Sri Lanka

பயணத் தடைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுப் பதிவு!

704 அதிகாரிகள் சார்பில் குற்றப்பிரிவுத் திணைக்கள மூத அதிகாரி நடவடிக்கை மேற்கொள்கிறார்

டிசம்பர் 27, 2019

குற்றப்பிரிவைச் சேர்ந்த 704 அதிகாரிகளுக்கு வித்திக்கப்பட்ட பயணத்தடை மனித உரிமை மீறல் எனக்கூறி, அவர்கள் சார்பில் மூத்த காவற்துறை அதிகாரி ஒருவர் அரசாங்கத்தின்மீது இலங்கை மனித உரிமைகள் சபையிடம் (HRCSL), டிசம்பர் 24ம் திகதி, முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.

ஜநாதிபதி ராஜபக்ச தேர்தலில் வென்றவுடன், இன்னுமொரு அதிகாரியும், திட்டமிட்ட குற்றங்களுக்கான பிரிவின் தலைவருமான ஏட்றியன் நிஷாந்த சில்வா, தென் குடும்பத்துடன், அமைச்சுச் செயலாளரிடம் அனுமதி பெறாது வெளிநாடு சென்றமைக்காக அத் திணைக்களத்தைச் சேர்ந்த பலருக்கு இப் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

காவற்துறை அதிகாரிகளுட்பட்ட சகல அரசாங்க ஊழியர்களும் வெளி நாடு செல்வதானால் அமைச்சிடமிருந்து முன்னனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலர் மீதான விசாரணகளை மேற்கொண்டிருந்தவர்களில் சில்வா முக்கியமானவர். அவர் தற்போது சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரியிருப்பதாகக் கருதப்படுகிறது.

மனித உரிமைகள் செயலகத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில், அக் குறிப்பிட்ட அதிகாரி, இப் பயணத்தடை தமது நடமாட்டச் சுதந்திரத்தை மீறுவதாகவும் அதனால் அத் தடையை விலக்கும்படியும் கோரப்பட்டுள்ளது என அறியப்படுகிறது.

அதே வேளை, குற்றப்பிரிவுத் திணைக்களத்தின் மேலதிகாரி ஷானி அபயசேகரா டிசம்பர் 20 அன்று, அடிப்படை உரிமைகள் விண்ணப்பமொன்றை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். பணிப்பாளர் ஸ்தானத்திலிருந்து தன்னை பதில் இன்ஸ்பெக்டர் ஜெனெரலுக்கு உதவியாளராகப் பதவியிறக்கம் செய்தமை மனித உரிமைகள் மீறல் என அவர் அதில் முறைப்பாடு செய்துள்ளார்.

புதிய ஜனாதிபதி பதவியேற்றதும், ஷானி அபயசேகரா பதவியிறக்கப்பட்டு மாற்றப்பட்டார். இவரும், ராஜபக்ச நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடுகளின் மீதான விசாரணைகளை மேற்பார்வை செய்தவராவார்.

அதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் ஆகியவற்றை அவர் விசாரித்திருந்தார்.