பாக்கிஸ்தான் திருப்பித் தாக்கும் | இந்தியாவுக்கு பாக். பிரதமர் எச்சரிக்கை!
கடந்த வியாழனன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். பாக்கிஸ்தானைத் தளமாகக் கொண்டுள்ள ஜையிஷ்-ஈ-மொஹாமெட் என்ற தீவிரவாத இயக்கம் இத் தாக்குதலுக்கு உரிமை கோரியிருந்தது.
“ஆதாரங்கள் எதுவுமில்லாது பாக்கிஸ்தானைக் குற்றஞ்சாட்டுவதை நிறுத்துங்கள். பாக்கிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று இந்தியா நினைத்தால் பாக்கிஸ்தான் திருப்பித் தாக்கியாயாகும். காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை ஒன்றின் மூலமாக மட்டுமே தீர்த்துக் கொள்ளலாம்” என எச்சரிக்கை விடுத்தார் பாக்கிஸ்தான் பிரதமர்.
“இத் தாக்குதல் விடயமாக பாக்கிஸ்தான் தளமாக இருப்பது பற்றிய விசாரணைகளை மேற்கொள்ள இந்தியா விரும்பினால் அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்க பாக்கிஸ்தான் தயாராக இருக்கிறது. பாக்கிஸ்தான் ஒரு ஸ்திரமான நாடாக வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில் இப்படியான தாக்குதல் மூலம் அது எந்தவிதமான நன்மைகளை அடையப் போகிறது?” என்று அவர் கேள்வியெழுப்பினார்.

வியாழனன்று இந்தியப் படைகள் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் சம்பந்தப்பட்ட தற்கொலைதாரி அந்த பிரதேசத்தைச் சேர்ந்த காஷ்மீரி இளைஞர் என்றும் சமீப காலங்களில் அனேக இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைந்துள்ளார்கள் என்றும் அறியப்படுகிறது.
பாக்கிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. தான் ஜெயிஷ்-எ-மொஹாம்மெட் தளபதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது எனக் காஷ்மீரிலுள்ள இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரியான லெப்.ஜெனெறல் கே.ஜே.எஸ். டிலன் பாக்கிஸ்தானைக் குற்றம் சாட்டியிருந்தார். இருப்பினும் அதற்கான சான்றுகளை அவர் முன்வைக்கவில்லை.
“காஷ்மீரிலுள்ள தாய்மார்கள் அனைவரும் பயங்கரவாத இயக்கங்களில் சேர்ந்த தங்கள் பிள்ளைகளைச் சரணடைந்து விட்டு பொது வாழ்க்கைக்குத் திரும்பச் சொல்லுங்கள். அல்லாது போனால் துப்பாக்கி தூக்கிய அனைவரும் கொல்லப்படுவார்கள்” என எச்சரிக்கை விடுத்திருக்கிறார் இந்திய இராணுவ அதிகாரி.
மூலம்: பி.பி.சி.