பரமார்த்த ஞான(சேர)குருவும் பன்னிரு சீடர்களும்


மாயமான்

‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ தொடர்பாக ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க 13 முட்டாள்கள் கொண்ட செயலணி ஒன்று அமைக்கப்பட்டிருப்பது பற்றி வந்த செய்தி நாட்டைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. இதற்குத் தலைமை தாங்குபவர் ஊரெல்லாம் அறிந்த பரமார்த்த ஞான(சேர)குரு. பாவம் அந்தாள். அவரது பிறப்பை நாம் கிண்டலடிக்கக்கூடாது. அதே போல அவருக்குப் பின்னால் இருக்கும் பன்னிரு சீடர்களையும் நாம் மிகுந்த அனுதாபத்துடன் தான் பார்க்க வேண்டும். இவர்களின் ஆலோசனையைப் பெறும் ‘தல’ யின் கதையே வேறு.

ஆனால் இதில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியவர் வேறொருவர்; ராஜபக்ச குடும்பத்திற்கு முற்றிலும் தொடர்பில்லாதவர். ஆனால் ராஜபக்சக்களை ஆட்சிக்குக் கொண்டுவந்தவரும், தக்கவைத்திருப்பவரும் இவர் தான். சொல்லப் போனால் விடுதலைப் புலிகளின் போர் வெற்றிக்கு முக்கிய காரணமானவரும் இவரே. இவரது பெயர் சுரேஷ் சாலி அல்லது மேஜர் ஜெனெரல் சுரேஷ் சாலி. நமது பரமார்த்த குருவைக் கண்டுபிடித்தவரும், அவரை இயக்கும் சூட்சுமங்களை நன்றாக அறிந்தவரும், இப்போது நாடு பரபரக்கும் ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ செய்லணியைக் கூட்டிக் கொடுத்தவரும் இவரே என்கிறார்கள். பல இரத்தக் களங்களைக் கடந்து வந்த இவரைக் கண்டுபிடித்தது யாரென்பது இன்னும் மர்மம் தான்.

மேஜர் ஜெனெரல் சுரேஷ் சாலி

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி

இவர் இலங்கையைச் சேர்ந்த மலாய் வம்சாவளியைச் சேர்ந்தவர். இலங்கையின் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்தபோது இவர் பிரிகேடியாராக இருந்தார். கோதாபய ஆட்சி பீடம் ஏறியதும், டிசம்பர் 8, 2019 இல் மேஜர் ஜெனெரலாகப் பதவி உயர்த்தப்பட்டார். கோதாவுக்கு உதவி செய்தவர்களை அவர் எப்போதும் மறக்க மாட்டார் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். இவரது பதவி உயர்வை இலங்கை ஐக்கிய மலேய் அமைப்பு அப்போது கொண்டாடியிருந்தது.

சுரேஷ் சாலியைப் பற்றித் தெரிந்துகொள்ள மூன்று விடயங்களைக் கூறினால் தமிழர்களுக்குப் புரிந்துவிடும். ஒன்று ‘ஆழ ஊடுருவும் அணி’, ‘மாவிலாறு’, மற்றது ‘ஆவா’ வெட்டுக் குழு. சுரேஷ் சாலியின் பல படைப்புகளில் இவையும் அடங்கும். விடுதலைப் புலிகளின் தோல்விக்கு ஆழ ஊடுருவும் அணி மிகப்பெரும் காரணமாகவிருந்தது. மற்றயவைப் பற்றிப் பின்னர் வருவோம்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இராணுவத்துக்கு பல வியூகங்களை வகுத்துக் கொடுத்தது சாலி எனப் பரவலாக நம்பப்படுகிறது. அவர் ஒரு மலே முஸ்லிமாகவிருந்தும் துவேசம் கொண்ட சிங்கள இராணுவத்தில் அவருக்குரிய இடத்தைக் கொடுத்து வைத்தது கோதாபய ராஜபக்ச. இராணுவத் தளபதி சரத் பொன்சேகாகூட அவருக்கு அந்தளவு அந்தஸ்தைக் கொடுத்து வைத்திருக்கவில்லை. இறுதிப் போரை வென்றது சரத் பொன்சேகா அல்ல, கோதாபயவே என்ற நம்பிக்கை சிங்கள மக்களிடம் இன்னும் இருப்பதற்குக் காரணம் சுரேஷ் சாலி. ‘நம்பினோரைக் கைவிடும் குணமில்லாத’ கோதாபய தான் பதவியேற்றதும் முதல் செய்தது நல்லாட்சி அரசினால் மியன்பாருக்கு இராணுவத் தொடுப்பாளராக மாற்றப்பட்டிருந்த பிரிகேடியர் சுரேஷ் சாலியை மேஜர் ஜெனெரலாகப் பதவியுயர்த்தி இலங்கையின் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குப் பணிப்பாளராக நியமித்தது. இதற்குப் புலிகளைத் தோற்கடித்ததற்கு உதவி செய்தமை மட்டுமல்ல, ராஜபக்சக்களின் இரண்டாம் வருகையைச் சாத்தியமாக்கியதும் சுரேஷ் சாலி என்பதுவும் இன்னுமொரு காரணம்.

சுரேஷ் சாலி தமிழ், சிங்களம், ஆங்கிலம், மலே மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். அவரது தமிழ் மொழி வல்லமையால், பல தமிழ் பேசும் முஸ்லிம் இளைஞர்களையும், புலிகளுக்கு எதிரான பல தமிழ் இளைஞர்களையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குள் உள்வாங்கி விடுதலைப் புலி அமைப்புக்குள்ளும் ஊடுருவச் செய்தார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பல முஸ்லிம் இளைஞர்கள் இவரது அணியில் சேர்க்கப்பட்டனர். வன்னிக் காடுகளில் பரிச்சயம் கொண்ட இவர்களில் சிலரே ஆழ ஊடுருவும் அணியில் சேர்க்கப்பட்டார்கள். முன்னேறும் புலிகளின் படைகளுக்கு உணவு மற்றும் ஆயுத விநியோகத்தைத் துண்டித்து அவர்களைத் தாக்கியழிப்பது சாலியின் ஒரு உத்தி. கருணாவின் பிரிவின் பின்னர் வன்னிக் காடுகள் பற்றிய அவரது அறிவும், இராணுவத்தினரை ஏமாற்றப் புலிகள் பாவித்துவந்த உத்திகளும் சாலியின் வெற்றிக்கு உதவி புரிந்தன என்கிறார்கள்.பொதுபல சேனா, தேசிய தெளஹீத் ஜமாத்

சுரேஷ் சாலியின் இரண்டு முக்கிய ‘படைப்புக்கள்’ ஞானசேரர் தலைமையிலான பொது பல சேனா (BBS) மற்றது சாஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான ‘தேசிய தெளஹீத் ஜமாத்’ (NTJ). இந்த இரண்டு அமைப்புக்களின் தோற்றங்களும் ராஜபக்சக்களை ஆட்சியில் அமர்த்துவதற்கென உருவாக்கப்பட்டவை. இந்த இரண்டு அமைப்புக்களுக்கும் சுரேஷ் சாலியின் இராணுவ புலனாய்வுப் பிரிவே தேவையான நிதியை வழங்கியது. ஆனால் அதைவிட முக்கியமான பெரும் நிதி சவூதி அரேபியாவால் வழங்கப்பட்டது. இஸ்லாமின் தீவிர மதப் பிரிவான வஹாபிசத்தை இலங்கையில் காலூன்றச் செய்வதென்ற போர்வையில் அப்போதைய அமைச்சர் மஹ்மூட் ஹிஸ்புல்லா மூலமாக இந் நிதியை சவூதி அரேபியா வழங்கியிருந்தது.

இலங்கை ஐக்கிய மலே அமைப்பின் முகப் புத்தகத்தில் பிரி.சுரேஷ் சாலி

காத்தான் குடியில் அமைக்கப்பட்ட ‘ஷரியா பல்கலைக்கழகம்’ ஆரம்பத்தில் அதன் நிதி வழங்குனரான அரேபியாவின் மன்னர் மாலிக் அப்துல்லாவின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர் ‘பற்றிக்கலோ காம்பஸ்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்த ‘ஷரியா பல்கலைக் கழகம்’ தொடர்பாக முஸ்லிம் தலைவர்களிடையே பிணக்கு ஏற்பட்டதெனவும் இக்காலத்தில் தான் சாஹ்ரான் ஹாஷிமின் NTJ உருவாக்கம் பெற்றது எனவும் கூறப்படுகிறது. இந்த சாஹ்ரான் ஹாஷிமை முற்று முழுதாக இயக்கியதும் அதற்கு ஐசிஸ் இயக்கத்தின் தொடர்பு இருக்கிறது எனக் கதை திரிக்கப்பட்டதும் சுரேஷ் சாலி மியன்மாரில் இருந்த காலத்தில் என்கிறார்கள். தனது ‘தொடர்புகளைப்’ பாவித்து ஹாஷிம் போன்றவர்களின் மத உணர்வுகளுக்கு போலி ‘ஐசிஸ்’ தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்து உசுப்பேத்தினார் என்ற கதைகளும் உலா வந்தன. கொழும்பு சுற்று நகரங்களிலுள்ள இஸ்லாமிய மத தீவிரவாதிகளை ஒன்றிணைத்து சாஹ்ரானின் அமைப்பை வலுப்படுத்தியது சுரேஷ் சாலியின் இராணுவ புலனாய்வுப் பிரிவு. அதே போல சாஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவர்களது முஸ்லிம் தீவிரவாத இளைஞர்களுக்கான தென்னிலங்கை வாழிட வசதிகளைச் செய்துகொடுத்துப் பராமரித்து வந்ததும் இராணுவப் புலனாய்வுப் பிரிவு என்பது குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு முன்னரேயே ஷானி அபயசேகராவின் விசாரணைகளின்போது தெரியவந்திருந்தது. பின்னர் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களின் பின்னர் நடைபெற்ற விசாரணைகளில் அது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. கத்தோலிக்க திருச்சபைக்கு இது தெரிந்த படியால் தான் பேராயர் மல்கம் ரஞ்சித் ‘உண்மையைக் கூறும்படி’ மன்றாடுகிறார். இவை எல்லாமே சாத்தியமாகுவதற்கு காரணம், சுரேஷ் சாலி தனது ‘முஸ்லிம்’ அடையாளத்தைப் பாவித்திருந்தமையால் தான்.

சாஹ்ரான் ஹாஷிம் என்ற ஒரு சாதாரண இளைஞனை எப்படி ஒரு படுகொலையாளனாக ஆக்க முடிந்ததோ அதே போலத்தான் இன்னுமொரு தீவிர சிங்கள, மத உணர்வுள்ள ஒரு துறவியான ஞானசேரரையும் ஒரு தீவிர முஸ்லிம் எதிரியாக மாற்றினார் சுரேஷ் சாலி. 2012 இல் கம்பஹாவில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான சிங்களவரின் காடைத்தனங்களை முன்னின்று நடத்தியவர் ஞானசார தேரர். அதே போல் அளுத்கம, திகான ஆகிய நகரங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டங்களை இவரே முன்னின்று நடத்தினார். 2005 -2015, ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இனத் துவேஷம் மிகத் தீவிரமாக வளர்ந்தது. ஒரு பக்கத்தில் முஸ்லிம் தலைவர்கள் மஹிந்த ராஜபக்சவின் சொறிதல்களில் கிறங்கிப் போகவும், சொத்துக்கள் குவிக்கவும் மறு பக்கத்தில் சாதாரண அப்பாவி முஸ்லிம்கள் மீது ஞானசேரர் படை தாக்குதல்களைத் தொடர்ந்தது. அவரது பொது பல சேனைப் படைக்கு இன்னுமொரு முஸ்லிமான சுரேஷ் சாலி நிதி வழங்கிக்கொண்டிருந்தார்.பிரகீத் எக்னெலிகொட மாயம்

பிரகீத் எக்னெலிகொட என்பவர் ‘லங்கா ஈ-நியூஸ்’ என்ற பத்திரிகையில் கார்ட்டூன் வரைபவர். ஜனவரி 24, 2010 இல் இவர் காணாமற் போனார். இறுதிப் போரில் இரசாயன ஆயுதங்களை இலங்கை இராணுவம் பாவித்தது என ‘லங்கா ஈ-நியூஸ்’ பத்திரிகையில் எழுதியமைக்காக அவர் காணாமலாக்கப்பட்டார் எனவும், 2010 தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக இருந்தார் என்பதற்காக கடத்தப்பட்டார் எனவும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதே வேளை அவர் வெளிநாடு ஒன்றில் வாழ்கிறார் என ராஜபக்ச தரப்பு கூறிவருவதாகவும் இன்னுமொரு கதை. கிரித்தளையில் பணிபுரியும் கேணல் ஷாம்மி குமாரரத்னவே எக்னெலிகொடவின் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் எனப் பின்னர் அடையாளம் காணப்பட்டது. தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து சரத் பொன்சேகா மீது மூன்று கோர்ட் மார்ஷல் (இராணுவ நீதிமன்ற வழக்கு) நிறைவேற்றப்பட்டபோது பல மூத்த இராணுவ அதிகாரிகள், இறுதிப் போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்களைக் காட்டும் காணொளிகள், படங்கள் ஆகியவற்றை விற்றார்கள் அல்லது வெளிநாடுகளுக்குக் கொடுத்தார்கள் எனவும் அப்போது கூறப்பட்டது.

எக்னெலிகொடவின் ‘காணாமற் போன விடயம்’ தொடர்பாக 2016 இல், நல்லாட்சி அரசாங்க ஆட்சியில், ஹோமகம மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின்போது எக்னெலிகொடவின் மனைவி சந்தியா சாட்சியமளிக்கச் சென்றிருந்தார். அப்போது அங்கு கொண்டுவரப்பட்ட ஞானசேரர் ‘சந்தியா’ புலிகளுக்கு வேலை செய்யும் ஒருவர் எனவும் இலங்கையின் நீதிமன்றங்களும் புலிகளின் திட்டங்களுக்கமையவே வேலை செய்கின்றன எனவும் நீதிமன்றத்தில் ரகளை செய்தார். அவரை அங்கு அனுப்பியது சுரேஷ் சாலி எனப் பின்னர் கூறப்பட்டது. நீதிமன்றத்தை அவமதித்த காரணத்துக்காக ஞானசேரருக்கு, 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 2019 இல் கோதாபய ஆட்சியேறியதும் ஞானசாரர் விடுதலை செய்யப்பட்டார்.

‘ஆவா’ குழு

வடக்கில் வாள் வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் ‘ஆவா’ குழுவின் உருவாக்கமும் சுரேஷ் சாலியின் இன்னுமொரு சாதனை என்று கூறப்படுகிறது. இரண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களது மர்ம கொலைகளுடன் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குத் தொடர்புண்டு என்று தெரிந்தவுடன் சிறீசேன அரசு உடனடியாகச் சுரேஷ் சாலியைப் பதவியிலிருந்து நீக்கி பிரிகேடியர் விஜேந்திராவை நியமித்தது. சுரேஷ் சாலி மியன்மார் தூதரகத்துக்கு இராணுவத் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்கள்

இராஜபக்சக்களின் இராண்டாவது வருகையைத் திட்டமிட்டுச் செயலாற்றியதில் சுரேஷ் சாலிக்கு பெரிய பங்கு உண்டு. NTJ மற்றும் BBS அமைப்புக்களின் உருவாக்கமும் சிங்கள – முஸ்லிம் கலவரங்களும் இத்திட்டத்தின் அங்கங்களே. மத வெறியூட்டிய முஸ்லிம் இளைஞர்களைக் கொண்டு, தமிழர்கள் அதிகம் வழிபடும் தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் குண்டு வெடிப்புக்களை வெற்றிகரமாகச் செய்து முடித்ததில் சுரேஷ் சாலிக்கு முக்கிய பங்குண்டு எனவும், இராஜபக்சக்களின் மீள்வருகைக்கு அதுவே வழிவகுத்துக் கொடுத்தது எனவும் பரவலான சந்தேகங்கள் எழுந்துள்ளன. இலங்கையின் கத்தோலிக்க திருச்சபைக்கு இது தெரிந்த விடயம் என்பதாலேயே பேராயர் மல்கம் ரஞ்சித் இவ் விடயத்தில் உண்மையை அறிய மிகவும் விடாப்பிடியாகச் செயற்பட்டு வருகிறார்.சுரேஷ் சாலியின் அடுத்த நகர்வு

பெருந்தொற்று மற்றும் சீறற்ற முகாமைத்துவம் காரணமாக இலங்கை அரசாங்கம் இப்போது பொது மக்களின் பாரிய எதிர்ப்பை எதிர்நோக்கி வருகின்றது. இதிலிருந்து ராஜபக்சக்கள் தப்பிக்கொள்வதற்கு கோதாபய மீண்டும் ஒரு தடவை சுரேஷ் சாலியின் உதவியை நாடியிருக்கிறார் எனச் சில கொழும்பு ஊடகங்கள் பூடகமாகச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதன் வெளிப்பாடு தான் திடீரென அறிவிக்கப்பட்ட, ஞானசேரரின் தலைமையிலான ‘ஒரு நாடு, ஒரு சட்டம்’ சட்ட வரைவு.

இச் செயலணியின் தலைவர் ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி வருபவர். சிறை சென்றவர். அவரைச் சிறை மீட்டு அவர் தலைமையின் கீழ் நான்கு முஸ்லிம்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இச் செயலணி. ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைப் பற்றிப் பேசிய அளவுக்கு தமிழர்களைப் பற்றி அதிக வன்முறைகளைத் தூண்டவில்லை. அப்படியிருக்க அவரது தலைமையின் கீழ் தமிழர்கள் எவரும் தெரியப்படவில்லை என்பது அவரை இன்னுமொரு கலவரத்தை உருவாக்கவும், இம்முறை அது தமிழர்களுக்கு எதிரானதாக மாற்றிவிடவும் ராஜபக்சக்கள் தீர்மானித்திருக்கிறார்கள் என்பதற்குக் கட்டியம் கூறுகிறதா? இக் கலவரம் மூலம் தமது அரசாங்கும் எதிர்பார்க்கும் மக்கள் எதிர்ப்பைத் திசை திருப்ப அவர்கள் யோசித்திருக்கிறார்களா? அல்லது கத்தோலிக்க திருச்சபையுடனான மோதலொன்றுக்கு பெளத்த மகாசங்கங்களைத் திரட்டி உயிர்த்த ஞாயிறு பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள், ஊழல் பிரச்சினைகளுக்கு எதிரான மக்கள் போராட்டத்தைத் திசை திருப்ப முயற்சிக்கிறார்களா?

மறு பக்கத்தில், இப்படியான சட்டவாக்க விடயங்களில் நீதியமைச்சு சம்பந்தப்படுவதே வழக்கம். புதிய அரசியலமைப்பின் மூலமாக இவை அனைத்தையும் செய்து கொள்ளலாம். அப்படியிருக்க நீதியமைச்சருக்கே தெரியாமல் கோதாபய இச் செயலணியை எப்படி அறிவிக்க முடியும்? 2022 ஜனவரியில் புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென கடந்த வாரம் தான் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரீஸ் அறிவித்திருந்தார். அப்படியிருக்க இந்த ‘ஒரு நாடு, ஒரு சட்ட’ செயணி அறிவுப்பு ஏன் அவசரமாக அறிவிக்கப்பட்டது?

கோதாபய ராஜபக்சவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சுரேஷ் சாலியைப் பகைக்க எந்தவொரு அரசியல்வாதிகளும் இப்போது தயாரில்லை. அதனால் எல்லோரும் நன் முந்தி நீ முந்தி என்று கோதாபய புராணம் பாடிக்கொண்டிருக்கிறார்கள். இராணுவ வீரர் ஒருவருக்கு இரத்தக் களரிகள் பழக்கப்பட்டவை தான். ஆனால் சுரேஷ் சாலி முட்டாள்களை வெற்றிகரமாகக் கையாள்வதில் பழக்கப்பட்டவர். இந்த அரசாங்கத்தில் முட்டாள்கள் அதிகம். அதனால் தான் பயமாகவிருக்கிறது.