Spread the love

அபிமான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை எனவும் தொடர்ந்தும் மருத்துவர்களின் நெருங்கிய கண்காணிப்பில் அவர் உள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கின்றது.

வியாழன், இந்திய நேரம் இரவு 8:30 மணிக்கு வெளியிடப்பட்ட மருத்துவமனை அறிக்கையின்படி அவர் இன்னும் சுவாசக் கருவியின் உதவியுடன், தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது. அவரது இரத்தம் வெளியில் எடுக்கப்பட்டு அதிலிருந்து காபனீர் ஒக்சைட் (Carbon dioxide)) அகற்றப்படும் அதே வேளை ஒக்சிசன் (Oxygen) சேர்க்கப்பட்டு மீண்டும் உடலில் ஏற்றப்படும் சிகிச்சை (Extracorporeal membrane oxygenation (ECMO)) நடைபெற்று வருகிறது என மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.

“எங்கள் பல்துறை விற்பன்னர்கள் இவ் விடயத்தில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் கலந்தாலோசித்து அவரது சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்கள்” என எம்.ஜி.எம் மருத்துவமனையின் உதவிப் பணிப்பாளர் டாக்டர் அநுராதா பாஸ்கரனின் கையெழுத்துடன் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பாடகரின் மகன் எஸ்.பி.சரணும் தனது இன்ஸ்ரகிராம் தளத்தின் மூலம் தந்தையாரின் உடல்நிலை பற்றி அடிக்கடி தகவல்களை தந்தையின் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறார். தந்தையாரின் உடல்நிலையில் எதுவித முன்னேற்றமும் இல்லை எனவும், தாம் நம்பிக்கையை இழக்காது பார்த்துக்கொண்டிருக்கிறோம் எனவும் ரசிகர்களின் பிரார்த்தனைகள் பலனளிக்குமெனத் தாம் நம்புவதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email