச் சபதமிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிகிறது.

மே 05 முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பல்கலைக்கழக ஒன்றிய மாணவர்கள் நேற்று (06) நடைபெற்ற உபசபாநாயகர் பதவித் தேர்தல் வாக்கெடுப்பைத் தொடர்ந்து பாராளுமன்ற மண்டபத்துக்கு உள்ளே போக எத்தனித்த போது பொலிசாரின் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்தார்கள். இதைத் தொடர்ந்து மாணவர் தரப்புக்கும் பொலிசாருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மே 17 வரை பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்திருந்தார். தற்போது இம் மாணவர்கள் காலிமுகத் திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ‘கோதாகோகம’ ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

மே 05 அன்று, சிறீஜயவர்த்தனபுரம் பல்கலைக்கழகத்திலிருந்து பாராளுமன்றம் வரை ஊர்வலமாகச் சென்ற மாணவர்கள் இரவு பெய்த அடைமழையையும் பொருட்படுத்தாது தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை செய்து வந்தார்கள். பின்னர் பொலிசாரின் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை ஆகிய தாக்குதல்களைய்ம் பொருட்படுத்தாமல் தமது எதிர்ப்புகளைத் தொடர்ந்தும் தெரிவித்து வந்தார்கள். நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களைப் போலவே இவர்களது கோரிக்கையும் இலங்கையின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பதை விலகவேண்டுமென்பதோடு ராஜபக்ச குடும்பம் திருடிய பணத்தைத் திருப்பிக் கையளிக்க வேண்டும் என்பதே.