EntertainmentIndia

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை, நிகழ்ச்சித் தொகுப்பாளர் VJ சித்ரா சென்னை ஓட்டல் அறையில் மரணம்!


பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமாகிய நடிகையும், வசூல் வேட்டை போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளருமாகிய 29 வயதுடைய, சித்ரா சென்னை நஸ்ராத்பேட்டையிலுள்ள ஓட்டலொன்றில் இறந்திருக்கக் காணப்பட்டார். அவரது மரணம் தற்கொலையெனச் சந்தேகிக்கப்படுகிறது.

நடிகை சித்ரா

பொலிசாரின் அறிக்கைப்படி, சித்ரா, நிகழ்ச்சிப் படப்பிடிப்பு ஒன்றை முடித்துவிட்டு இன்று (புதன்) அதிகாலை 1:00 மணி போல் ஓட்டல் ஒன்றில் அறையெடுத்துத் தங்கியதாகவும் பின்னர் அதிகாலை 3:30 மணியளவில் ஓட்டல் மனேஜர் பொலிஸை அழைத்து சித்ராவின் மரணம் பற்றித் தெரிவித்ததாகவும் தெரிய வருகிறது.

சித்ராவின் குடும்பம் சென்னை கோட்டூர்புரத்தில் வாழ்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது.

அவரது மரணம் பற்றிய அறிக்கை வருவதற்கு சில மணித்தியாலங்களின் முன்னர் புதிய தமிழ்ப் படமொன்றில் நடிப்பதற்கான ஒப்பந்தமொன்றைச் செய்திருந்ததாகவும் அதுபற்றிய செய்தியை அவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்திருந்ததாகவும் தெரியவருகிறது.



மக்கள் ரீ.வி., ஜயா ரீ.வி., ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளின் அறிவிப்பாளராகவும், பல தொலைக்காட்சி நாடகங்களில் நடிகையாகவும் அவர் பணிபுரிந்துள்ளார். சித்ராவுக்குப் புகழைத் தேடித்தந்த சின்னப் பாப்பா பெரிய பாப்பா, சன் ரீ.வி. யில் 2014 முதல் 2018 வரை காண்பிக்கப்பட்டது. சரவணன் மீனாட்சி (விஜய் ரீ.வி.), டார்லிங் டார்லிங் (ஜீ தமிழ் 2016-2017), வேலுநாச்சி (ஜீ தமிழ்) போன்ற நிகழ்ச்சிகளில் முக்கிய பாத்திரங்களில் நடித்தும் விஜய் ரீ.வி. யின் வசூல் வேட்டை (2019) நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணிபுரிந்திருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விஜய் ரீ.வி.யில் 500 காட்சிகளுக்கு மேல் காண்பிக்கப்பட்டது. தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான இத் தொடர் வேறு பல மொழிகளாலும் தழுவப்பட்டிருந்தது. தெலுங்கில் வந்தினம்மா, கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ், மராத்தியில் சஹாகுட்டும் சஹாபரிவார், வங்காளத்தில் பக்கோலொக்கி, மலையாளத்தில் சாந்த்வனம், ஹிந்தியில் குப்தா சகோதரர்கள் ஆகிய பெயர்களில் தழுவப்பட்டிருந்தது.

நடிகை சித்ராவின் மரண விசாரணை இன்று (புதன்) மரணம் நடைபெற்ற ஓட்டலில் நடைபெறுகிறது என்றும் ஓட்டல் பணியாளர்கள் பலர் சிதராவிந் மரணம் தொடர்பாக விசாரிக்கப்படுகிறார்கள் என்றும் அறியப்படுகிறது.