US & Canada

பஹாமாஸ் | திருமணத்திற்கு மறுநாள் சுறா தாக்கியதில் மணப்பெண் மரணம்!

பஹாமா நாட்டில் தனது திருமண நிகழ்வை முடித்துக்கொண்டு மறுநாள் கடலில் உல்லாசப் படகோட்டிக்கொண்டிருக்கும்போது சுறா தாக்கியதில் அமெரிக்காவின் பொஸ்டன், மசச்சூசெட்ஸைச் சேர்ந்த பெண்ணொருவர் மரணமாகியுள்ளார். அவரோடு படகில் இருந்த உறவினர் எதுவித ஆபத்துமின்றிக் காப்பாற்றப்பட்டுள்ளார். பெண்ணின் உடலின் வலதுபக்கத்தில் ஏற்பட்ட மோசமான காயத்தின் காரணமாக அவர் அந்த இடத்திலேயே மரணமாகிவிட்டார் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஹாமாஸ் நாட்டின் நியூ புறொவிடென்ஸ் தீவில், டிசம்பர் 3 ம் திகதி தம்பதிகள் தமது திருமண நிகழ்வைச் சிறப்பாகக் கொண்டாடியிருந்தனர் எனவும் மறுநாள் (திங்கள்) மணப்பெண் தனது உறவினருடன் மிதிவிசைப் படகொன்றில் கடலில் உல்லாசமாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் சுறாவின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார். கேபிள் கடற்கரையில் அமைந்திருக்கும் சாண்டல்ஸ் உல்லாசப் போக்கிடமொன்றின் கரையிலிருந்து சுமார் முக்கால் மைல் தூரத்தில் இச் சம்பவம் நிகழ்திருக்கிறது.

பஹாமாஸ் கடற்கரைகளில் 30 முதல் 40 வரையிலான சுறா இனங்கள் காணப்படுகின்றன எனவும் இவைகளில் கரீபியன் றீஃப் சுறாக்கள் போன்ற மூன்று அல்லது நான்கு வகையானவையே மனிதரைத் தாக்கக்கூடியன எனக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் 47 வயதுடைய ஜேர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் கிராண்ட் பஹாமா பகுதியில் கடலில் நீர்மூழ்கு பொழுதுபோக்கில் ஈடுபட்டிருந்தபோது சுறாவினால் இழுத்துச்செலப்பட்டிருந்தார். ஜூன் மாதத்தில் பஹாமாவில் இன்னுமொரு பெண் சுறாவின் தாக்குதலுக்குள்ளாகி ஒரு காலை இழந்திருந்தார்.

2022 இல், உலகம் முழுவதும் 108 பேர் சுறாத் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறார்கள், இவற்றில் 41 சம்பவங்கள் அமெரிக்காவில் மட்டும் நடைபெற்றுள்ளன. புளோறிடாவில் மட்டும் 16 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. (Image Credit: DANTE CARRER / REUTERS)