பாரதம் ஒரு ‘நகை’ மாடம்
மாயமான்
அவசரம் அவசரமாகப் பிச்சைக்காரரைத் தற்காலிகமாக வெளியேற்றிவிட்டு வேலிகளுக்குக் காவி கட்டி, வீதிகளுக்குச் சந்தனம் குங்குமம் தடவி ஒருவாறு G20 மாநாட்டை நடத்தி முடித்த பாரத பிதா மோடிக்கு ட்றூடோவின் கண் பட்டுவிட்டதோ என்னவோ ‘பாரதர்கள் பாரதர்கள் தான்’ என்று உலக அரங்குகளில் எள்ளி நகையாடுமளவுக்கு காரியங்கள் நடக்கின்றன.
கனடாவுக்கும் பாரதத்துக்கும் கொஞ்சக் காலமாகச் சரியேயில்லை. அதற்கு முழு முதலும் ஒரே காரணமும் காளிஸ்தான் விவகாரம். சென்ற தடவை ட்றூடோ குடும்பத்துடன் போனபோது காளிஸ்தானிகள் ட்றூடோ குடும்பத்துக்கே ஆடைகளை மாற்றி அலங்காரம் செய்தது மட்டுமல்லாது குர்துவாரவுக்கும் அழைத்துச் சென்று ஆரவாரம் செய்திருந்தார்கள். அப்போது முன்னாள் பட்டத்து ராணி, திருமதி ட்றூடோவுக்கு அருகில் நின்ற ஒருவர் பாரதத்தின் பயங்கரவாதப் பட்டியலில் உள்ள ஒருவர் என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு ட்றூடோ முகத்தில் கரி பூசப்பட்டது (கரி பூசுவது அவருக்குக் கைவந்த கலை). ட்றூடோ முதலில் ஆட்சி அமைக்கும்போதும் அவரது அரசாங்கத்தில் தேவைக்குமதிகமான ‘காளிஸ்தானிகள்’ அங்கம் வகித்தனர். இதுவெல்லாம் பாரத பிதாவுக்கு சொல்லக்கூடாத இடத்தில் மிளகாய் வைத்த மாதிரி. எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் இந்த மிளகாயை மாற்றி வைப்பதற்கு என்று கனவு கண்டுகொண்டிருந்த பா.பி.விற்கு G20 மாநாடு ஒரு அரிய சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தது.
ட்றூடோ பாரத மண்ணில் இறங்கியதுமே பாரத பக்தர்களின் சாவிகள் முறுக்கப்பட்ட நிலையில் ட்றூடோவுக்கு எப்படி ஆப்பு வைப்பது என றூம்கள் போட்டு யோசித்திருக்க வேண்டும். எத்தனை காரியங்கள் நடைபெற்றனவோ தெரியாது கமெராவுக்குள் மாட்டிய சிலது மட்டும் வெளிவந்தன. ட்றூடோவின் கையை இறுகப்பிடித்த பா.பி. யின் கையை ட்றூடோ உதறிவிட்டுக் கையை மீட்டுக்கொண்டதாக ஒரு செய்தி வந்தது. இன்று ரொறோண்டோவின் அதி வலிமை கொண்ட வலதுசாரி மஞ்சள் பத்திரிகையான ‘சன்’ னில் வந்த ஒரு செய்தி ட்றூடோவைக் கொண்டு சென்ற விமானத்தை பாரதர்கள் வேண்டுமென்றே பழுதாக்கி விட்டார்களென ‘உள் விடயங்கள் தெரிந்த ஒரு பாரத விளம்பி’ பகர்ந்திருப்பதாக வந்திருந்தது. பாரதர்களின் குணாதிசயங்களைத் தெரிந்தவர்களுக்கு இது ஆச்சரியத்தை அளிக்காது. அதே வேளை ட்றூடோவுக்குப் பாடம் படிப்பிக்கவென நிறையப் பாரதர்கள் தயாராகவிருக்கும்போது எதுவும் நடப்பதற்கான சாத்தியமும் இருக்கிறது.
சர்வதேச அரங்குகளில் பா.பி. யுக்கும், பொதுவாகப் பாரதர்களுக்கும் இது நல்ல காலமில்லை. வெள்ளையர்கள் எங்கு வாழ்ந்தாலும் காந்தியை ‘அரை நிர்வாணப் பக்கிரி’ என்று நக்கலடித்த வின்ஸ்டன் சேர்ச்சிலின் மனநிலையுடன் தான் பாரதர்களை இப்போதும் பார்க்கிறார்கள். “ட்றூடோ எப்படியானவராக இருந்தாலும் அதைச் சொல்ல நீ யார்” என்பதுவே அவர்களது வாதம். எனவே இந்த விடயத்தில் பாரதர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பதே நல்லது. நியூ யோர்க்கில் இன்று வெளியுறவு அமைச்சர் ஜெயஷங்கர் அதையேதான் செய்திருக்கிறார். “ஆதாரங்கள் இருந்தால் (நிஜார் கொலைக்கு) அதை நாங்கள் பரிசீலிக்கத் தயார்” என்று அவர் கூறியது ஆதாரம் வெளியே வரப்போகிறது என்பதற்கான அறிகுறியெனவே பார்க்கலாம்.
இதைவிட கனடாவோ காளிஸ்தானோ சம்பந்தமில்லாத இன்னுமொரு செய்தியும் பாரதத்தை ஒரு ‘நகை’ மாடமாக்கியிருக்கிறது. டெல்ஹி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்று மாநில விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஒரு சுவாரஸ்யமான நகைப்புக்குரிய சம்பவம் இடம் பெற்றிருக்கிறது. 100 மீட்டர் ஓட்டப்போட்டி நடைபெற ஆயத்தமாகும்போது பல போட்டியாளர்கள் சோம்பல் முறித்துக்கொண்டு ஓடத் தயாராகும் நிலையில் விளையாட்டு வீரர்கள் / வீராங்கனைகள் புஷ்டி வஸ்த்துக்களைப் பாவித்திருக்கிறார்களா எனப் பரிசோதிக்கும் குழு மைதானத்திற்கு வந்திருக்கிறது. இதைப் பார்த்த வீரர்களில் ஒருவரைத் தவிர மற்றையோர் மைதானத்தை விட்டே ஓடிவிட்டார்கள். எஞ்சியிருந்த வீராங்கனை ஓட்டத்தைத் தொடர்ந்து வெற்றிவாகைசூடினாலும் முடியுமிடத்தில் நிற்காது ஓடிக் கூட்டத்திற்குள் மறைந்துவிட்டார். பரிசோதக அதிகாரிகள் இவரை ஓடிப்பிடிக்க வேண்டியதாகிவிட்டது. மொத்தத்தில் அனைவருமே புஷ்டி வஸ்து எடுத்திருக்கிறார்கள் (அதிகாரிகளைப் பற்றித் தெரியாது). மைதானத்தில் அமைந்திருக்கும் மலசலகூடத்தில் இருந்து பாவித்த ஊசிகள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் 100 மீட்டர் ஓட்டத்தில் மட்டுமல்ல வேறு பல ஓட்டப் போட்டிகளிலும் நடைபெற்றிருக்கிறது. தனது 30 வருட அனுபவத்தில், ஒரே ஒருவர் போட்டியில் பங்குபற்றியமை இதுவே முதல் தடவை என ஒரு விளையாட்டு அதிகாரி கூறியிருக்கிறாராம்.
இந்த இலட்சணத்தில் சென்ற மாதம் பாரதர்களுக்குப் பெருமை தேடித்தந்த சந்திராயன்-3 நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக அலறத் தொடங்கியிருக்கிறது பாரதம். யாருமே போகாத சந்திரனின் தென் துருவத்தில் வெற்றிகரமாகக் கால்பதித்த இஸ்ரோவின் சந்திராயன் – 3 இன் விக்ரம் மற்றும் பிரக்ஜன் அங்கு இரவாகிவிட்டதால் தூங்கிவிட்டதாகவும் செப்டம்பர் 22ம் திகதி சூரியன் உதித்ததும் அவை விழித்துக்கொள்ளுமென விஞ்ஞானிகள் நம்பியிருந்ததாகவும் ஆனால் அவை இதுவரை விழித்துக்கொள்ளாமை பாரத புத்திரர்களுக்குக் கவலையளிப்பதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரோ குழுவில் காளிஸ்தானி விஞ்ஞானி எவரும் இருப்பதாக செய்தி அச்சுக்குப் போகும்வரை தெரியவில்லை. ஆனால் சந்திராயன்-4 இல் அனுப்பப்படும் றோவருக்கு கும்பகர்ணன் எனப் பெயரிட்டால் என்ன என இலங்கை மண்வெளி ஆராய்ச்சி நிலையம் கேட்கவுள்ளதாம்.
சூரிய ஒளி படாத சந்திரனின் தென்துருவத்தில் வெப்பநிலை -200 பாகை செல்சியஸ் வரை செல்லுமெனவும் இவ்வெப்பநிலையில் இந்த றோவரில் பொருத்தப்பட்டிருக்கும் எலெக்ட்றோனிக் கருவிகள் செயற்படாமற் போயிருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் சந்தேகிக்கிறார்கள் எனக்கூறப்படுகிறது. ஆனாலும் விக்ரம் தரையிறங்கிய சிவசக்தி முனையில் தேனீர்க்கடை போட்டிருக்கும் மலையாளியிடம் ஏன் உதவி கேட்கவில்லை எனக் கேட்டு நடிகர் பிரகாஷ் இஸ்ரோவிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார் எனவும் அறியப்படுகிறது.
பி.கு: இங்கு பாரதர்கள் என்று நான் குறிப்பிட்டது வட பாரதர்களை. திராவிடர்கள் கோபிக்கத் தேவையிலை…