Sri Lanka

பாராளுமன்றமில்லாத ஒரு நாடு ஜனநாயகமற்றது – சுமந்திரன்

பாராளுமன்ற கலைப்பு மீதான உச்சநீதிமன்ற விசாரணைகள் ஆரம்பம்

மே 18, 2020: பாராளுமன்றத் தேர்தல் திகதி மற்றும் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி மறுப்பு தெரிவிப்பது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட 8 அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் இன்று உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

கடந்த பாராளுமன்றத்துக்கும், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸவுக்குமிடையில் இடையில் எழுந்துள்ள அரசியலமைப்பு சட்ட இழுபறி தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இலங்கையின் அரசியலில் பாரிய விளைவுகளைத் தோற்றலாம் என அவதானிகள் கருதுகின்றனர்

இவ் வழக்கில் சட்டமா அதிபரை மேலதிக வழக்குரைஞர் நாயகம் இண்டிகா டெமுனி டிசில்வாவும், ஜனாதிபதி செயலர் பி.பி.ஜயசுந்தர சார்பில் ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும் வாதாடுகிறார்கள்.

அடிப்படை உரிமைகள் தொடர்பாக வழக்குப்பதிந்திருந்தவர்களில் இருவரான, ஊடகவியலாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான விக்டர் ஐவன் மற்றும் சரிதா குணரட்ன சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதாடுகிறார்.

“பாராளுமன்றம் ஒரு தொடர் நடைமுறை. அது ஒருபொழுதும் இல்லாமல் போய்விடுவதில்லை. கலைக்கப்படும்போது தூக்க நிலைக்குப் போகும் அதை ஒரு அவசரகால நிலையில் மீண்டும் கூட்டுவதற்கு அரசியலமைப்பின் கட்டளை 70(7) இடம் தருகிறது” எனக்கூறி சுமந்திரன் தனது விவாதத்தை ஆரம்பித்து வைத்தார்.

பாராளுமன்றத்தை அதன் 5 வருடகால தவணை முடிவதற்கு முன்னரே கலைக்கும்போது அது மூன்று மாதங்களுக்குப் பிந்தாமல் மீளவும் கூட்டப்படவேண்டுமென்பது அரசியலமைப்பின் கட்டளை 70(5) மூலம் தெளிவு படுத்தப்படுகிறது. இதன் பிரகாரம் ஜூன் 2ம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும்.

தேர்தல் ஆணையத்தினால் குறிக்கப்பட்ட தேர்தல் திகதியான ஜூன் 20 ஏற்கெனவே கால அவகாசத்தை மீறி விட்டது. அரசியலமைப்பின் பிரகாரம் ஒரு நாடு பாராளுமன்றம் இயங்க முடியாது. கோவிட்-19 மிக மோசமான தாக்கத்தைத் தந்துகொண்டிருப்பது தெரிந்திருந்தும், உலக சுகாதார நிறுவனம் இது ஒரு கொள்ளை நோய் என்பதைப் பிரகடனப்படுத்தி சில நாட்களே சென்றிருந்தும், ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் திகதியை அறிவித்திருக்கிறார்.

“இதற்கிடையில், தேர்தல் ஆணையம், அரசியலமைப்பின் விதிகள் பற்றி எந்தவித அக்கறையுமின்றி ஜூன் 20 தேர்தல் நடைபெறுமென்று அறிவித்திருக்கிறது. இது என்ன நிறைவேற்று ஜனாதிபதியும், தேர்தல் ஆணையமும் ஒரு சுதந்திரமான மக்கள் மீது விடும் பகிடியா?” எனச் சுமந்திரன் தனது விவாதத்தின்போது வினவினார்.

“ஏப்ரல் 25 செய்யப்பட்ட பிரகடனப்படி மே 14 தேர்தல்கள் நடைபெற்றிருக்க வேண்டும். அது திகதி கடந்து விட்டது. எனவே அந்தப் பிழையான திகதியைக் கொண்ட பிரகடனம் செல்லுபடியாகாமல் போகிறது.


“இப் பிரச்சினையைத் தீர்க்க ஜனாதிபதிக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அதில் ஒன்று உச்ச நீதிமன்றம். அதை பயன்படுத்திக்கொள்ள அவர் தவறி விட்டார். எனவே தற்போது பூட்டப்பட்டு இராணுவத்தினரின் கைகளில் இருக்கும் பாராளுமன்றத்தை இந்த உச்சநீதிமன்றம் பாதுகாக்கவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார் சுமந்திரன்.

அடிப்படை உரிமைகள் மீதான வழக்குப் பதிவு கொடுத்த கா அவகாசம் போதாமை, வழக்கில் ஜனாதிபதியின் பெயர் குறிக்கப்படாமை போன்ற விடயங்களில் தமது எதிர்க் கருத்துக்களைக் கூறிய பிரதிவாதிகளின் வழக்கறிஞர்கள் அடுத்த விசாரணை நாளின்போது தொடர்வதாகக் கூறியுள்ளார்கள்.

டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து, சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, குமார வெல்கம, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் இளங்கோவன் ஆகியோரது வழக்குகள் மீ 19 ம் திகதி எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.