பாதுகாப்பு அமைச்சு மீண்டும் ஜனாதிபதியிடம் | தனி நபர் மசோதா வழிசெய்கிறது!

Spread the love

இலங்கை: ஜனவரி 1, 2020

கோதாபய படைத் தலைவர்களுடன்

பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருக்கும் தனியார் சட்ட வரைவின் மூலம் 19 வது திருத்தம் ஜனாதிபதி ராஜபஜபக்சவிடமிருந்து பறித்த அமைச்சுப்பதவிகளை அவர் திருப்பி எடுக்கப்போகிறார். இத் தனியார் சட்ட வரைவு அரசியலமைப்புச் சட்டத்தின் 22 வது திருத்தம் என வர்த்தமானி மூலம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

19 வது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி எந்தவித அமைச்சுப் பதவிகளையும் வைத்திருக்க முடியாது. அது துலக்கமாக இல்லை எனவும் 22 வது திருத்தம் அதைத் தெளிவுபடுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது எனவும் ஜனாதிபதி தரப்பு தெரிவிக்கிறது.

19 வது திருத்தத்தை மீளப்பெற்று ஜனாதிப்தி இழந்த நிறைவேற்று அதிகாரத்தை மீளப் பெற வேண்டுமென்பதே ஜனாதிபதியின் குறி. ஆனால் அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுவதால் ஏப்ரல் / மே மாதமளவில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் மூலம் அதைப் பெறலாமென்ற நம்பிக்கையுடன் ஜனாதிபதி இருப்பதாகத் தெரிகிறது.

இதே வேளை, தற்போது பாதுகாப்பு அமைச்சுப் பதவி வெற்ரிடமாகவே உள்ளது. இந்த மிகவும் பலமான அமைச்சு தனக்கே கிடைக்குமென மஹிந்த ராஜபக்ச ஆரம்பத்தில் அறிவித்திருந்தாராயினும் கோதாபய அதை அவருக்குக் கொடுக்காமல் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி கமால் குண்ரட்ணவிடம் அப் பொறுப்பைக் கொடுத்திருந்தார். அதே வேளை பாதுகாப்பு அமைச்சின் ராஜாங்க அமைச்சராக சமால் ராஜபக்ச செயற்பட்டு வருகிறார். இது கூட அரசியலமைப்புக்கு விரோதாமானது எனக் கூறப்படுகிறது.

தற்போது பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச சமர்ப்பிக்கவிருக்கும் சட்ட வரைவு பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டால் அது அரசியலமைப்பின் 22 வது திருத்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்படும். இதன் பிறகு ஜனாதிபதி எத்தனை அமைச்சுகளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

அரசியலமைப்பின் 43 வது கட்டளையின் பிரகாரம், ” ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சையும் அத்தோடு வேறெந்த அமைச்சையும் வைத்திருக்கலாம்” எனக் கூறப்படுகிறது.

“2003 இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட சகல அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட வரையறையற்ற, மறுபரிசீலனை செய்யப்பட முடியாத (plenary power) இலங்கை ஜனாதிபதியின் அதிகாரத்தினுள் அடக்கம் பெறும். அந்த வகையில் ஜனாதிபதி ஒருவராலேயே பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்க முடியும்” என விஜேயதாச தெரிவித்தார்.

“அரசியலமைப்பில் எந்தவிதமான சந்தேகங்களும் இருக்க முடியாது. 19 வது திருத்தம் நிறையக் குழப்பங்களை உருவாக்கியிருந்தது. எனவே தான் நான் தனியார் சட்ட வரைவு மூலம் அதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

19 வது திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன் அப்போதய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சுடன் சேர்த்து மேலும் இரண்டு அமைச்சுக்களைத் தன்னிடம் வைத்திருந்தார். அவரது பதவி துறப்புடன் 19 வது திருத்தம் முற்றாக நடைமுறைக்கு வந்தபோது புதிய ஜனாதிபதியினால் எந்தவித அமைச்சுக்களையும் வைத்திருக்க முடியவில்லை.

காவற்துறை, உளவுச் சேவை, குடிவரவும் குடியகல்வும், ஆட் பதிவு, தேசிய போதை வஸ்துக் கட்டுப்பாடு, தொலைத் தொடர்பு அதிகாரம் ஆகியன உட்பட்ட 31 அரச நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையில் இயங்கும்.

பா.உ. ராஜபக்சவினால் கொண்டுவரப்படும் 22 வது திருத்தம் 19 வது திருத்தத்தின்போது இழக்கப்பட்ட ஜனாதிபதியின் சில அதிகாரங்களை மீளக்கொண்டுவருவதற்கும் முனைகிறது.

இவற்றிலொன்று, அரசியல் நிர்ணயசபைக்குப் போகாமல், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்டோர்னி ஜெனெரல், ஆடிட்டர் ஜெனெரல், ஒம்பட்ஸ்மான் ஆகியோரை ஜனாதிபதியே நியமிக்கும் அதிகாரம். நீதிபதிகளை நியமைக்கும்போது நீதிச் சேவை ஆணயத்துடன் ஆலோசித்தும், பொதுப் பணிகள் நியமனத்தின் போது பொதுப்பணிகள் சேவைகள் ஆணையத்தின் ஆலோசனைகளுக்கிணங்கவும் அவர் அவற்றைச் செய்ய வேண்டும்.

தற்போது அரசியல் நிர்ணய சபையின் உத்தரவுடன் தான் இன் நியமனங்கள் செய்யப்படுகின்றன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>