• Post category:SRILANKA / NEWS
  • Post published:April 22, 2020
Spread the love

சர்வாதிகார ஆட்சியை நோக்கிய நகர்வு ?

கோவிட்-19 நோய்த் தொற்றைச் சாதகமாக்கி கோதாபய ராஜபக்ச சர்வாதிகார ஆட்சியொன்றை அமைக்கத் திட்டமிடுகிறாரா என்கின்ற சந்தேகங்கள் எழுந்துவருவதாக கொழும்பு ஊடகங்கள் ஐயம் தெரிவித்துள்ளன.

திங்களன்று வெளியிட்ட ஒலிப்பதிவு செய்யப்பட்ட பேட்டியொன்றில் கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்துக்களின்படி, பாராளுமன்றத் தேர்தல்கள் ந்டக்கிறதோ இல்லையோ, பாராளுமன்றத்தைக் கூட்டாமல் எவ்வளவு காலத்துக்கும் ஆட்சியை நீடிக்கத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

19 வது சட்டத் திருத்தத்தின் 70 வது கட்டளையின் பிரகாரம், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். மார்ச் 2 இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் ஜூன் 2 இல் அடுத்த பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும். ஆனால் ஜூன் 20ம் திகதியே தேர்தல் நடத்தப்படுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் ஜூன் 2இல் பாராளுமன்றம் கூடப்போவதில்லை. இது அரசியலமைப்புக்கு முரணானது என நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ரத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் ஆணையம் திகதியைத் தீர்மானிப்பதனால் அரசியலமைப்புக்கு முரணானது என்று தெரிந்திருந்தும் ஜனாதிபதியை உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறுமாறு கூறிவிட்டு ஆணையம் தன் கைகளைக் கழுவிவிட்டது. இவ் விடயத்தில் அரசாங்கத்தின் சார்பில் ஷவேந்திர சில்வா பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பது ‘அச்சம் தருகின்றது’ என்ற தோரணையில், ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ஹூல் அபிப்பிராயம் தெரிவித்திருந்தார். தேர்தல் ஆணையம் இதர கட்சிகளுடன் கலந்தாலோசிக்காது தன்னிச்சையாக ஜனாதிபதியினதும், இராணுவத்தினதும் நிகழ்ச்சி நிரலுக்கமைய தேர்தல் திகதியை நிர்ணயித்தமை ஆணையம் அச்சுறுத்தப்பட்ட நிலையில் முடிவை எடுத்திருக்கிரதா எனச் சந்தேகிக்கப்பட வேண்டியுள்ளது. அதே வேளை, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை உதாசீனம் செய்துவிட்டு ஜனாதிபதி எழுந்தமானமாக நட்வடிக்கைகளை மேற்கொள்வதும் சர்வாதிகார ஆட்சியொன்றுக்கான தயாரிப்பாக இருக்குமா என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்திருக்கிறது.

கொறோனாவைரஸ் தொற்று இல்லாதிருந்திருந்தால் விரைவாகத் தேர்தல்களை நடாத்தி மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று நிறைவேற்று அதிகாரத்தை மீளப்பெறுவதுவே கோதாபயவின் திட்டமென்பது பலருக்கும் தெரிந்த விடயம். இதனால் மஹிந்த ராஜபக்சவின் பாராளுமன்ற அதிகாரக் கனவு தகர்க்கப்படுவதைக் கட்சியில் பெரும்பாலோரும் விரும்பாதபடியால் இவ் விடயத்தில் அவர்கள் எவரது குரல்களும் கோதாவுக்கு ஆதரவாக எழுவதுபோல் தெரியவில்லை.

மாறாக, நாடு தழுவிய ரீதியில் நிர்வாகக் கட்டமைப்பு படிப்படியாக இராணுவத்தின் கைகளில் மாறிக்கொண்டிருக்கிறது. சென்ற வருடம் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின்போது தேசியப் பாதுகாப்பு பற்றிப் பெரிதாகக் குரலெழுப்பாத முன்னாள் இராணுவ ஜெனெரல்கள், குறிப்பாக கமால் குணரத்ன போன்றோர் கடந்த சில நாட்களாக குண்டுவெடிப்பையும், தேசிய பாதுகாப்பையும் முன்னுக்குக் கொண்டுவந்து நாட்டுக்கு அச்ச்சுறுத்தல் இருப்பது போலக் காட்ட முற்படுவது இராணுவ ஆட்சியை நீடிக்கவும், விஸ்தரிக்கவுமான முஸ்தீபாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தையும் உருவாக்குகிறது.

“எனது பிரகடனத்தில், பாராளுமன்றம் ஜூன் 21 ம் திகதி கூடுமெனத் தெரிவித்திருந்தேன். அன்று கூடுவதற்குப் பாராளுமன்றம் தயாராக இல்லாவிட்டால் கூட முடியாது” என கோதாபய தனது பதிவு செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, பாராளுமன்றத் தேர்தல்களைப் பின்போடுமாறு புத்த பிக்குகளின் சபைகளும் வற்புறுத்தி வருகின்றன. கட்சியிலுள்ள அரசியல்வாதிகளுடன் ஆலோசிப்பதைவிட கோதாபய, இராணுவத்தினருடனும், புத்த சபைகளுடனும் கலந்தாலோசிப்பது வழக்கமாகையால், தேர்தல் பின்போடப்படும் அல்லது நடத்தாமலே விடும் உத்தேசத்திலும் இவர்கள் எல்லோருடைய பங்குகளும் இருக்க வாய்ப்புண்டு.

நாட்டின் பல அரசியமைப்புச் சட்ட விற்பன்னர்களும் கோதாபயவ பாரளுமன்றத்தைக் கூட்டி இச் சிக்கலைச் சுமுகமாகத் தீர்க்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். அரசியமைப்புச் சட்டத்தின் கட்டளை 70 (7) இன் பிரகாரம் அவசரகாலப் பிரகடனத்தின்போது பாராளுமன்றத்தை நீடிப்பதற்கான அதிகாரங்கள் உண்டு. தற்போதுள்ள சூழலில் செயற்படும் ஒரு பாராளுமன்றம் அவசியமானது என்பதை எதிர்க் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் கோதாபய ராஜபக்ச அதிகாரத்தைப் பாராளுமன்றத்திடம் கையளிக்கத் தயாராகவில்லை.

மார்ச் 2 இல் கலைக்கப்பட்ட பாராளுமன்றம் மூன்று மாதங்களுள் தேர்தல்களை நடத்தாவிட்டால் , 19 வது திருத்தம், ஜனாதிபதியின் பாராளுமன்றக் கலைப்புப் பிரகடனத்தை இல்லாமல் செய்துவிடுகிறது. எனவே பாராளுமன்றம் மீண்டும் கூடுவதற்கான வாய்ப்பு அங்கு இருக்கிறது. ஆனாலும், கோதாபய அதைப் பயன்படுத்த விரும்பவில்லை.

இதிலிருந்து ஜனாதிபதியின் திட்டம் மிக நன்றாகவே புரிகிறது. நாட்டின் ஆட்சியைப் பாராளுமன்றத்திடம் தர அவர் விரும்பவில்லை. கோவிட்-19 நோய்த்தொற்றை அவரும், இராணுவமும் அதமக்குச் சாதகமாகப் பாவிக்கிறார்கள். மக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பாமலிருக்க , சிங்கள் பெளத்த தேசியப் பதாகைகளைக் காட்டிப் புத்த மகாசபைகளையும் தமக்கு ஆதரவாக மார்றிக்கொண்டுள்ளனர் எனவே பார்க்க வேண்டும்.அத்தோடு, ஜூன்20 ம் திகதி கோதாபயவின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பாராளுமன்றத்தை எவ்வித காரணம் கொண்டும் மீளக் கூட்டுவதற்கு கோதாபய திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும், பாராளுமன்றக் கூடல் எவ்வளவு மாதங்கள் பிந்தினாலும் கவலைப்படப் போவதில்லை எனத் தெரிவித்ததாகவும் அறியப்படுகிறது.

அதே வேளை, இந்தியா, கோவிட்- 19 நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் ஆலோசனகளின் பொருட்டு சார்க் உதவித் திட்டத்தின்கீழ் சில இராணுவ ஆலோசகர்களை அன்னுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளதெனவும் கூறப்படுகிறது.

Print Friendly, PDF & Email