NewsWorld

பாகிஸ்தான்: பிரதமர் இம்ரான் கான் பதவியை இழந்தார்

  • நாட்டின் 75 வருட கால வரலாற்றில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பிரதமர் பதவி இழப்பது இதுவே முதல் தடவை
  • இதுவரை எந்தவொரு பிரதமரும் முழுமையான 5-வருட பதவிக் காலத்தை முடித்ததில்லை

பாகிஸ்தான் கீழ்சபையில் நேற்று (ஏப்ரல் 09) நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்பின்போது 342 அங்கத்தவர்களைக் கொண்ட சபையில் எதிர்த்தரப்பினர் பெற்ற 174 வாக்குகள் மூலம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவரது பதவியிலிருந்து அகற்றப்பட்டார். துணை சபாநாயகர் தனது கட்சிக்கு எதிராக வாக்களித்தமையினாலேயே இது நிறைவேறியது.

இவ்வாக்கெடுப்பு நடைபெறுவதைத் தவிர்க்க கான் பின்னணியில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் எனவும் இவர் ஆட்சியில் அமர்வதற்கு காரணமாகவிருந்த பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் காலை வாரியதையடுத்து சபையில் கான் ஆதரவை இழந்திருந்தார் எனவும் கூறப்படுகிறது. ஆனாலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்காக சென்ற வாரம் கான் தனது ஆதரவுக் கட்சிகளுடன் சேர்ந்து கீழ் சபையைக் கலைத்திருந்தார். அக் கலைப்பு செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து நேற்று சபை மீண்டும் கூட்டப்பட்டது. அப்படியிருந்தும்கூட தமது பங்காளிகளுடன் பேரம் பேசுவதற்காக கானின் கட்சியைச் சேர்ந்த சபா நாயகர் அசாட் கைசார் சனியன்று மட்டும் மூன்று தடவைகள் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில் பாகிஸ்தானின் அதியுயர் அதிகாரம் கொண்ட இராணுவத்தின் தலைவர் ஜெனெரல் கமார் ஜாவிட் பாஜ்வா நேற்று பிரதமர் கானைச் சந்தித்து உரையாடிய பின்னர் கீழ்சபை வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.

கோவிட் பெருந்தொற்றினால் நாட்டின் பொருளாதாரம் நலிவுற்றிருந்ததும் அதை விரைவில் சீர்படுத்துவேன் என்பதோடு ஊழலற்ற அரசாங்கம் ஒன்றை ஏற்ப்டுத்துவேன் என வழங்கியிருந்த வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்றவில்லை என்பதும் எதிர்க் கட்சிகளினதும், சில பங்காளிக்கட்சிகளின் உறுப்பினர்களினதும் குற்றச்சாட்டு. ஆனால் இம்ரான் கானின் அமெரிக்க எதிர்ப்பு / சீன, ரஷ்ய சாய்வு நிலைப்பாடு காரணமாக அமெரிக்கா மேற்கொண்ட சதிமுயற்சியின் காரணமாகவே அவர் பதவி இறக்கப்பட்டதாக கானின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆதரவு நிலைப்பாட்டை கான் எடுத்திருந்ததும், அமெரிக்க ஆதரவு ஆட்சியாளரைத் தோற்கடித்து தலிபான் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு கான் துணையாக இருந்தார் என்பதும் அமெரிக்காவின் குற்றச்சாட்டாக இருந்தது. அமெரிக்க ஜனாதிபதி பைடன் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிரதமர் கானுடன் தொலைபேசியில்கூட உரையாட மறுத்தமை கானின் அமெரிக்க எதிர்ப்பை மேலும் தீவிரமாக்கியிருந்தது.

69 வயதுடைய கான், பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரராக இருந்தவர். லண்டனில் வாழ்ந்த அவர் யூதப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து அவர் மூலம் குழந்தைகளும் உண்டு. பின்னர் அவரிடமிருந்து விவாகரத்தைப் பெற்றுக்கொண்டு பாகிஸ்தானுக்கு மீண்டு அங்கு தனது அரசியல் பிரவேசத்தை மேற்கொண்டார். அங்கு பாகிஸ்தான் தெஹ்ரீக் ஈ-இன்சாஃப் (பாகிஸ்தான் நீதிக்கான இயக்கம்) என்னும் கட்சியை ஆரம்பித்து அவர் அரசியல் பணிகளை ஆரம்பித்தார். முதல் தடவை அவர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட போது ” எனது வாக்காளர்கள் இப்போதுதான் வளர்ந்து வருகிறார்கள்” எனத் தெரிவித்து இருந்தார். 2018 இல் அவரது கனவு நிறைவாகியது. அப்படியிருந்த்தும் இராணுவத்தினரின் ஆசியுடனேயே அவரால் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. பங்காளிக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு பாகிஸ்தானின் அரசியலில் இராணுவத்தின் பங்கு மிக மிக அவசியமானது. சென்ற வருடம் பாகிஸ்தானின் அதி வலிமையுள்ள இன்ரெர் ஸ்டேட் இன்ரெலிஜென்ஸ் சேர்விசெச் (ISI) என்ற உளவுப்பிரிவின் தலைவரது நியமனத்துக்கு எதிராக இம்ரான் கான் இருந்தார் எனவும் அதிலிருந்தே அவரது ஆட்சிக்காலம் தீர்மானிக்கப்பட்டுவிட்டது எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் காரணமாக அதே பங்காளிக் கட்சிகளின் ஆதரவைத் துண்டிக்க இராணுவம் பின்னணியில் செயற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அடுத்த பிரதமர்

இம்ரான் கானின் பதவியகற்றலைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷரிஃப் பிரதமராக வராலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இவர் முன்னர் பிரதமராகவிருந்த நவாப் ஷரீஃபின் சகோதரராவார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இதற்கான வாக்கெடுப்பைக் கீழ் சபையில் நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என கானின் கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் காய்ஸர் உறுதியளித்துள்ளார். அங்கத்தவர்களைத் தேசிய அவையில் வைத்திருக்கும் எந்தவொரு கட்சியும் தமது அங்கத்தவர்களில் ஒருவரைப் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களாக நிறுத்த முடியும்.

புதிய பிரதமர் பதவியேற்றதும் தற்போதைய பாராளுமன்றம் ஆகஸ்ட் 2023 வரை தொடர்ந்து இயங்கவோ அல்லது அதற்கு முன்ன்ரே பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுப் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தவோ அதிகாரமுண்டு. அதே வேளை பிரதமர் பதவிக்கு எவரும் போட்டியிட முன்வராத பட்சத்தில் உடனடியாகவே பாராளுமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசியலமைப்பு இடம் கொடுக்கிறது.

வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே இம்ரான் கான் பானி காலாவிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிவிட்டார் என அறியப்படுகிறது.