Columnsசிவதாசன்

பருப்பு அரசியல்

சிவதாசன்

இக்கட்டுரை ரொறோண்டோவிலிருந்து வெளிவரும் தமிழர் தகவல் ஆண்டுமலருக்காக எழுதப்பட்டு ஜூன் 2023 இல் வெளியானது (நன்றி: தமிழர் தகவல்)

‘Aekya Rajya’, ‘ஒருமித்த நாடு’, ‘Unitary State’,’ஒரு நாடு – இரு தேசம்’ எனப் பல வார்த்தைப் பிரயோகங்கள் நமது மூளைகளைத் துளைத்து ஓய்ந்து கோதாவின் ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ எனச் சற்றே ஆற அமர்ந்திருக்கும் வேளையில் இதுவென்ன இலங்கையில் மீண்டுமொரு தேர்தல் வரப் போகிறதோ என்ற சந்தேகத்தை இக் கட்டுரை எழுப்பினால் அதற்கு தமிழர் தகவல் ஆசிரியர்தான் பொறுப்பு (disclaimer).

தனிநாட்டுக் கனவு களைத்து இளைத்துப்போய் ‘சமஷ்டி’ அல்லது ‘சமட்டி’ (politically correct) அல்லது அதுவும் வேண்டாம் உரிஞ்சுவிட்ட 13 ஆவது கிடைக்குமா என்றவாறு ‘குடிசைக்குள்’ இளைப்பாறிக்கொண்டிருக்கும் ஈழத் தமிழருக்கு, ராஜபக்சவிடமிருந்து அடாத்தாகப் பறித்த ரணில் ராஜதானியில் கனவு காண்பதற்குக்கூட அனுமதி கிடைக்குமா என்பதே சந்தேகமான நிலை. இப்படியிருக்கும்போது தமிழருக்கு எப்படியான தீர்வு கிடைக்கும் என்று கேட்பதுகூட வன்முறையைத் தூண்டும் ஒருசெயலாகவும் இருக்கலாமோ தெரியாது.இருப்பினும் 87 இல் கனவு காணாமலேயே யாழ் மக்கள் தலைகள் மீதுபருப்புத் தூவிய ‘அந்த’ வானளாவிய தூதர் மீதான ஒரு நம்பிக்கை இன்னமும் இருப்பதாகவே தெரிகிறது. எனவே ஆழ ஊடுருவி அவர்கள்  விரும்பிய அந்த ‘சமட்டி’ பற்றி எடுத்த இரண்டொரு கருத்துக்கள் இக்  கட்டுரையில் அகப்படலாம்.

இலங்கையில் என்னவிதமான ஆட்சிமுறை இருக்கிறதோ தெரியாது ஆனால் அவர்களது பெரும்பான்மை ஜனநாயகம் சிங்களவர்களுக்கு சாதகமாகவிருக்கிறது என்பது மட்டுமே உண்மை. மன்னராட்சி,நிலப்பிரபுத்துவ முறைமைகளின் பதாங்கங்களை வெட்டி ஒட்டி 18ம்நூற்றாண்டில் கிரேக்க புத்திசாலிகளால் உருவாக்கப்பட்ட ஜனநாயகத்துக்கு இப்போது கிட்டத்தட்ட 300 வயது. இரண்டாம் உலகப் போரின்போது அது வயதுக்கு வந்தது. பிரபுக்கள் ஆட்சி (aristocracy), புகழ்விரும்பிகள் ஆட்சி (timocracy), தன்னலவாதிகள் ஆட்சி (oligarchy), மக்களாட்சி (democracy), கொடுங்கோன்மை (tyranny) எனப்பல்வகையான ஆட்சி முறைகள் ஜனநாயக ஆடைகளைப் போர்த்துக்கொண்டு வலம் வருகின்றன. ஆங்கிலேயன் விட்டுப்போன இப்படியொரு கிழிந்த ஜனநாயக சட்டையுடன் கொடிபிடித்துக்கொண்டு நிற்கிறது நமது சிறீலங்கா. இந் நிலையில் பல்லின மக்களைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழருக்குத் தீர்வு வேண்டும். அது எப்படியானதென்பதை வரையறுக்கக்கூடிய வல்லவன் இப்போதைக்கு நம்மிடம் இல்லை. பிளவுபட்டு நிற்பதும் ஒரு அரசியல் சித்தாந்தம் என்று வகுப்பெடுத்துக்கொண்டு ஆயிரம் தலைவர்கள் திரிகிறார்கள்.

சமஷ்டி எனப்படும், ஒரு நாட்டுக்குள் காணப்படும் வெவ்வேறு சமூகக் குழுமங்கள் தம்மைத் தாமே நிர்வகிக்கும் ஆட்சி முறைமை உலகில் பல நாடுகளிலும் காணப்படுகிறது. இக் குழுவாக்கம் இன, மத, கலாச்சார, எல்லை, பிரதேச பண்புகளால் பிரிக்கப்படலாம். காடுகளில் வேட்டையாடிக்கொண்டிருக்கும்போதிருந்தே இக் குழுவாக்கப் பண்பு தொடர்கிறது. தமது குழுமங்களின் இருப்பையும், தனித்துவத்தையும் பாதுகாக்க அக்குழுமங்கள் எடுக்கும் எத்தனங்களின் வெளிப்பாடே சுயாட்சி மீதான வேட்கை. பலமான எதிரிகளிடமிருந்து தம்மைப்
பாதுகாக்க அல்லது தமது வளங்களைப் பகிர்ந்துகொள்ள அவர்கள் இதர குழுமங்களுடன் செய்துகொள்ளும் சமூக ஒப்பந்தம் (social contract) ஒரு ஆட்சி முறையாக உருவாகிறது.
வலிமை கூடிய சில சமூகங்கள் தமது அதிகரிக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவோ அல்லது அதிகாரத் திமிரின்வெளிப்பாடாகவோ அயலிலுள்ள சமூகக் குழுக்களின் வாழிடங்களைப் பலாத்காரமாக இணைத்துக்கொள்வதுமுண்டு (empire building). இப்படி உருவானதுதான் இலங்கை. ஆரம்பத்தில் மதத்தினாலும் பின்னர் மொழியினாலும் நிர்வாக அனுகூலத்துக்காக ஒரு கொடிக்கீழ் கொண்டுவர எத்தனித்த பரதேசிகளின் சில்லறை எலும்புத் துண்டுகள் இலங்கையின் இருதேச மக்களைக் கொஞ்சக் காலம் சமாதானப்படுத்தி
வைத்திருந்தாலும் எலும்புகள் முடிந்துபோனதும் குழுச்சணடை மீண்டும் உக்கிரமடைந்தது. இது வரலாறு.

எப்படியான வழிகளாலோ இன்று கூட்டாட்சி முறைமையை அனுசரித்திருக்கும் பல நாடுகள் தத்தம் ஆட்சி முறைகளை வெவ்வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றன. உலகின் தற்போதுள்ள பெரிய கூட்டாட்சி நாடுகளாக ரஷ்யா, கனடா, அமெரிக்கா, பிரேசில், அவுஸ்திரேலியா, இந்தியா, ஆர்ஜென்ரீனா ஆகியவை உள்ளன. சிறிய கூட்டாட்சி நாடுகளாக ஒஸ்ட்றியா, பெல்ஜியம், எதியோப்பியா, ஜேர்மனி, மலேசியா, மெக்சிக்கோ, நைஜீரியா, பாகிஸ்தான், சுவிட்சர்லாந்து, வெனிசுவேலா போன்றவை உள்ளன.

மக்களாட்சி முறைமையை நடைமுறையில் வைத்திருக்கும் அநேகமான நாடுகளின் பொதுப்பண்பு மூன்று தூண்கள் என வர்ணிக்கப்படும், சுதந்திரமாக இயங்கும் அலகுகள் / ஸ்தாபனங்கள்: 1). நிர்வாகம் (Executive), 2). நீதி (Judiciary) 3). சட்டவாக்கம் (Legislature /Parliament). இலங்கையில் பல்சமூக மக்களை இணைத்து – இது நகைப்புக்குரிய ஒரு விடயமாகச் சிலருக்குத் தோன்றினாலும் – இதர பல்சமூக உலக நாடுகளில் உள்ளதைப் போல ஒரு கூட்டாட்சி முறைமையை ஏற்படுத்த முடியுமானால் அது எப்படியிருக்கும் என்பதை
ஒப்பீட்டளவில் நோக்க முயற்சிக்கிறது இக்கட்டுரை.

சுவிட்சர்லாந்து

சிறந்த அதிகாரப்பகிர்வு முறையைக் கொண்ட கூட்டாட்சி நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்தைக் குறிப்பிடலாம். 5.3 மில்லியன் மக்களைக் கொண்ட இந்நாட்டின் ஆட்சிமுறை முப்பிரிவுகளைக் கொண்டது. கலாச்சாரம், மொழி ஆகிய கூறுகளில் ஒருங்கிணைந்த குழுமங்களின் தனித் தன்மையைப் பேணும் நோக்கில் 26 கன்ரோன்களையும் (cantons) 2,250 கொம்யூன்களையும் (communes) கொண்ட மத்திய அரசின் கீழான கூட்டாட்சியாக அது இயங்குகிறது. ஜேர்மன், ஃபிரென்ச், இத்தாலியன், றோமன்ஸ் மொழிகளை இங்கு வாழும் மக்கள்
பேசுகிறார்கள். அவரவர் மொழி, கலாச்சாரத்தைப் பேணும் உரிமையை கன்ரோன்களும், கொம்ம்யூன்களும் வழங்குகின்றன.

மத்திய அரசு, தேசிய சபை (National Council) எனவும், கன்ரோன்களின் அரசுகள் மாநில சபைகள் (Stae Councils) எனவும் அழைக்கப்படுகின்றன. முத்தூண்களில் ஒன்றான நிர்வாகத்தை (executive) (நம் நாட்டின் ஜனாதிபதி) தேசீய சபையும் மாநில சபைகளும் இணைந்து தெரிவு செய்கின்றன. மத்திய-மாநில அரசுகளிடையே வரும் பிணக்குகளை உச்சநீதிமன்றம் (judiciary) தீர்த்துவைக்கிறது. இவையனைத்தும் சேர்ந்த கூட்டாட்சியே (federation) சுவிட்சர்லாந்து. இங்கு 7 பேர் கொண்ட கவுன்சில் நாட்டின் நிர்வாகத்தைக் கவனிக்கிறது. இந்த 7 பேர்களில் ஒருவர் வருடத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் நாட்டின் அதிபராகிறார். அந்த வகையில் இந்நாடு ஒரு கூட்டுத் தலைமையைக் கொண்டுள்ள நாடு. மாநிலங்கள் அனைத்துக்கும் சம உரிமை உண்டு. மாநிலங்களின் பிரதிநிதிகளும் மத்திய ஆட்சி நிர்வாகத்தில் பங்கெடுக்கின்றனர்.

ரஷ்யா

ரஷ்யாவும் சிறுபான்மை இனங்களின் கலாச்சார, மொழிக் கூறுகளுக்கு மதிப்பளித்து அவற்றைப் பேணும் வகையிலான, வெவ்வேறு அதிகாரங்களுடன் கூடிய அலகுகளை இணைத்த கூட்டாட்சியாகச் செயற்படுகிறது. குடியரசு (republic), பிரதேசம் (region), மாவட்டம் (district) என இவ்வலகுகள் அதிகாரப் பரவலாக்கங்களைக் கொண்டுள்ளன.
ரஷ்யா சோவியத் சாம்ராஜ்யமாக உருக்கொண்டபோது பலவந்தமாக இணைக்கப்பட்ட சில நாடுகள் தற்போது குடியரசு அந்தஸ்துகளுடன் இயங்குகின்றன. இங்கும் முத்தூண்களான நிர்வாகம் (ஜனாதிபதி), நீதி, பாராளுமன்றம் ஆகியன சுயாதீனமாக இயங்குகின்றன. அரசியலமைப்பு விவகாரங்களில் ஏற்படும் பிணக்குகளை நீதிமன்றம் தீர்த்து வைக்கின்றது. ஜனாதிபதியே நாட்டின் தலைவர்.

அமெரிக்கா

இது 50 மாநிலங்களைக் கொண்ட மத்திய-மாநில கூட்டாட்சி நாடு. மாநிலங்களுக்கு ஓரளவு பூரணத்துவம் கொண்ட சுய நிர்ணய, சட்டவாக்க உரிமைகள் உண்டு. முத்தூண்களான நிர்வாகம் (ஜனாதிபதி), பாராளுமன்றம் (செனட் சபை + பிரதிநிதிகள் சபை), நீதி (உச்ச _ ஏனைய நீதிமன்றங்கள்) ஆகியன நிர்வாக அலகுகளாகச் செயற்படுகின்றன. அரசியலமைப்புச் சட்டம் ஆட்சிமுறையைப் பேணுகிறது. வெளி விவகாரம், போர், மாநிலங்களுக்கிடையேயான வர்த்தகம், வெளிநாடுகளுடனான வர்த்தகம் போன்ற செயற்பாடுகளுக்கு மத்திய அரசு பொறுப்பாக உள்ளது. மாநில அரசுகள் தமக்குத் தேவையான நிர்வாகச் சட்டங்களை இயற்றுகின்றன. மாநிலங்களின் ஆட்சித் தலைவர்களாக ஆளுனர்கள் (governors) இருக்கிறார்கள். அவர்களின் ஆட்சியைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகார்ம் இல்லை. நாட்டின் தலைவராக ஜனாதிபதி இருக்கிறார். பலமான அரசியலமைப்பு நிர்வாகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்கிறது.

இந்தியா

பிரித்தானிய காலனியாகவிருந்து விடுதலைபெற்ற இந்தியா இன்னமும் பிரித்தானிய பாராளுமன்ற முறைமையையே பின்பற்றிவருகிறது. இங்கிலாந்தின் பிரபுக்கள் சபைக்குச் சமமாக ராஜ்ய சபையும், பொதுச் சபைக்குச் சமமாக மக்கள் சபையும் இயங்குகின்றன. மேற்குறிப்பிட்ட நாடுகளைப் போலவே இங்கும் ஜனநாயகப் பண்புகளான முத்தூண்கள் சுயாதீனமாகச் செயற்படுகின்றன. அதிகாரம் மத்தி, மாநிலங்கள் எனப் பகிரப்படுகின்றது. வெளிவிவகாரம், வர்த்தகம் ஆகியவற்றின் நிர்வாகம் மத்திய அரசிடமுண்டு. மத்தியின் பிரதிநிதியாக மாநில நிர்வாகத்தை ஆளுனர் கவனித்தாலும் சட்டவாக்க அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு. ஆனால் அதன் ஆட்சியைக் கலைக்கும் அதிகாரம் ஆளுனருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் நிர்வாகத் தலைமை ஜனாதிபதிக்கே வழங்கப்பட்டிருந்தாலும் அது ஒரு சம்பிரதாயத் தலைமை மட்டுமே. பிரதமரே நாட்டின்நிர்வாகங்களைக் கவனித்துக் கொள்கிறார். இங்கும் பலமான அரசியலமைப்பும், நீதிமன்றமும் பிசகுகள் ஏற்படாமல் கவனித்துக் கொள்கின்றன. மாநில அரசுகளின் தலைவர்கள் முதலமைச்சர்கள் எனப்படுகிறார்கள்.

கனடா

சம்பிரதாய முடிக்குரிய அந்தஸ்துடன் ((constitutional monarchy) பிரித்தானிய மகாராணியின் கீழ் இயங்கும் ஒரு ஆட்சியெனினும் முற்றிலும் சுயாதீனமான மக்களாட்சி முறைமையைக் கொண்டிருக்கிறது. ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரு மொழிகளுக்கும் அவற்றைப் பேசும் மக்களின் கலாச்சாரங்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. பிரதேச ரீதியாக 13 மாகாணங்களையும் (provinces), பிரதேசங்களையும்(territories) கொண்டிருந்தாலும் அவற்றில் சில ஆங்காங்கு வாழும் மக்களின் மொழி, கலாச்சாரப் பண்புகளைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. மாகாணங்களுக்கு சட்டவாக்க உரிமைகளுண்டு. மாகாணங்களின் ஆட்சிகளைக் கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு இல்லை. வெளியுறவு, குடிவரவு, வெளிநாட்டு வர்த்தகம், மாகாணங்களுக்கு இடையேயான வர்த்தகம், நாட்டை ஊடுறுக்கும் நெடுஞ்சாலைகள் போன்ற விடயங்களை மத்திய அரசு பார்த்துக்கொள்கிறது. கியூபெக் மாகாணத்துக்கு மட்டும் அம்மகாணத்துக்குத் தேவையான குடிவரவைத் தீர்மானிக்கும் விசேட சலுகை வழங்கப்பட்டிருக்கிரது. பாராளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் ஆகியவை நடைமுறையில் இருந்தாலும் நிர்வாகத் தலைமை மகாராணியின் பிரதிநிதியான ஆளுனரிடம் இருக்கிறது. ஆனாலும் இது ஒரு சம்பிரதாய கடமை மட்டுமே. பெரும்பாலும் ஆளுனர் பிரதமரின் ஆலோசனைக்கிணங்கவே நடந்துகொள்கிறார். அந்த வகையில் பிரதமரே நாட்டின் தலைவர். மாகாண அரசுகளின் தலைவர்கள் முதலமைச்சர்கள் (premiers) எனப்படுகின்றனர். சுதந்திரத்துக்கும் உரிமைகளுக்குமான பட்டயம் (Charter of Freedoms and Rights) மக்களின் சமத்துவத்தை உறுதி செய்கிறது.

சீனா

சீனா ‘ஒரு நாடு, ஒரு மக்கள்’ என்ற சித்தாந்தத்தின் மூலம் அதிகார ஒருமைப்படுத்தலை நடைமுறையில் வைத்துள்ளது. பெயரளவில் மூன்று தூண்கள் நடைமுறையில் இருந்தாலும் அவற றிடையே சுயாதீன செயற்பாடு இல்லை. சீனா ஒற்றை ஆட்சி முறையைப் (Unitary State) பின்பற்றுகிறது. அங்கு பல்வேறு இன, மதக் குழுக்கள் வாழ்ந்தாலும் சீனப் புரட்சியைத் தொடர்ந்து அங்கு நிலையூன்றிய பொதுவுடமைச் சித்தாந்தம் மக்களிடையேயுள்ள மொழி, கலாச்சார வேறுபாடுகளைக் களைந்து ‘ஒரு நாடு, ஒரு மக்கள்’ என்ற சித்தாந்தத்தைத் திணிப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. இதனால் பல்வேறு மத, கலாச்சாரப் பிரிவினர் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். ஹொங்க் கொங், மக்கோ ஆகிய இரு பிரதேசங்கள்
அரசியலமைப்பின்படி சுயாதீன நிர்வாக அலகுகள் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும் தற்போதைய ஆட்சியாளர் அதை உதாசீனம் செய்து அவற்றைத் தமது பொது நிர்வாகத்துள் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சீனாவின் ஆட்சி ஜனாதிபதியை முழுமுதல் தலைவராகக் கொண்டது. 25 அங்கத்தவர்களைக் கொண்ட பொலிட் பீரோவின் ஆலோசனை அவருக்கு வழங்கப்படுகிறது. இவர்களில் 7 பேர் ஜனாதிபதிக்கு நெருக்கமான உள்வட்டத்தில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்கள். இவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் ஜனாதிபதிக்குக் கீழே இருக்கும் ஏனைய அலகுகளுக்குத் தெரியவேண்டுமென்பதில்லை.

சீனாவின் ஆட்சி, ஜனாதிபதியை நாட்டின் முழுமுதல் தலைவராகக்  கொண்டு அவருக்கு ஆலோசனை வழங்கும் 25 அங்கத்தவர்களைக்  கொண்ட பொலிட்பீரோவின் ஆதரவுடன் இயங்குகிறது. இவர்களில் 7 பேர் ஜனாதிபதிக்கு நெருக்கமான உள்வட்டத்தில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவர்கள். இவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் ஜனாதிபதிக்குக் கீழிருக்கும் ஏனைய அலகுகளுக்குத் தெரியவேண்டுமென்பதில்லை.அரசாங்கம், நீதிமன்றம், இராணுவம், மாநில சபைகள், சீனமக்கள் அரசியல் ஆலோசனைக் காங்கிரஸ் (CPPCC-இது செனட் சபைக்குச் சமமானது), தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC – இது மக்கள் சபைக்குச் சமமானது) ஆகிய அனைத்தும் ஜனாதிபதிக்குக் கீழ் இயங்குபவை. மேலே குறிப்பிட்ட நாடுகளில் போல இங்கு பாராளுமன்றம், நீதித்துறைஆகியன சுயாதீனமாக இயங்க முடியாது. இதனால் சீன அரசியம்முறைமையை ஒற்றை ஆட்சி எனக் குறிப்பிடலாம்.

இலங்கை

சமஷ்டி அரசியலமைப்பு முறையை எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாராநாயக்கா போன்ற சிங்களத் தலைவர்கள் ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்த விரும்பியிருந்தாலும் தற்போதுள்ள சிங்களத்தீவிரவாதிகள் அது நாடு  பிரிபட வழிவகுக்கும் என்ற அச்சத்தை மக்கள் மனதில் பரப்பி வருவ தால் இம் முறைக்கு சிங்கள மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழுந்திருக்கிறது. 
13 வது திருத்தம்
போர் முடிவுற்று தமிழர்கள் தோற்றுப்போய் விட்டார்கள் என்ற நிலையில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் காரணமாக வலியுறுத்தப்பட்டுவரும் 13 ஆவது திருத்தத்தைக்கூட நடைமுறைப்படுத்த சிங்கள தீவிரவாதிகள் மறுத்து வருகின்றனர். இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மாகாண சபைகளுக்கு ஓரளவு சுய நிர்ணய உரிமையைக் கொடுக்கிறது எனினும் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு இருக்கிறது.
19 வது திருத்தம்
தமிழருக்குச் சாதகமான அரசியல் தீர்வொன்றுக்கான சந்தர்ப்பங்கள் பல தடவைகள் வந்து போயிருந்தன. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய வகையில் வரைவு செய்யப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் 19 A எனப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தால் நிறைவேற்றப்படவிருந்த நிலையில் சிறிசேன தரப்பினால் இது குழப்பப்பட்டது. ‘சொன்னோம் பார்த்தீர்களா’ – ‘இதையாவது பெற்றுக்கொள்வோம்’ என்ற இரண்டு முகாம்களுக்குள் பிரிந்து நிற்கும் தமிழ் அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் கற்களை எறிந்துகொண்டு இருக்கிறார்கள். மீண்டுமொருதடவை சிங்களம் ஏளனமாகச் சிரித்துக்கொண்டு நிற்கிறது.
22 ஆவது திருத்தம்
வெளிநாட்டாருக்கு இலங்கை மீது எப்போதுமே ஒரு கண் எனபதை மனதில் வைத்துக்கொண்டு அங்கு ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒரு வேலி நிலமாவது கிடைக்குமா என இந்திய, சீன தரப்புகள் அங்கலாய்த்துக்கொண்டிருக்கும் நிலையில் சிங்களம் சீனத்தையே விரும்புகிறது என்பது நிஜமாகிவிட்டது. அதை வென்றெடுப்பதற்காக தாமே பெளத்த ஜன்ம பூமி என்றொரு முலாமைப் பூசிக்கொண்டு சிங்களத்தைத் தாஜா பண்ணுவதற்கு இந்தியா எடுத்துவரும் எத்தனங்களை ஜே.வி.பி. உடபட்ட சிங்கள தேசியவாதிகள் தொடர்ந்து தகர்த்து வருகிறார்கள். நாடு பொருளாதாரப் புயலில் சிக்குண்டு அமிழ்ந்துகொண்டிருந்தபோது இந்தியா எறிந்த தெப்பத்தைக்கைப்பற்றிக்கொண்டும் சிங்களம் இன்னமும் சீனாவின் மையலில் தான்
இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவைப் proxy ஆகப் பாவித்து தமது கால்களையும்இலங்கையில் ஊன்றிவிடலாமென முயற்சிக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குநாடுகளின் நெறிப்படுத்தலில் நடைபெற்றதாகக் கருதப்படும் அரகாலயாவும் அதைத் தொடர்ந்து பின்கதவால் வந்து முடிசூடிய பிரித்தாளும் மன்னன், ரணில் விக்கிரமசிங்கவும் எஜமானரின் முயற்சிகள் வெற்றிபெறுவதற்குக் காரணமாக இருக்கிறார்கள். ராஜபக்ச கட்சி, சஜித் கட்சி, கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகள் என அனைத்தையும் பிரித்தாண்டவர் இப்போது
புலம்பெயர்ந்த தமிழர்களிடையேயும் தன் ஆப்பைச் செருகிவருகிறார். இதுவெல்லாம் ஐ.நா.வைத் தாஜா பண்ணி சர்வதேச நிதியத்துடனான ஊடலைத் தீர்த்துக்கொள்ளவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ளவுமே. நிதியத்தின் பணம் கிடைத்ததும் வானரம் மீண்டும் மரத்தில் ஏறிக்கொள்ளும் என்பதில்
சந்தேகமில்லை.


22 ஆவது திருத்தம் முத்தூண்களை மீண்டும் நிமிர்த்திக்கொள்ளஎடுக்கப்படும் முயற்சி எனக் காட்டப்படுகிறது. நிறைவேற்றுஅதிகாரத்தை ஒழிப்பதற்கான சரத்து அதில் இல்லை. ராஜபக்ச ஆட்சியில் பொதுமக்கள் உரிமைகளுக்காக வாய் கிழியக்கத்திக்கொண்ட சட்டத்தரணிகள் சங்கம் உட்பட சிவில் சமூக அமைப்புகள் எதுவும் இதுபற்றி மூச்சுக் காட்டவே இல்லை. நிறைவேற்று அதிகாரம் ரணிலின் கையில் இருக்கவேண்டுமென்பதில் மேற்குநாடுகளும் கவனமாக இருக்கின்றன. அரகாலயா 2.0 மீண்டும் எழாது பார்த்துக்கொள்ள இப் பிரம்பு அவரது கைகளில் இருக்கவேண்டுமென சர்வதேசங்கள் விரும்புகின்றன. இதனால் தான் நவம்பர் 02 இல் நடைபெற்ற பெண்கள் ஊர்வலத்தை பொலிசார்
பலாத்காரமாக முடக்கிய பின்னரும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஹடாமி பொலிஸ் அமைச்சருக்குப் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். ரணில் மேற்கின் செல்லப்பிள்ளை என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது.அரகாலயா 2.0 வோ அல்லது பெளத்த சங்கங்களின் சமாஜமோ இப்போதைக்கு தெருவுக்கு இறங்கப் போவதில்லை. பயங்கரவாதத்
தடைச்சட்டம் என்ற உலக்கை ரணிலின் கைகளில் இருக்கிறது. அதைஅவர் வைத்திருக்க ஐ.நா.வே அனுமதித்திருக்கும் நிலைமை. எனவே சர்வ வல்லமை பொருந்திய மாட்சிமை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி இன்னும் இரண்டு வருடங்களுக்கு இருக்கத்தான் போகிறது. இருப்பினும் பொருளாராதக் கப்பலை மீண்டும் இயக்குவதற்கு அவரால் முடியாமல் இருக்கிறது. அதற்கு தமிழரென்ற மாலுமிகள் தேவை என்பதை அவர் உணர்ந்திருக்கிறார் போலத் தெரிகிறது. இதற்காகவேனும் தமிழருக்கு சாதகமானதொரு தீர்வைப்
பெர்றுத்தர அவர் முயலலாம். மேற்குநாடுகளுக்கும் அது உவப்பாக இருக்கும். இந்நிலையில் அவர் தமிழர் தரபுகளுடன் பேச அழைத்திருக்கிறார். இந்த வருடம் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வை முன்வைக்கப்போவதாக அவர் கூறியிருக்கிறார். ஜனாதிபதியின் அதிகாரமும், பயங்கரவாதத் தடைச்சட்டமும் அவரருகில் இருக்கும்வரை அவர் பயப்படத் தேவையில்லை.
ராஜபக்சக்கள் மீளெழுவதற்கான சகுனங்கள் தெரியவில்லை. ஈழத் தமிழருக்கு இன்னல் நேர்ந்தால் தமிழ்நாடு கிளர்ந்தெழுந்து அதனால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சம்
நேர்ந்துவிடுமென்பதற்காக இந்திரா அம்மையார் இலங்கையில் தலையிட்டதாக ஒரு கருத்துண்டு. ஆனால் இன்னல் நேர்ந்து ஈழத்தமிழர் வானுடையக் கதறியழுதபோதும் தமிழ்நாடு அசையவில்லை. இது இலங்கையின் நெஞ்சை நிமிர்த்தியது மட்டுமல்ல இந்தியாவின் பிரிவினை அச்சத்தையும் போக்கிவிட்டது. எனவே இன்னுமொரு ‘பருப்பு விமானம்’ ஈழவானில் பறந்து 13 ஐத் தூவுமென்ற நம்பிக்கையும் அறவே போய்விட்டது. இந்த வேளையில் முன்நாள் போராளிகள் சங்கத்தை டெல்லிக்கு அழைத்து இந்திய அரசு செய்யும் கசமுசாக்கள் இலங்கையை அச்சுறுத்துவதற்காகவென பல சாமானியர்கள் கருதுகிறார்கள். அமிர்தலிங்கம் காலத்துக்குப் பிறகு நமது பிரதிநிதிகளுக்கு தமிழ்நாடே இந்தியா.தமிழ்நாட்டு அரசியல்வாதிகளே முகவர்கள். இந்த விடயத்தில் நமது புதிய ‘சங்கம்’டெல்லி வரை போயிருப்பது மகிழ்ச்சி தான். சீனாவிபருப்பு விமானங்களைத் தூசிதட்டவேண்டிய நிலைமை டெல்லிக்கு ஏற்பட்டால் அதுவே தமிழருக்கான தீர்வாகவும் இருக்கலாம்.

சமஷ்டி தேவை / விருப்பம் / கிடைக்குமா? கனவுகாணும் உரிமையை மட்டும் எவராலும் பறிக்க முடியாது. தமிழரின் நெடுந்தூக்கம்கலையும்வரை கனவு நீடிக்கும் ஆனால் பலிக்காது. வாழ்க ——- (விரும்பிய வசனத்தால் நிரப்பிக் கொள்க).

இக்கட்டுரை ரொறோண்டோவிலிருந்து வெளிவரும் தமிழர் தகவல் ஆண்டுமலருக்காக எழுதப்பட்டு ஜூன் 2023 இல் வெளியானது (நன்றி: தமிழர் தகவல்)