Sri Lanka

பல்கலைக்கழக ஒன்றியத் தலைவர் முதலிகே விடுதலை

குற்றச்சாட்டுகள் புனையப்பட்டதாக பொலிசார் மீது நீதிபதி கடும் கண்டனம்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக ஒன்றியத் தலைவர் வசந்தா முதலிகே இன்று (ஜனவரி 31) கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் எந்தவொரு அம்சங்களையும் அவர் மீறிச்செயற்பட்டிருக்கவில்லை எனத் தீர்ப்பளித்ததுடன் அவரைத் தடுத்துவைப்பதற்காக பொலிசார் பொய்யான தகவல்களை உருவாக்கி பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தவறான வழிகளில் பிரயோகித்துள்ளனர் எனவும் அவரது வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.

‘ஊக்கப் பேச்சாளர்’ பியூமால் சமரசிங்க, இலங்கை தனியார் பஸ் வண்டி உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ண மற்றும் பல பொலிஸ் அதிகாரிகள் உடபடப் பலராலும் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்களை ஆராய்ந்த நீதிமன்றம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் முனவைக்கப்பட்ட குற்றங்களுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை எனக் கூறியுள்ளார். பொலிசாரினால் முன்வைக்கப்பட்ட சமரசிங்கவின் பதிவுசெய்யப்பட்ட வாக்குமூல்மொன்றில் அமைதியாக நடைபெற்ற ‘அரகாலயா’ போராட்டத்தை முன்னணி சோசலிஸ்ட் கட்சி (FSP), பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (IUSF) ஆகியன தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வன்முறைகளைத் தூண்டிவிட்டார்கள் எனவும் இதற்கான ஆதரவைப் பல சர்வதேச அமைப்புகள் வழங்கியிருக்கலாம் எனச் சந்தேகப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்ததை அவதானித்த நீதிமன்றம் அதற்கான எந்தவித ஆதாரங்களும் பொலிசாரால் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாது கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னால் வைத்து முதலிகே தன்னைத் தாக்கியதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜனவரி 1, 2023 இல் கொடுத்திருந்த வாக்குமூலமும் கூட முதலிகேயைத் தடுத்துவைத்திருக்கவேண்டுமென்பதற்காக கொடுக்கப்பட்ட ஒன்றே எனவும் அவ்வாக்குமூலத்தில் துளி கூட உண்மையில்லை எனவும் நீதிபதி அல்விஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் பல்வேறு பொலிஸ் அதைகாரிகளும் முதலிகே தங்களையும் தாக்கியிருந்ததாக வாக்குமூலமளித்திருந்ததையும் இவையும் முதலிகேயைத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருக்க பொலிசார் எடுத்த முயற்சியே என்பதையும் நீதிபதி கவனத்துக் கொண்டுவந்திருந்தார்.

முதலிகே பொது உடமைகளைத் தாக்கி சேதப்படுத்தினார் எனப் பொலிசாரினால் குற்றச்சாட்டுகள் எதற்கும் ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை எனவும் இக்காரணங்களுக்காக அவரை விடுதலை செய்வதாகவும் நீதிபதி அறிவித்திருக்கிறார். இவ்வழக்கில் சில்வியா பீரிஸ் PC முதலிகே சார்பில் வாதாடியிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக ஆகஸ்ட் 18, 2022 அன்று பல்கலைக்கழக ஒன்றியத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டத் தடுத்து நிறுத்திய பொலிசார் முதலிகே உள்ளிட்ட 16 பல்கலைக்கழக மாணவர்களையும் கைதுசெய்திருந்தனர். இதைத் தொடர்ந்து வசந்த முதலிகே, பல்கலைக்கழக ஒன்றிய பிக்குகள் முன்னணியின் தலைவர் வண.கல்வேவ சிறிதம்ம தேரர், பலகலைக்கழக ஒன்றிய செயற்பாட்டாளர் ஹஷான் ஜீவாந்த ஆகியோர் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதுடன் எஞ்சிய மாணவர்கள் அனைவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். பின்னர் சிறிதம்ம தேரர் மற்றும் ஜீவாந்த ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் முதலிகே மட்டும் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.,