Art & LiteratureColumnsசிவதாசன்

பாரதி நூற்றாண்டு | பாரதியைச் சிறை மீட்டல்….
சிவதாசன்

இது மகாகவி பாரதியின் நூற்றாண்டு. கவிஞராகப், பெரும் புலவராக, தேசியப் போராட்ட வீரராக புழுதி படிந்த புத்தகங்களுக்குள் சிறைப்பட்டுக் கிடந்த மாகாகவி பாரதியை ஒரு சமூகப் போராளியாக மீளக் கண்டுபிடிக்கும் செயற்பாடுகள் தென்படுவது மகிழ்ச்சியாகவிருக்கிறது.

எமக்கு அடையாளத்தைத் தந்த தமிழையும், மண்ணையும், இசையையும் விட்டு விலகிச் செல்ல எத்தனிக்கும் ஒரு பரம்பரையை மீளவும் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகள் தமிழ்ப் புலமெங்கும் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற பலரது அவாவையும் நிறைவேற்றுவதற்கு இந்த வருடம் இரண்டு ஆளுமைகளைத் தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி தருவதாகும்.

எட்டயபுரத்தின் மகாகவி பாரதி, நூற்றாண்டுகள் இரண்டையும், ஈரோட்டின் தந்தை பெரியார் ஒரு நூற்றாண்டையும் கடந்திருக்கிறார்கள். இருவரும் தத்தம் வழிகளில் சமூக முன்னேற்றத்துக்காகப் போராடியிருக்கிறார்கள். ஆனால் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் முதலிட்ட மகாகவி பாரதிக்கோ அல்லது அவரது சந்ததிக்கோ அவரது மண் திருப்பித் தந்தது வெகு குறைவு. இந்த நூற்றாண்டிலாவது அக் கடனைத் தீர்க்க வேண்டும் அதற்காக இதை அவரது நூற்றாண்டாகத் தொடர்ந்து கொண்டாடவேண்டும். புதுமை விரும்பிப் பாரதி முன்னெடுத்த சமூக நீதிக்கான போராட்டங்களுக்குப் புதிய வலுவைக் கொடுத்து, புதிய கருவிகளைப் பாவித்து, புதிய தலைமுறைத் தமிழர்கள் அவரை re-brand செய்து இன்றைய காலத்துக்குரிவராக ஆக்க வேண்டிய காலம் இது.

அந்த வகையில், தமிழகத்தில் இளைஞர்களிடையே ஒரு எழுச்சி தெரிகிறது. சமூக வலைத் தளங்களால் பாரதி அதிகம் காவப்படுகிறது தெரிகிறது. முழு அளவிலான பாரதியார் பாதகைகளும், மிடுக்குடன் தோற்றமளிக்கும் பாரதியைத் தாங்கும் வியாபாரப் பொருட்களும் புதிய தலைமுறைகளின் மூளைகளால் உள்ளிறங்காமல் மனங்ககளூடு உள்ளிறக்கப்படும் முயற்சிகளேயாயினும் சினிமாவை ஒரு வாகனமாகப் பாவித்து தமிழகத்தைக் கையகப்படுத்திய திராவிடக் கலாச்சாரத்துக்கு இது அன்னியமானதல்ல.

என்னதான் சொன்னாலும், கற்றோரின் தட்டுக்களில், புத்தகங்களின் உள்ளே எழுத்துக்களில் மட்டும் வாழ்ந்துகொண்டிருந்த பாரதியை முதலில் சாமானியனிடத்தே கொண்டுவந்து சேர்த்தது சினிமா தான். ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ போன்ற பாடல்கள் மூலம் (நாம் இருவர் (1947)), ஏ.வி.எம். புரடக்‌ஷன்ஸ் செட்டியார் பரம்பரையே அந்த கைங்கரியத்தைச் செய்திருந்தது. அதன் பிறகு பல. இப்போது நேர்கொண்ட பார்வை, சூரரைப் போற்று ஆகியனவும் பாரதியைத் திரும்பிப் பார்த்துள்ளன.

பாடசாலைகளில் பாரதியை மீளவும் அறிமுகப்படுத்த புதிய தமிழ்நாடு அரசு முயற்சிகளை எடுத்துவருகிறது. பாரதியைப் பற்றி அதிக திரைப்படங்களை எடுப்பதற்கு ஆதரவு தரவுள்ளதாக அது அறிவித்துள்ளது. உலகத் தமிழ் அமைப்புகள் பாரதியை மையமாகக் கொண்டு தமது கொண்டாட்டங்களை முன்னெடுக்கவேண்டுமென அது கேட்டுள்ளது. பாரதியைக் கொண்டாடும் முகமாக, பாரதப் பிரதமர் மோடி, தன் பாட்டுக்கு, வாரணாசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

மலருக்கு மணத்தைப் பரப்பக் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை. அதந் மணத்துக்காக அதைப் பிடுங்கிப் பெட்டிக்குள் வைத்துப் ‘பாதுகாப்பது’ தான் தேவையற்றது. பாரதியைப் பற்றி நிறைய அலசல்களும், ஆய்வுகளும், மீள் வாசிப்புகளும் செய்யப்பட்டாலும் அவை பெரும்பாலும் தட்டுகளில் வைக்கப்படு அழகுபார்க்கப்படுவதுவே மனதில் சலனம் தருவது. சமத்துவமான சமுதாயத்தைப் படைக்கவேண்டுமென்பதற்காக காற்று, வெளி, மரங்கள், பறவைகள், மிருகங்கள் மூலம், கவிதைகளால் கதறித் திரிந்த பாரதியை மீளவும் அவன் வழியில், அவன் வெளியில் திறந்து விடுவதே இந்நூற்றாண்டில் நாம் செய்ய வேண்டியது.