பாடகி ‘பொம்பே’ ஜயஷிறி லண்டன் மருத்துவமனையில் அனுமதி

மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணம்

கர்நாடக சங்கீதம் மற்றும் திரையிசைப் பாடல்களில் பிரபலமான இந்திய இசைக் கலைஞர் ‘பொம்பே’ ஜயஷிறி இசை நிகழ்ச்சிகளுக்காக லண்டனுக்குச் சென்றிருந்த வேளை திடீரென மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு (aneurysm) காரணமாக அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்தன் பின்னர் தேறி வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் மயிர்த்துளைக் குழாய் நாடிகளில் அமுக்கம் அதிகரிக்கும்போது அது பலூன் போல விரிவடைந்து இரத்தக் கசிவு ஏற்பட்டோ அல்லது வெடித்து விடுவதோ நடைபெறலாம். இப்படியான வேளைகளில் மூளையின் குறிப்பிட்ட பகுதியின் கட்டுப்பாட்டிலுள்ள உறுப்புகள் செயலிழப்பதுண்டு. இதைப் பக்கவாதம் என அழைப்பார்கள். சிலவேளைகளில் இது உயிராபத்தை ஏற்படுத்தி விடுவதுமுண்டு. இக்குழாய் வெடிப்பதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டால் அதை அறுவைச்சிகிச்சையின் மூலம் செப்பனிட்டுவிடலாம். திடீரென ஏற்படும் தாங்கமுடியாத தலைவலி இரத்தக்கசிவின் அறிகுறி என மருத்துவர்கள் கூறுவார்கள்.

ஏறத்தாள 10 வருடங்களுக்குப் பிறகு ஜயஷிறி இசை நிகழ்ச்சிகள் செய்வதற்கென லண்டன் சென்றிருந்தார். அவருடைய நிகழ்ச்சியொன்று லிவர்பூலிலுள்ள துங் விழா மண்டபத்தில் மார்ச் 24 அன்று நடைபெறவிருந்தது.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடிவரும் ஜயஷிறி பிரபல சங்கீத வித்வான்கள் லால்குடி ஜயராமன், ரி.ஆர்.பாலமணி ஆகியோரின் மாணவியாவார். மின்னலே (2001) என்ற படத்தில் ஹரிஸ் ஜயராஜ் இசையமைப்பில் வரும் ‘வசீகரா’ பாடல் மூலம் இவரது சினிமா பிரசன்னம் பிரபலமானது. இதன் பின்னர் காக்கா காக்கா (2003) படத்தில் வரும் ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ என்ற பாடல் மூலம் மேலும் பிரபலமாகியிருந்தார். 2005 இல் வெளியான கஜினி படத்தில் வரும் ‘சுட்டு விழி’ பாடலுக்காக அவருக்கு தமிழ்நாடு மாநில அரச விருது வழங்கப்பட்டது. இதன் பின்னர் இந்தியாவின் நான்காவது அதி பெரிய தேசிய விருதான ‘பத்ம ஷிறி’ விருதும் வழங்கப்பட்டிருந்தது. சர்வதேச ரீதியில் Pi என்னும் ஆங்கிலப் படத்தில் வரும் தாலாட்டையும் இவரே பாடியிருந்தார். சென்னை மியூசிக் அக்கடெமியின் வருடாந்த விருது இவ்வருடம் தனக்கு வழங்கப்படவுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் அவர் அறிவித்திருந்தார்.

உடல் தேறியதும் அவர் தனது இசை நிகழ்ச்சிகளைத் தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.