பாகிஸ்தான்: இம்ரான் கான் விரைவில் கைதாகலாம்?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஆகஸ்ட் 25 மட்டில் கைதுசெய்யப்படலாமென அந்நாட்டின் உள்ளக மந்திரி ராணா சானாஉல்லா தெரிவித்துள்ளார்.

இலங்கையைப் போலவே பாகிஸ்தானும் ஊழல், ஸ்திரமற்ற அரசியல் காரணமாகப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தும் நிலைக்கு வந்திருக்கிறது. ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் போல பாகிஸ்தானும் சீனாவிடம் பெருந்தொகையான கடனை வாங்கியதுடன் தனது வெளிவிவகாரக் கொள்கைகளிலும் இலங்கையைப் போலவே சீன – அமெரிக்க வலுப்போட்டியில் சிக்கிச் சீரழிந்து வருகிறது.

சீனாவின் பக்கம் சாய்ந்ததன் காரணத்தால் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட இம்ரான் கான் தற்போது ‘பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தின் கீழ்’ விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் செய்திகள் வெளிவருகின்றன.

‘பயங்கரவாத நடவடிக்கையில்’ ஈடுபட்டாரெனக் குற்றஞ்சாட்டி இம்ரான் கானைக் கைதுசெய்யக் கோரி உள்ளக அமைச்சு பிரதமர் ஷெபாஸ் ஷரிஃபிடம் கேட்டுள்ளதாக பாகிஸ்தானின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கானின் நெருக்கமான உதவியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் பொலிஸ் காவலில் இருக்கும்போது மோசமாகத் தாக்கப்பட்டது தொடர்பாக சமபந்தப்பட்ட பொலிசார் மீதும், பெண் நீதிபதி மீதும் நடவடிக்கை எடுக்கப்போவதாக கடந்த சனியன்று (ஆகஸ்ட் 20) இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் இம்ரான் கான் பேசியிருந்தார். இது பொலிசாரைப் பயமுறுத்தியதற்குச் சமமானது எனவே அவர் மீது ‘பயங்கரவாதத்துக்கு எதிரான’ சட்டத்தைப் பாவித்து அவர் கைதுசெய்யப்படவேண்டுமென உள்ளக அமைச்சர் கேட்டிருக்கிறார்.

இதே வேளை நீதிபதி ஒருவரை மிரட்டினார் எனக் காரணம் காட்டி இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் இம்ரான் கான் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றையும் பதிவுசெய்துள்ளது. செவ்வாயன்று (நாளை) விசாரணைக்கெடுக்கப்படும் இவ்வழக்கின் காரணமாக கான் விரைவில் கைதுசெய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகிரது.