LIFENewsWorld

பல உயிர்களைக் காப்பாற்றிய கம்போடிய எலி வீரர் மரணம்

நூற்றுக்கும் மேலான வெடிக்காத குண்டுகள் மற்றும் கண்ணிவெடிகளை அடையாளம் கண்டு பல பொதுமக்களைக் காப்பாற்றிய கம்போடிய ‘எலி வீரர்’ மாகவா கடந்த வார இறுதியில் விடைபெற்றுவிட்டாரென கம்போடிய அரசு தெரிவித்திருக்கிறது. இறக்கும்போது அவருக்கு 8 வயது.

கடமையில் மாகவா

தனது 5 வருட சேவைக் காலத்தில் 2.4 மில்லியன் சதுர அடி பரப்பளவு நிலத்தை முகர்ந்து 71 கண்ணிவெடிகளையும் 38 வெடிக்காத குண்டுகளையும் கண்டுபிடித்ததன் மூலம் எண்ணற்ற மக்களை உயிரிழப்பிலிருந்தும் காயமுறுவதிலிருந்தும் காப்பாற்றிய வீரர் மாகவா ஜூன் மாதம் 2021 இல் சேவையிலிருந்து இளைப்பாறியிருந்தார். இளைப்பாறும்போது அவர் சுகதேகியாக இருந்தாலும் அவரது இயக்கம் கொஞ்சம் தளர்வடைந்திருந்தமையால் அவருக்கு ஓய்வைத் தர அரசு தீர்மானித்தது என அவரின் உதவியாளர் கூறுகிறார்.

மாகவாவின் வீரத்தையும் கடமையுணர்வையும் மதித்துக் கெளரவித்து பிரித்தானியாவைச் சேர்ந்த நோயுற்ற விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம் (People’s Dispensary for Sick Animals’ (PDSA)) 2020 ஆம் ஆண்டிற்கான அதியுயர் ‘வீரத்துக்கான விருதாக’ தங்கப் பதக்கம் ஒன்றை அளித்துக் கெளரவித்திருந்தது.

கடந்த வாரம் முதல் மாகவாவின் இயக்கம் தளர்வடைந்திருந்ததாகவும் சதா படுக்கையில் இருந்ததோடு சாப்பாட்டில் நாட்டமில்லாதவராக இருந்தாரெனவும் அவரது உதவியாளர் தெரிவித்துல்ளார்.

உலகின் அதி மோசமான கண்ணிவெடி விதைக்கப்பட்ட நாடாக கம்போடியா இருந்தது எனவும் இன்னும் சுமார் 1000 சதுர கி.மீ பரப்பளவுள்ள நிலம் கண்ணிவெடி அகற்றப்படாமல் இருக்கிறது எனவும் அறியப்படுகிறது.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த APOPO என்னும் தொண்டு நிறுவனம் மாகவா இனத்தைச் சேர்ந்த ஆபிரிக்க எலிகளைக் கண்ணிவெடி முகர்வுக்காகப் பயிற்றுவிக்கிறது. இவ்வகையான எலிகளை ‘HeroRats’ என அத் தொண்டு நிறுவனம் அழைக்கிறது. எலிகளின் எடை குறைவாக இருப்பதால் கண்ணிவெடிகள் இவற்றின் பாரத்தால் வெடித்துச் சிதறுவதில்லை. ஒரு கண்ணி வெடியை வெடிக்க வைப்பதற்கு 11 இறாத்தல் எடை தேவைப்படுகிறது. மாகவா போன்ற வீரர்களின் எடை அதிக பட்சம் 3 இறாத்தல்களுக்கு மேற்படுவதில்லை. கடமையில் ஈடுப்பட்ட எலி வீரர்களில் இதுவரை எவரும் இறக்கவோ அல்லது காயப்படவோ இல்லை என பெல்ஜியம் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.எலிகளுக்கு நுகரும் திறன் அதிகம் எனவும் வெடிபொருட்களுக்குள் திணிக்கப்பட்டிருக்கும் மருந்துகளயும் இதர வேதிப்பொருட்களையும் அவை இலகுவாகக் கண்டுபிடித்துவிடுகின்றன எனவும் வெற்றிகரமாக அவை குண்டுகளைக் கண்டுபிடிக்குபோது அவற்றுக்கு வாழைப்பழ்ம் மற்றும் அவை நிலக்கடலை போன்றவை வழங்கப்படுகின்றன எனவும் இத் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க மனிதர்களால் பாவிக்கப்படும் உலோகக் கண்டுபிடிப்புக் கருவிகளை (metal detectors) விடவும் மிக வேகமாக எலிகள் கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்துவிடுகின்றன எனவும் வெடி மருந்தை முகர்ந்துவிட்டால் அந்த இடத்தைச் சுரண்டிக்கொண்டு அந்த எலி அப்பால் நகராது இருக்கும் எனவும் இந் நிறுவனம் கூறுகின்றது.

இவ்வெலிகளினால் கண்ணிவெடி அகற்றப்பட்ட நிலங்களில் நாங்கள் உதைபந்தாட்டம் விளையாடுவதன் மூலம் அவற்றின் செயற்திறமை எநதளவு என்பதை நாம் நிரூபிப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையை நாம் பெற்று வருகிறோம். கம்போடியாவின் மக்கள் இன்று உயிர்களை இழக்காமலும், அவயவங்களை இழந்து வருந்தாமலும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மாகவா போன்ற வீரர்களின் அர்ப்பணிப்பே காரணம்” என இத் தொண்டு நிறுவனத்தின் பயிற்சியாளரான கிறிஸ்தொஃப் கொக்ஸ் புகழ்துள்ளார்.

மாகவாவின் மரணத்திற்கு மறுநாள் (திங்கள்) கம்போடியா-தாய்லாந்து எல்லைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்ட மூன்று கம்போடியர்கள் கண்ணி வெடி வெடித்ததனால் கொல்லப்பட்டுள்ளார்கள். அந்தளவுக்கு மிகவும் மோசமான அளவுக்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.

மாகவா தன்சானியாவில் பிறந்து அங்கு பயிற்சியை முடித்துக்கொண்டு 2016 இல் கம்போடியாவின் சியெம் றிப் முகாமில் கடமையை ஆரம்பித்திருந்தது.