US & CanadaWorld

பலோச்சிஸ்தான் பிரிவினைவாதி கரீமா மெஹ்ராப் ரொறோண்டோவில் மர்ம மரணம் – பாகிஸ்தான் மீது சந்தேகம்


பிரபல பலோச்சிஸ்தான் பிரிவினைவாதியும், செயற்பாட்டாளருமாகிய, கரீமா பலொக் என அழைக்கப்படும் கரீமா மெஹ்றாப் ரொறோண்டோவில் இறந்திருக்கக் காணப்பட்டார். இவரது மரணம் குறித்துச் சந்தேகங்கள் உள்ளதாகவும் புலன் விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் அறியப்படுகிறது.

பலோச்சிஸ்தான் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரான மெஹ்றாப் ஒரு தினத்துக்கு முதல் காணாமற் போயிருந்ததாகவும் மறுநாள் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸ் தெரித்துள்ளது. மரண பரிசோதனைகள் நடைபெற்று முடிந்தபோதிலும் அதன் பெறுபேறுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பலோச்சிஸ்தான்

பலோச்சிஸ்தான் பிரிவினைவாதியான சஜிட் ஹுஸ்ஸெய்ன் என்பவர் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சுவீடனிலுள்ள உப்சல என்னும் நகருக்கு வெளியேயுள்ள ஆற்றொன்றில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியோடு தொடர்பு படுத்தி மெஹ்றாப்பின் மரணத்தின் மீதும் ஊடகங்கள் பலத்த சந்தேகத்தை முன்வைத்துள்ளன.

37 வயதுடைய மெஹ்றாப், பாக்கிஸ்தான் இராணுவம் மற்றும் அதன் உளவுப்பிரிவான ISIS ஆகியவற்றின் மீது தொடர்ச்சியாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தவர்.

பலோச்சிஸ்தான் மாகாணத்தைப் பாக்கிஸ்தானிலிருந்து பிரித்துத் தனிநாடாக உருவாக்கவேண்டுமென்ற போராட்டம் சமீப காலங்களில் வலுப்பெற்று வருவதும் இதற்கு பலோச்சிஸ்தான் மாணவர் அமைப்பு (BSO) ஆதரவு தருவதும் பாக்கிஸ்தான் இராணுவத்துக்கும், உளவுப்பிரிவுக்கும் தொடர்ந்து தலையிடியைத் தந்துகொண்டிருந்த விடயம். இப்பிரிவினைக்காக்ப் போராடுபவர்களையும், ஆதரவு தருபவர்களையும் இராணுவம் தேடியழித்து வருகின்றது. இக் காரணங்களுக்காகப் பல ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கிறார்கள். கனடாவில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கும் மெஹ்றாப்பின் தஞ்ச வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.இந்தியாவின் தலையீடு?

பலோச்சிஸ்தான் மாகாணம் தென் மேற்கு பகுதியிலுள்ள பாக்கிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாகும். வரண்ட மலைப் பிரதேசங்களைக் கொண்ட பலோச்சிஸ்தான் மக்கள் ஆப்கானிஸ்தான், ஈரான் நாடுகளிலுள்ள சில பாகங்களை உள்ளடக்கிய சிந்துவெளி நாகரிக மக்களெனவும் கூறப்படுகிறது. கனிமவளம் நிறைந்த இப் பிரதேசத்தில் சமீப காலங்களில் சீனா அதிக அக்கறை காட்டி வருவதும் இம் மாகாணத்தின் குவாடார் துறைமுக அபிவிருத்தி உட்பட மேலும் பல திட்டங்களை, சீனா-பாக்கிஸ்தான் பொருளாதாரக் கடவை (China-Pakistan Economic Corridor (CPEC)) என்ற பெயரில் இங்கு நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. இதனால் எரிச்சலடைந்த இந்தியா பலோச்சிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு உதவுகிறது எனப் பாக்கிஸ்த்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.

உலகின் 100 செல்வாக்கு மிக்க, ஊக்குவிக்கும் பெண்களில் ஒருவர் என 2016 இல் பி.பி.சி. மெஹ்றாப்பைத் தெரிவுசெய்திருந்தது. அப்போது மெஹ்றாப்பின் அரசியல் தஞ்ச வழக்கு கனடாவில் விசாரணை நிலையில் இருந்தது. 2017 இல் BSO பிரிவினைவாதிகளுக்கு உதவுகிறது என்ற பாக்கிஸ்தானின் குற்றச்சாட்டை அனுசரித்து கனடிய எல்லைச் சேவைகள் அவரது அரசியல் தஞ்ச வழக்கைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தது.

ஆரம்பத்தில் பலோச்சிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு இந்தியாவின் உதவி மறைமுக உதவி இருந்து வந்தாலும், 2016 ஆகஸ்ட் 15 அன்று, மோடி தனது சுதந்திரதின உரையில் பலோச்சிஸ்தான் மக்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இதன் பின்னர் 3 நாட்கள் கழித்து மெஹ்றாப் பிரதமர் மோடிக்கு விடுத்த அழைப்பில் ” சகோதரர் என்ற முறையில் நாம் உங்களைக் கேட்பது, பலோச்சிஸ்தான் மக்கள் மீது இழைக்கப்படும் இனவழிப்பையும், போர்க்குற்றங்களையும் சர்வதேச அரங்குகளில் பேசுங்கள்” எனக் கேட்டிருந்தார்.

பலோச்சிஸ்தான் பிரிவினைவாத இயக்கமான ‘பலொக் விடுதலை இராணுவம்’ பாக்கிஸ்தான் உள்ளக அரங்குகளில் சில தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறதென்றாலும் அதற்கு இந்திய உதஹ்வி கிடைக்கிறது என்பதற்கு உறுதியான சான்றுகள் ஏதுமில்லை எனக் கூறப்படுகிறது.