EntertainmentIndia

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தேறி வருகிறது. உயிராதார உபகரணங்கள் இன்னும் அகற்றப்படவில்லை.

ஆகஸ்ட் 15, 2020: கோவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகி, எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அபிமான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டாரென்றும், ஆனால் உயிராதார உபகரணங்கள் இன்னும் அகற்றப்படவில்லை எனவும் மருத்துவமனை அறிவித்திருக்கிறது.

கடந்த ஒரு வாரமாகச் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை நேற்று, (வெள்ளி) திடீரென்று மிக மோசமானதை அடுத்து அவர் தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு மாற்றப்பட்டு, உயிராதார உபகரணங்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.

ஒருவரது உடல் தேறும்வரை அவரது முக்கிய அங்கங்களை இயங்குநிலையில் வைத்திருக்க உயிராதார உபகரணங்கள் பொருத்தப்படுகின்றன. உடல் சீராகவும், சுயாதீனமாகவும் இயங்க முடியுமெனெ என மருத்துவர்கள் தீர்மானிக்கும்போதோ அல்லது அது இயலாதபோதோ இவ்வுபகரணங்கள் அகற்றப்படுகின்றன.

மருத்துவர்கள் தற்போது அவரது இரத்தத்தை வெளியில் எடுத்துச் சுத்திகரித்து மீண்டும் உடலுள் செலுத்தும் (extracorporeal membrane oxygenation (ECMO) treatment) சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹரிஸ் ஜெயராஜ், தேவி பிரசாத், தனுஷ், கீர்த்தி சுரேஷ் ஆகிய கலையுலகப் பிரபலங்கள் விரைவில் அவர் உடல்நலம் தேறவேண்டுமெனத் தமது பிரார்த்தனைகளையும் வேண்டுதல்களையும் தெரிவித்து வருகிறார்கள்.