Sri Lanka

பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளன தலைவர் பிணையில் விடுதலை, மாணவர் சம்மேளன தலைவர் தொடர்ந்தும் விளக்க மறியலில்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழ பிக்குகள் சம்மேளன தலைவரான சிறிதம்ம தேரர் நேற்று (06) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளன தலைவர் சிறீதம்ம தேரரும் பல்கலைக்கழக மாணவர் சம்மேளன தலைவர் வசந்த முதலிகேயும் பொது உடமை நாசத்துக்கு எதிரான சட்டத்தின் கீழ் குற்றப்பதிவு செய்யப்பட்டிருந்தார்கள். கல்வியமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் 90 நாட்கள் முடிவடைந்ததும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்படவேண்டுமென்பது சட்டமாகும். இத் தொண்ணூறு நாள் கால அவகாசம் நவம்பர் 18 உடன் முடிவடைந்த நிலையில் இவர்கள் மீதான வழக்குகளை விசாரித்த கடுவெல மாஜிஸ்திரேட் இருவரையும் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந் நிலையில் இவர்கள் இருவரையும் விடுதலை செய்வதற்கான உத்தரவை சட்டமா அதிபர் சஞ்சாய் ராஜரத்தினத்தின் அலுவலகம் பிறப்பிக்கும்வரை அவர்களைப் பிணையில் வைத்திருக்கும்படி நவம்பர் 17 அன்று கொழும்பு மாஜிஸ்திரேட் இட்ட உத்தரவுக்கமையை இருவரும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிர்ந்தனர். ஆனால் கடுவெல மாஜிஸ்திரேட் நேற்று இருவரையும் விடுதலை செய்திருந்தார். இருப்பினும் ச்ட்டமா அதிபரின் உத்தரவு கிடைக்காமையால முதலிகே விடுதலை செய்யப்படவில்லை எனத் தெரியவருகிறது.

இவ்விருவரும் கடுவெல மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படும்போது அடையாள அணிவகுப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் இருவரது முகம்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அப்படியிருந்தும் தேரரது முகம் மட்டுமே மூடப்பட்டிருந்தது எனவும் முதலிகேயின் முகம் மூடப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் இருவரது நீதிமன்ற வரவுகளின்போதும் முதலிகேயின் முகம ஒருபோதுமே மறைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

நேற்று நீதிமன்றத்திலிருந்து வெளியே வரும்போது ஊடகவியலாளருடன் பேசிய சிறிதம்ம தேரர் ” கடந்த பல மாதங்களாக தமது கஷ்ட துன்பங்களுக்கு நிவாரணம் கேட்டுப் போராடிய்க மக்களுடன் இணைந்து பிக்குகள் சம்மேளனமும், மாணவர் சம்மேளனமும் போராடின. ஆனாலும் அக் கஷ்டங்களும் துன்பங்களும் நீங்கிவிடவில்லை. எனவே நாங்கள் எஙகள் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அத்தோடு முதலிகே விடுதலை செய்யப்படும்வரை எங்கள் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்கு எதிராக ஆகஸ்ட் 18 முதல் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் தனது போராட்டங்களை ஆரம்பித்திருந்தது. அப்போது 16 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இருப்பினும் முதலிகே, சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷான் ஜீவந்தா ஆகிய மூவர் தவிர்ந்த அனைத்து மாணவ்ர்களும் ஆகஸ்ட்19 அன்று விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இதன் பின்னர் ஜீவந்தா மற்றும் இப்போது தேரர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் வசந்த முதலிகே ஒரு வேடுவ இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.