பாடகி வாணி ஜெயராம் கொலை செய்யப்பட்டாரா? – காவல்துறை விசாரணை

நேற்று (பெப் 04) பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் அவரது வீட்டில் அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி வழக்கொன்றைப் பதிவு செய்துள்ளது. இதன் பிரகாரம் ஜெயராமின் உடல் மீது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே மரணத்திற்கான காரணம் என்னவெனத் தீர்மானிக்கப்படுமென காவல்துறை அறிவித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை, வாணி ஜெயராம் அவரது வீட்டில் படுக்கை அறையில் இறந்துகிடக்கக் காணப்பட்டார் எனவும் அவரது நெற்றியில் காயத்துக்கான அடையாளங்கள் இருந்தன எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜெயராமின் வீட்டில் பணிகள் புரியும் மலர்க்கொடி என்னும் பெண் காலை 11 மணிபோல் ஜெயராமின் வீட்டில் கதவுக்கான அழைப்பு மணியைப் பலதடவை அழுத்தியும் கதவு திறக்கப்படாமையால் வாணியின் சகோதரி உமாவுக்கு தகவல் அனுப்பினார் என்றும் பின்னர் இருவருமாக உமாவிடம் இருந்த திறப்பின் மூலம் வீட்டைத் திறந்து பார்த்தபோது படுக்கையறையில் அவரது இறந்த உடல் காணப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது. தற்போது அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரச மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

2018 இல் வாணியின் கணவர் ஜெயராம் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவர் நுங்கம்பாக்கம் ஹடோஸ் தெருவில் இருக்கும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரது நெற்றியில் இருந்து இரத்தம் வழிந்திருந்த அடையாளம் இருந்தது எனவும் கூறப்படுகிறது. மரணம் இரவில் நடைபெற்ரிருக்கலாம் எனவும் ஆனால் அது நடைபெற்ற நேரத்தை பிரேத பரிசோதனை மூலமே அறிய முடியும் என காவல் துறையினர் கூறியுள்ளனர்.

வாணி ஜெயராம் 1945 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் பிறந்தார். 1974 இல் வெளியான தீர்க்க சுமங்கலி என்னும் படத்தில் அவர் பாடிய ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ என்னும் பாடல் மூலம் அவர் பிரபலமாகியிருந்தார். கவிஞர் வாலி எழுதிய இப்பாடலுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். 1975 இல் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் பாடியமைக்காக ‘சிறந்த பெண் பாடகி’ என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு படமான சங்கராபரணம் படத்தில் பாடியமைக்காகவும் விருது பெற்றிருந்தார். அதே வேளை தெலுங்கு படமான சுவாதி கிரணம் என்ற படத்தில் வரும் ‘அனத்தினீயார ஹரா’ பாடலைப் பாடியமைக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், குஜராத், ஒடிஷா ஆகிய மாநிலங்கள் வாணி ஜெயராமைக் கெளரவித்து விருதுகளை வழங்கியிருக்கின்றன.