NewsWorld

பஹாமாஸ் தீவுகளைச் சீரழிக்கும் சூறாவளி டோறியன்

வரலாற்றில் இரண்டாவது பலம் வாய்ந்த சூறாவளி இது

செப்டம்பர் 02, 2019

டோறியன் எனப் பெயரிடப்பட்டிருக்கும் சூறாவளி அத்லாந்திக் சமுத்திரத்தில் கருக்கொண்ட வரலாற்றிலேயே இரண்டாவது பலம் வாய்ந்த ஒன்று என்று அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம் தெரிவிக்கிறது. இதுவரை வந்த சூறாவளிகள் பலத்தில் தரம் நான்கை மீறியதில்லை. ஆனால் டோறியனின் பலம் தரம் ஐந்து என்று சூறாவளி மையம் கருதுகிறது. காற்றின் வேகத்தைக் கொண்டு இதன் தரம் கணிக்கப்படுகிறது.

டோறியனின் பாதை – நன்றி: வெதர்.கொம்

ஞாயிறன்று பஹாமாஸ் தீவுகளைத் தாக்கும்போது இதன் வேகம் மணித்தியாலத்துக்கு 185 மைல்கள். காலநிலை மாற்றங்களைப் பொறுத்து இதன் வேகம் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யலாம். பஹாமாஸில் அழிவை முடித்ததும் அமெரிக்க தென்கீழ் கரையை நோக்கி அது பயணிக்கும் என சூறாவளி மையம் எதிர்பார்க்கிறது. புளோறிடா, ஜோர்ஜியா, வட, தென் கரோலினாக்கள் போன்ற மாநிலங்களை டோரியன் தாக்கலாம் என எதிர்பார்க்கிறார்கள்.

சூறாவளி தரையிறங்கு முன்னரே காற்று மரங்களை முறித்தும், துறைமுகங்களைத் தகர்த்தும் அட்டகாசம் பண்ணிக்கொண்டிருக்கிறது என பஹாமாஸ் மக்கள் தெரிவிக்கிறார்கள். ‘கிரேட் அபாக்கோ’ தீவின் கரையோரப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறதென்றும் 9 மைல் நீளமான கரையோரத்தில் தற்போது கால் மைல் தான் கண்ணுக்குத் தெரிகிறதென்றும் ஊர்வாசிகள் தெரிவிக்கிறார்கள். சில இடங்களில் 2 அடி வெள்ளம் வரையில் வரலாம் என எதிர்பார்க்கிறார்கள்.

சூறாவளி மையத்தின் எச்சரிக்கைக்கு இணங்கி டோறியனின் பாதையில் இருக்கும் மக்கள் தற்காப்புகளைப் பலப்படுத்தியும், இடம் பெயர்ந்தும் முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புளோரிடா முதல் வட கரோலினா வரையில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கைச் செய்தியை அனுப்பியிருக்கிறார். தான் மேற்கொள்ளவிருந்த வெளிநாட்டுப் பயணத்தை நிறுத்திவிட்டு நாட்டிலேயே தங்கியிருக்கிறார். உணவு, தண்ணீர், மின்னுற்பத்தி இயந்திரங்கள் போன்ற அவசர தேவைகளை பாதிக்கப்படவிருக்கும் இடங்களுக்கு அரச அவசரகால நிர்வாக அலுவலகம் கொண்டு செல்கிறது.

டோறியனை விடப் பலம் வாய்ந்த அலன் எனப் பெயரிடப்பட்ட சூறாவளி 1980 இல் தாக்கியபோது அதன் வேகம் மணித்தியாலத்துக்கு 190 மைல்கள் என அறியப்படுகிறது.