சிவதாசன்

பல்துருவ உலக ஒழுங்கில் பழமைவாதத்தின் மீளெளுச்சி

சிவதாசன்

கடந்த மூன்று தசாப்தங்களாகக் கோலோச்சிவந்த ஒருதுருவ உலக ஒழுங்கு முடிவுக்கு வருகிறது. இதை இவ்வாளவு காலமும் சாத்தியமாக்கித் தந்த நவதாராளவாதத்தின் பிள்ளைகளில் ஒன்றான தொழில்நுட்பமே இந்த உள்ளுடைவுக்கும் காரணமாக இருக்கிறது. அடுத்ததாக மலரப்போகும் பல்துருவ ஒழுங்கு இயூரேசியாவை மையமாகக்கொண்டிருக்கும். இப்புதிய பல்துருவ ஒழுங்கில் கலாச்சார விழுமியம், குடும்பத்தை மையப்படுத்திய சமூகம், தேசிய நலன்களை முன்னிறுத்தும் பொருளாதாரக் கொள்கை என்று இன்னோரன்ன கோட்பாடுகளை ஆதாரமாகக்கொண்ட தேசியமயமாக்கல் – உலகமயமாக்கலின் பிந்நோக்கிய நகர்வு – ஆரம்பிக்கும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம் இதன் ஆரம்பம். ரஸ்ய – யூக்கிரெய்ன் போர் இதைத் துரிதப்படுத்தப்போகிறது.

சோவியத் குடியரசின் தகர்ப்பினால் சமநிலை குலைந்த உல்கு ஒருதுருவ ஒழுங்கிற்குள் தள்ளப்பட்டது. இத்தகர்ப்பின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அமெரிக்க -ஐரோப்பிய மேலாதிக்கம் காப்பாற்றவில்லை. இதில் முக்கியமான வாக்குறுதிகள் இரண்டு. ஒன்று ரஸ்யாவை நேட்டோவில் இணைத்துக்கொள்வது; இரண்டு நேட்டோவை அப்போதைய கிழக்கு ஜேர்மனியைத் தாண்டி கிழக்கே விஸ்தரிக்கப் போவதில்லை என்பது. ஏமாற்றப்பட்ட நிலையில் ரஸ்யா உட்பட்ட சில நாடுகள் இணைந்து, 2001 ஜூன் 15 அன்று ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organization (SCO)) என்னுமொரு அமைப்பை ஏற்படுத்தின. உண்மையில் 1996 இல் ஆரம்பிக்கப்பட்ட ‘ஷங்காய் 5’ என்ற அமைப்பின் விரிவாக்கமே இந்த அமைப்பு. தற்போது இந்த அமைப்பில் (SCO) சீனா, கசாக்ஸ்தான், கிர்கிஸ்தான், ரஸ்யா, தஜிக்கிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் இருக்கின்றன. உலகின் 40% மான மக்களைப் பிரதிநித்தித்துவப்படுத்தும் இவ்வமைப்பு இயூரேசியாவின் 60% மான நிலப்பரப்பை ஆக்கிரமிக்கிறது. நேட்டோவின் ஆதிக்க சமநிலையாக ‘ஸ்கோ’ (SCO) வளர்ந்து வருகிறது.

சோவியத் குடியரசு என்னதான் பொதுவுடமைக் கோட்பாட்டினால் கட்டப்பட்டிருந்தது என்றாலும் கிழக்கு ஐரோப்பாவில் கட்டுண்டிருந்த ஒவ்வொரு நாடுகளும் தமது கலாச்சார, மதசார்பான, குடும்பங்களை மையமாகக்கொண்ட பாரம்பரிய விழுமியங்களை இறுகப் பேணிவந்தன. பொருளாதார விரிவாக்கத்தை நோக்கமாககொண்டு மேற்கு ஐரோப்பாவினால் விதைக்கப்பட்ட நவதாராளவாதம் எப்படித் தமது விழுமியங்களைச் சிறுகச் சிறுகத் தகர்த்தது என்பதை உணர இம் மக்களுக்கு மூன்று தசாப்தங்கள் எடுத்திருக்கிறது. அவர்கள் பின்னோக்கிப் போக விரும்புகிறார்கள். மதம், பழமைவாதம் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. இந்நாடுகளுக்கு இப்போதைக்கு அபயம் தரக்கூடியது ஸ்கோ ஒன்றுதான்.

ரஸ்ய – யூக்கிரெய்ன் போர், இய்யதார்த்தத்தை முன்னாள் சோவியத் குடியரசு / கிழக்கு ஐரோப்ப்பிய நாடுகளுக்கு அறைந்து சொல்லியிருக்கிறது. இதில் முன்னணி வகிப்பது ஹங்கேரி. நேட்டோ அங்கத்தவ நாடான துருக்கி சென்ற வாரம் ஸ்கோவின் அங்கத்துவத்துக்கு விண்ணப்பித்திருக்கிறது. ஸ்கோவில் இணையும் முதல் நேட்டோ நாடாக அது இருக்குமென எதிர்பார்க்கலாம். உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற்ற ஸ்கோ சந்திப்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் அமெரிக்க – ஐரோப்பிய மேலாதிக்க கூட்டுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது எனக் கூறப்படுகிறது. நவதாராளவாதம் எப்படி ஐரோப்பாவைச் சிதைக்கிறது என்பது பற்றி இங்கு தாராளமாகப் பேசப்பட்டிருக்கிரது. பிரித்தானியாவுக்கு அடுத்ததாக ஹங்கேரி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதனால் மேற்கு ஐரோப்பா ‘மேற்கு இயூரேசியா’ என்றொரு புதிய அமைப்பாகத் தன்னை உருமாற்றிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச பொருளாதார வலையமைப்பின் உள்ளுடைவு

நவதாராளவாதம் செழிப்பாகவும் பலமாகவும் இருப்பதற்கு ஒரு உறுதியான தலைமை அவசியம். ஸ்திரமான சர்வதேச பொருளாதார ஒழுங்கு இருக்கும்போதுதான் இதரநாடுகளும் இக் கட்டமைப்பிற்குள் நம்பிக்கையுடன் வரும். 1990 களின் பின்னர் ஏற்பட்ட ஒரு துருவ ஒழுங்கில், சடுதியாகச் சிதறிப்போய், திகைத்துப்போய் நின்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இத் தலைமையைக் கொடுத்தது அல்லது கொடுக்கிறோம் என நம்பவைக்கப்பட்டது. திறந்துவிடப்பட்ட ஹொலிவூட்டின் மாயாஜாலங்கள், ஃபாஷன் சந்தைகள் இம்மக்களின் அதிர்ச்சியை ஆசுவாசப்படுத்தின. மூன்று தசாப்தங்களின் பின்னர் குடும்பமையக் கட்டமைப்புகளை நவதாராளவாதம் தகர்க்குப்போதுதான் இந்த மாயாஜாலங்களின் புனிதம் அவர்களுக்குப் புரிந்தது. இப்போது அவர்கள் பின்னோக்கி நகர முயற்சிக்கிறார்கள். தமது சமூக, மதம்சார் (கம்யூனிச மதம் உட்பட) கட்டமைப்புக்களைப் பெரும்பாலும் கலையாமல் பேணிக்காத்துவந்த ரஸ்யா, சீனா தலைமையிலான ஸ்கோவில் இணைவது தமக்குப் பாதுகாப்பு என அவர்கள் கருதுகிறார்கள். கிழக்கு நோக்கி வக்கிரமடையும் முதல் ஐரோப்பிய நாடு ஹங்கேரியாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தது போலந்து. இரண்டுமே மதவழி ஒழுகும் வலதுசாரி ஆட்சிகளைக் கொண்டவை.

உலக பொருளாதாரத்தில் ஐ.ஒன்றியத்தின் பங்கு வெகுவாகச் சரிந்து வருகிறது. ஐரோப்பிய தொழில்நுட்ப மேலாதிக்கம் இப்போது இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. கடனில் பெரும்பாலான மேற்கு நாடுகள் மூழ்கித் தவிக்கின்றன. எரிபொருள், கனிமவளம் ஆகியவற்றில் கிழக்கு மேலாண்மை வகிக்கிறது. விரைவில் மத்தியகிழக்கும் கட்சி மாறப் போகிறது. எனவே இத் தாளும் கப்பலிலிருந்து தப்பியோடுவதற்குப் பல நாடுகள் தயாராகி விட்டன. சீனாவின் பட்டி வீதி மத்திய ஆசியாவினூடு ஆனந்தமாக ஓடிவருகிறது. அப்படியே ஈரானின் கீழுள்ள பாரிய வாயுப்படிமங்களையும் அள்ளிப்போட்டுக்கொண்டு இயூரேசியாவில் கொண்டுவந்து இறக்கபபோகிறது. யூக்கிரெய்ன் போர் இப்புதிய ஒழுங்கிற்கான ஊக்கியாகனிருக்கப்போகிறது.

ரஸ்யா ஐரோப்பாவின் அதி பெரிய சனத்தொகையைக் கொண்ட நாடு. இதைப் புரிந்து அதைத் தன்னோடு இணைத்துக்கொள்ள ஐரோப்பா தவறிவிட்டது. அதற்கு அமெரிக்கா ஒரு காரணமாக இருக்கலாம். ரஸ்யா உள்ளிட்ட ஐரோப்பா அமெரிக்காவின் பொருளாதார நலன்களைப் பாதிக்கும் என்ற காரணமாகவிருக்கலாம். ரஸ்யாவைப் பலம் குறைப்பதற்காக யூக்கிரெய்னை முன்தள்ளிவிட்டுப் பின்நிற்கிறது அமெரிக்கா எனக் குற்றஞ்சாட்டுகிறது ரஸ்யா. பலத்த பேரழிவின் பின்னர் மூன்றாவது உலக ஒழுங்கை இப் போர் தீர்மானிக்கப்போகிறது.

பல்துருவ ஒழுங்கு

வரப்போகும் புதிய ஒழுங்கு பல்-துருவக் கட்டமைப்பில் இருக்கலாமென எண்ண முடிகிறது. இப் போரின் முடிவில் உடையப்போகும் ஐரோப்பா கிழக்கு இயூரேசியா, மேற்கு இயூரேசியா என்றும் அத்லாந்திக் கடலுக்கு அப்பால் வட-தென் அமெரிக்கக் கட்டமைப்புகள், ஆபிரிக்கக் கட்டமைப்பு என ஒவ்வொன்றும் தத்தம் தேசிய எல்லைகளுள் தமது அரசியல் பொருளாதார நிலைகளை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளில் இறங்குமென எதிர்பார்க்கலாம். கோவிட் பெருந்தொற்று ஏற்படுத்திய விழிப்புணர்வுகளில் ஒன்று உலகமயமாக்கல் என்ற வலையமைப்பில் (grid) இருந்து இயலுமான நாடுகள் தம்மைக் கழற்றிக்கொள்ளும் (off-grid) விருப்பு. உலகமயமாக்கல் பொருளாதாரத் தன்னிறைவுடன் வாழ்ந்துவந்த நாடுகளைத் தம் வலையமைப்பில் இணைத்ததன் மூலம் அவற்றை பலமான நாடுகளில் நிரந்தரமாகத் தங்கி வாழ நிர்ப்பந்தித்தமையே. கோவிட் பெருந்தொற்று மீண்டும் சுயவாழ்வுப் போதனையைச் சகலருக்கும் வழ்ங்கியிருக்கிறது.

இந்நாடுகளின் தேசிய சுய எழுச்சி ஏறத்தாள வலதுசாரிச் சிந்தனை மரபை ஒத்திருப்பது போலத் தெரியலாம். சமூகத்தின் ஸ்திரம் இறுக்கமான குடும்பத்தில் இருக்கிறது. காலனித்துவ காலத்தில் பொருளாதாரம் செழிக்கவென ‘நிலங்களைப்’ பண்படுதத உபயோகப்பட்டது மதம். இப்போது தொழில்நுட்பம் மதத்தைப் புறந்தள்ளிவிட்டு அவ்விடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டது. தவிக்கவிடப்பட்ட மதம் தனது இடத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள சுய தேசிய மீழெழுச்சி என்ற புரட்சியைக் கிளப்பிவிட்டிருக்கிறது. வலதுசாரிகள் இப்புரட்சியை முன்னெடுக்கிறார்கள். இனம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, தேசிய எல்லைகள் என்று சமூகங்கள் / நாடுகள் தத்தம் எல்லைகளை நிர்ணயிக்கப்போகின்றன. மின்சாரமின்றி, குழாய்த்தண்ணீர் இன்றி, சாக்கடைகள் இன்றி வாழும் ஒரு சமூக உருவாக்கத்திற்கு கோவிட் பெருந்தொற்று வழிசெய்திருக்கிது. ‘சுதந்திரம்’ என்ர பெயரில் விற்பனையாகும் இப் புரட்சியை அமெரிக்காவில் ட்றம்ப் மூலம் ஆரம்பித்திருக்கிறார்கள் வலதுசாரிகள். இத் தீ உலகமெங்கும் பரவ அதிகம் நாளெடுக்காது.

வலைத் தகர்ப்பு

பல்லாயிரம் வருடங்களாக சாம்ராஜ்யங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் மனிதகுலம் கண்டறிந்த ஒன்று. இருப்பினும் அது தொடர்கிறது. இதற்கு மனித குலம் மட்டும் காரணமில்லை. இயற்கைக்கும் ஒரு காத்திரமான பங்கு இருக்கிறது. தொழில்நுட்பம் மனிதனுடைய படைப்பு என்றாலும் அவனுடைய மூளையில் அப்பொறியை ஆரம்பித்தது இயற்கைதானே. இத்தொழில்நுட்பம் முதலில் கண்டங்களை இணைத்தது. பிறகு பொருளாதாரங்களை இணைத்தது. உலகமயமாக்கம் ஓரளவு நிறைவுக்கு வந்துவிட்டது. உலகின் சகல மக்களும் வலையில் போட்டு வலையில் எடுக்கிறார்கள். விவிலியத்தில் சொல்லப்பட்ட சொடொம், கொமோரோ கதையில் போல மக்கள் இயற்கையை (கடவுளை) மறந்து கேளிக்கையில் (தொழில்நுட்ப) மிதக்கிறார்கள். அவர்களைச் சுய நினைவுக்குக்கொண்டுவர இயற்கை தயாராகிறது என்கிறார்கள் மதவாதிகள். சுதந்திரம் என்ற பெயரில் அவர்களது புரட்சி ஆரம்பமாகி இருக்கிறது. நவதாராளவாதப் பொருளாதாரம் அவர்களுக்கு முடுக்கு ஊசி ஏற்றியிருக்கிறது. வலையிலிருந்து விடுபடுதே அவர்களது முக்திக்கான பயணம். அது ஆரம்பித்துவிட்டது. அரோகரா…