Spread the love

ஜெனிவா: பெப்ரவரி 29, 2020

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷெல் பக்கலேயும் நேற்று பிற்பகல் ஜெனிவாவில் சந்தித்து ஐ.நா. தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியமை குறித்துப் பேசினார்கள்.

இவ் விலகல் தொடர்பாக, ஐ.நா. ஆணையாளர், இப் பிரேரணையை முன்வைத்த இணைத் தலைமை நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், மனித உரிமை அமப்புகள், செயற்பாட்டாளார்கள் எனப் பலரும் இலங்கை மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்கள். இதன் பெறுபேறாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா ஆணையாளர் மிஷேல் பக்கலேயைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

இதன் போது பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பாக அதை மீள்பரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஆணையாளருக்குத் தெரிவித்ததாக அறியப்படுகிறது. இத் தீர்மானத்தில் சில அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்பட முடியாதவை என்பதையும் அமைச்சர் ஆணையாளருக்கு இச் சந்திப்பின்போது வலியுறுத்தியதாகத் தெரிகிறது.


அத்தோடு, ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்ட காணாமற் போனவர்களுக்கான அலுவலகம், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகள் ஆகியனவும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்துக்கு ஏற்ற வகையில் தொடரப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்ததாகத் தெரிகிறது.

பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் விடயங்கள் போன்றவை, அரசியலமைப்பை மீறாதவாறு உருவாக்கப்படும் உள்ளகப் பொறிமுறை ஒன்றினால் மட்டுமே முன்னெடுக்கப்பட முடியுமென்பதையும் அமைச்சர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

ஊடக சுதந்திரம், துவேஷப் பேச்சுக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான நெருக்கடிகள் போன்ற விடயங்கள் பற்றிய அதிருப்தியையும் ஆணையாளர் அமைச்சருக்குச் சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.

இச் சந்திப்பின்போது உள்ளக ராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வெளிவிவகாரச் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, மூத்த, பதில் சட்டமா அதிபர் நெரின் புள்ளே மற்றும் ஐ.நா.வின் பிரதி நிரந்தரச் செயலாளர் டயானி மெண்டிஸ் ஆகியோரும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவுடன் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Print Friendly, PDF & Email
Related:  கோவிட்-19 | விசாரணை வேண்டுமென்றதற்காய் அவுஸ்திரேலியாவைத் தண்டிக்கும் சீனா!