பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படக்கூடாது ஆனால் மாற்றங்கள் செய்யப்படலாம் – ஜனாதிபதி விசாரணைக்குழு பரிந்துரை

இலங்கையில் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக இதற்கு முன்னர் நடைபெற்ற விசாரணைகள், வெளியிடப்பட்ட அறிக்கைகள் ஆகியவற்றை மீளாய்வு செய்து பரிந்துரைகளை மேர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை ஜூலை 20 அன்று ஜநாதிபதி செயலகத்தில் சமர்ப்பித்திருந்தது.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஹ்.எம்.டி. நவாஸ் அவர்களின் தலைமையில், இளைப்பாறிய பொலிஸ் அத்தியட்சகர் சந்திரா ஃபெர்ணாண்டோ, இளைப்பாறிய மாவட்டச் செயலாளர் நிமால் அபயசிறி, முன்னாள் யாழ்ப்பாண மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரை அங்கத்தவர்களாகக் கொண்ட இவ்வாணையம் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்திருக்கிறது. இதற்கான ஆணையை விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனவரி 21 மற்றும் பெப்ரவரி 12, 2021 இல் ஜனாதிபதி வழங்கியிருந்தார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனித உரிமை சட்ட மீறல்கள் மற்றும் இதர குற்றச்சாட்டுகள் பற்றி விசாரித்து அறிக்கையொன்றைத் தயாரித்து ஜனாதிபதிக்குச் சமர்ப்பிப்பது இவ்வாணையத்துக்கு இடப்பட்டிருந்த ஆணையாகும்.

1972 இல் கொண்டுவரப்பட்ட, தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மீளாய்வு செய்யும்படி அல்லது முற்றாக நீக்கி விடும்படி சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், பல உலக நாடுகளும் கேட்டுக்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜனாதிபதி மேற்குறிப்பிட்ட விசாரணை ஆணையத்தை நியமித்து பரிந்துரைகளை மேற்கொள்ளுமாறு கேட்டிருந்தார்.

இவ்வாணையம் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில், தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டியதில்லை எனவும், ஆனால் அதில் மாற்றங்கள் செய்யப்படலாமெனவும் இவ்வாணையம் பரிந்துரைத்துள்ளது. பிரித்தானியா உட்படப் பல நாடுகளிலும் காணப்படும் பயங்கரவாதத் தடை சம்பந்தமான அம்சங்களை உள்ளடக்கியதாக இச் சட்டம் திருத்தியமைக்கப்படலாம் என ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

தற்போதுள்ள இச் சட்டத்திலுள்ள 9, 11, 13 பிரிவுகளில் மாற்றங்களைச் செய்யலாமென ஆணையம் பரிந்துரைத்துள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம், ஒரு சந்தேக நபரை குறைந்தது மூன்று மாதங்கள் நீதிமன்றத்தில் பாரப்படுத்தாமல் தடுப்புக் காவலில் வைத்திருக்க முடியும். 9 ஆவது பிரின்படி வேண்டுமானால் இக் காலம் மூன்று மாதங்களிலிருந்து மேலும் நீடிக்கப்படலாம். இவ்வாணையத்தின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளின்படி, இக் கால அவகாசத்தை துரிதப்படுத்த வேண்டுமெனவும் அதே வேளை சந்தேக நபர்களைத் தடுப்புக் காவலில் வைத்திருக்காமல் அவரவர் வீடுகளிலேயே பாதுகாப்புகளோடு வைத்துப் பராமரிக்க வழி செய்யலாம் எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுளதென அறியப்படுகிறது.

அத்தோடு 13 ஆவது பிரிவிற்கமைய, மூன்று இனக்குழுமங்களிலிருந்தும், குறைந்தது மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு ஆலோசனைக் குழுவொன்றை அமைத்து ஜனாதிபதிக்கோ அல்லது பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சருக்கோ, பயங்கரவாதத் தடைச்சட்டப் பிரயோகம் தொடர்பாக ஆலோசனை வழங்கலாம் என்பதும் இந்னுமொரு ஆலோசனை.

இவ்விசாரணை ஆணையத்தின் முழுமையான அறிக்கை அடுத்த 6 மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவேண்டுமென்பது கட்டளையாகும். (கொலொம்பொ கசெட்)