பாம்புகளின் ‘காதலர் தினம்’

Spread the love
மாயமான்

வசந்தமென்றால் மன்மதனுக்குத் திருவிழா தான். பெப்ரவரி 14 அன்று உலக வலம் வந்து களைத்துப்போன மன்மதன் தன் காதலம்புகளை இந்த வாரம் புளோறிடா ஏரிகளின் மீது செலுத்தியிருக்கிறானாம் என்கிறது ஒரு ஆங்கில சஞ்சிகை.

புளோறிடாவில் நூற்றுக்கணக்கான நன்நீர் ஏரிகள் உள்ளன. அது முன்னர் ஒரு சதுப்பு நிலமெனவும் அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகளுக்கு அது ஒரு வேட்டை நிலமெனவும் கதைகளுண்டு.

தற்போது அது பணக்காரரின் கேளிக்கை நிலமாக இருப்பினும் அதன் பல்லாயிர ஆண்டுகளுக்கு உரிமையான பாம்புகளுக்கும் அது இப்போதும் கேளிக்கை நிலம் தான். அதுவும் பெப்ரவரி மாதம் பாம்புகளுக்கும் காதலர் மாதம் தான்.

இந்த மாதத்தில் அச் சதுப்பு நிலங்களில் மரங்களினடியில் வாழும் நீர்ப்பாம்புகள் வெளியே வந்து காதல் கேளிக்கை செய்யத் தொடங்கி விடுகின்றன.

இப் பாம்புகள் மனிதரைத் தீண்டுபவையல்ல. விஷமில்லாதவை. வருடாவருடம் அவை இம் மாதத்தில் வெளியே வந்து பகிரங்கமாகக் காதல் கேளிக்கை புரிகின்றன.

இந்த வருடம் இப்படியொரு ஏரிக்கரையில் (ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே என்று அவை பாடினாலும் யாருக்குப் புரியப்போகிறது?) பல நூற்றுக்கணக்கான பாம்புகள் லீலா விநோதம் செய்துகொண்டிருந்ததைக் கண்ட மக்கள் அவற்றைத் (நம்மூரில் போல கொக்கித்தடிகளை அவர்கள் தேடவில்லை) தம் பாட்டில் அனுபவிக்க விட்டுவிட்டு, அக் கண்கொள்ளாக் காட்சியை வேடிக்கை பார்க்காமல் ஒதுங்கிவிட்டனராம். அதிகாரிகளும் அவற்றின் துணிச்சலைப் பாராட்டி (விருது கொடுக்காமல்) வேலி கட்டி மக்களை அப்புறப்படுத்தி உதவி செய்தது மட்டுமல்ல முகநூலின் மூலம் பிரசித்தம் போட்டு ஊருக்குள்ளும் அறிவித்துவிட்டார்களாம். என்னே பாம்புபகாரம்?

அப் பாம்புகள் அமெரிக்காவில் பிறப்பதற்குப் புண்ணியம் செய்தவையாயிருக்க வேண்டும்!

பாம்புகளின் இந்த வருடாந்த உற்சவம் பற்றி பூங்கா திணைக்கள அதிகாரிகள் விடுத்த முகநூற் செய்தியில் “It appears the snakes have congregated for mating. They are nonvenomous and generally not aggressive as long as people do not disturb them. Once the mating is over, they should go their separate ways” என வம்பு வார்த்தைகளில் அறிவித்திருந்தது இன்னும் விசேடம்.

பொதுவாக வேலை வெட்டியற்ற இப் பாம்புகள் நீரைக் குடிக்கவென வளைந்திருக்கும் மரக்கிளைகளில் சுற்றிக்கொண்டு ஒய்யாரமாகப் பஒழுதைக் கழிப்பது வழக்கம். வசந்தம் வந்ததும் அவை தமது உற்சவத்தைப் பிரமாண்டமாகக் கொண்டாடுகின்றன என புளோறிடாப் பல்கலைக்கழகத்தின் பாம்பியல் வழிகாட்டி கூறுகிறது.

இதன் பெறு பேறாக, கோடை காலம் வந்ததும் குட்டிகள் கரைதேடி வருகின்றன எனவும், ஒரு தாய் ஒரு தடவையில் குறைந்தது 60 குட்டிகளைப் பிரசவிக்கும் எனவும், ஒவ்வொன்றும் 7 முதல் 11 அங்குலம் நீளமாக இருக்குமெனவும் அவ் வழிகாட்டி கூறுகிறது.

இப் பாம்புகள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றதால் துரும்பர் மதில் கட்டமாட்டாரென்று எதிர்பார்ப்பதாக அவ் வழிகாட்டி சொல்லவில்லை

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>