Science & Technology

பாதுகாப்பு காமராக் கண்களில் அகப்படாமல் தப்பும் காந்தர்வ வித்தை – சீன மாணவர்கள் கண்டுபிடிப்பு!

    ‘செயற்கை விவேகத்’ தொழில்நுட்பத்தை உபயோகித்து மனிதர்களின் நடமாட்டங்களை அவதானிக்கும் பாதுகாப்பு கமராக்களின் ‘கண்களில் மண்ணைத்தூவும்’ முயற்சியில் வெற்றிகண்டிருக்கிறார்கள் சில சீன மாணவர்கள். ‘இன்விஸ்டிஃபென்ஸ்’ (InvisDefense) என்ற பெயரில் இவர்கள் தயாரித்திருக்கும் மேலாடையை அணியும்போது அது காமராக்களின் கண்களைக் கூசவைத்துவிடுகிறது எனக் கூறப்படுகிறது. மேலும் செழுமைப்படுத்தப்பட்ட நிலையில் இத் தொழில்நுட்பம் மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தை அனுபவிக்கும் சீனா மற்றும் பல தென்னாசிய நாடுகளில் அரச இயந்திரங்களின் கண்களில் இலகுவாக மண்ணைத்தூவும் சாத்தியங்கள் உண்டு எனத் தொழில்நுட்ப விண்ணர்கள் தெரிவிக்கிறார்கள்.

    செயற்கை விவேகம் (Artificial Intelligence (AI)) என்னும் தொழில்நுட்பத்தினால் இயக்கப்படும் பாதுகாப்புக் காமராக்கள் முக, உடல் அம்சங்கள், நடை, உடை பாவனைகள் முதலியவற்றைக் கொண்டு மனிதர்களின் நடமாட்டங்களைத் துல்லியமாக இனம்காணும் திறமைகளைக் கொண்டுள்ளன. இத்தகவல்கள் உடனுக்குடன் பரிவர்த்தனை செய்யப்படும்போது தவறான நோக்கங்களைக் கொண்டு செயற்படுபவர்களை அரச பாதுகாப்பு நிர்வாகம் உடனடியாகப் பிடித்துவிடுகிறது.

    ஆனால் சீன மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட் இக் காந்தர்வ மேலாடை பகலில் காமராக்களை முற்றாகக் குருட்டாக்கியும் இரவில் அதிசயமான வெப்ப அலைகளை உருவாக்குவதன் மூலம் காமராக்களைக் குழப்பிவிட்டும் தஹ்மது சாகசங்களை நிகழ்த்துகின்றன எனக் கூறப்படுகிறது.

    சீனாவின் ஹுவாவே தொழில்நுட்ப நிறுவனத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட சீன உயர்கல்வி புதுமைப் பயிற்சிப் போட்டியில் (Innovation and Practice Competition) முதலிடத்தைப் பெற்ற இக்கண்டுபிடிப்பு அரச நிர்வாகத்துக்குத் தலையிடியைக் கொடுக்கலாம் எனவும் இதனால் இக்கண்டுபிடிப்புக்குத் தடை விதிக்கப்பட்டோ அல்லது தமது காமராக்களின் தொழில்நுட்பத்தை மாற்றியமைப்பதற்கோ அரசுகள் முனையலாம் எனவும் விண்ணர்கள் தெரிவித்துள்ளனர்.

    போர்க்களங்களில் ரோபோக்களைப் பாவிக்கும்போதும், ட்றோண்களைப் பாவிக்கும்போதும் அவற்றின் ‘கண்கள்’ செயற்கை விவேகத் தொழில்நுட்பத்தைப் பாவித்தே தமது சுடு குறிகளைத் தீர்மானிக்கின்றன. இவ்வகையான ஆடைகளால் அச் சுடுகுறிகள் மூடப்பட்டால் அவற்றைப் பாதுகாத்துக்கொள்ள முடியுமென இம் மாணவர் குழு தெரிவித்துள்ளது.

    இவ்வாடையின் விலை? வெறும் 100 கனடியன் டொலர்கள் (CNY 500) மட்டுமே. (Image: South China Morning Post)