பாதுகாப்பு காரணங்களுக்காக காணிகளை அபகரிக்க அரசுக்கு அருகதையுண்டு – யாழ்ப்பாணத்தில் அனுர
வடமாகாணத்தில் இராணுவத்தின் வசம் இருக்கும் மக்களது காணிகளை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதே வேளை பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தித் தேவைகளுக்காக நாட்டின் எந்தவொரு பகுதியிலும் காணிகளை அபகரிக்கும் உரிமை அரசுக்கு உண்டு என யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா தெஹ்ரிவித்துள்ளார். அப்படி அபகரிக்கும் பட்சத்தில் அதற்கு மாற்றீடாக வேறு காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
தகவலுக்கு: 2009 மே 18 இல் போர் முடிவுக்கு வந்த போது இராணுவத்தின் கையில் 118,253 ஏக்கர் காணி இருந்தது. 2009 – 2015 இடைப்பட்ட காலத்தில் 41,659 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. மீண்டும் 2015 2020 காலப் பகுதியில் (நல்லாட்சி காலத்தில்) 47,604 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. அதற்குப் பிந்திய காலத்தில் 500 ஏக்கருக்கும் குறைவான காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 28,490 ஏக்கர் காணி இராணுவத்தின் பிடியில் உள்ளது. இதில் 3,250 ஏக்கர் அளவில் வலிகாமம் வடக்கில் உள்ளது. – நன்றி: நக்கீரன் தங்கவேலு
இதே வேளை, யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகை இப்பிரதேச மக்களின் தேவைக்காக ஒப்படைக்கப்படும் எனவும் அதற்கான பிரேரணைகளை முன்வைக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அவர் கேட்டுள்ளார். போரினால் இடம் பெயர்க்கப்பட்ட மக்கள் இன்னமும் வடமாகாணத்தில் தங்கியிருக்கிறார்கள் என்னும் செய்தி குறித்து அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அவர் பணித்துள்ளார்.
அரச திணைக்களங்களில் 30,000 வெற்றிடங்கள் இருப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் தலைமை தாங்கும் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இவை முறையான ஆட்சேர்ப்பு செயற்பாடுகள் மூலம் நிரப்பப்படும் எனவும் அப்போது பட்டதாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொலிஸ் திணைக்களத்தில் வரும் வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர்கள் விண்ணப்பிக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அரச திணைக்கள ஆட்சேர்ப்பில் அரசியல் தலையீடுகள் இருக்க மாட்டாது என்பதோடு இப்பிரதேசத்தில் பொதுச்சேவைத் திணைக்களங்கள் பலப்படுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த ஒரு சீரிய திட்டத்தை செயற்படுத்தவுள்ளதாகவும் இதில் தனியார் பேருந்து ஓட்டுனர்களையும் இலங்கை போக்குவரத்துச் சபையையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சேவையை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது இப்பிரதேசத்திற்கு வரும் ரயில் சேவைகளை அதிகரிக்கவும் திட்டங்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தொழில்துறை வலயங்கள்
வட மாகாணத்தில் வாழும் மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளுக்காக பரந்தன், மாங்குளம், காங்கேசந்துறை ஆகிய இடங்களில் தொழில்துறை வலயங்களை நிர்மாணிக்க திட்டங்கள் உள்ளதாகவும் இத் திட்டங்களில் புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய முன்வரவேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். அரசு தனது அபிவிருத்தி திட்டங்களில் வடமாகானத்திற்கு முன்னுரிமை கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் சுமார் 2.5 மில்லியன் சுற்றுலாவாசிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் எனவும் வடமாகாணத்திலுள்ள சுற்றுலாத் தலங்களை அரசு இனங்கண்டு அவற்றைப் பிரபலமாக்க முன்வருமெனவும், மீன்பிடி விவகாரங்களில் இப்பிரதேசத்தில் தொடர்ந்துவரும் பிணக்குகளைத் தீர்க்க ராஜதந்திர ரீதியாக அதியுச்ச முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
குடி நீர்
இந்நாட்டிலேயே அதி குறைந்த குடிநீரைப் பாவிக்கும் பிரதேசமாக வட மாகாணம் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் இதன் காரணமாக நடைமுறையிலிருக்கும் குடி நீர் வழங்கும் திட்டத்தை துரிதப்படுத்துதல் மிகவும் அவசியமானதொன்று எனவும் புதிய நீர் வழங்கல் திட்டங்களுக்கென எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கல்வி, சுகாதார்ம், போக்குவரத்து, விவசாயம் மற்றும் பொதுச்சேவைத் துறைகளில் வட மாகாண மக்கள் பாரிய சவால்களை எதிர்கொள்கிறார்கள் எனவும் அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரச இயந்திரமும் மாகாணப் பொறிமுறைகளும் ஒன்றிணைந்து இயங்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
