பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்களைத் தடுத்துவைக்க புதிய முகாம் – கோதாபய வர்த்தமானி மூலம் அறிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்களைத் தங்கவைப்பதற்கான புதிய தடுப்புமுகாமொன்றை நிர்மாணிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பொன்றை, ஜூன் 4ம் திகதி, ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

கிரிலப்பனையில் (கொழும்பு 05), தற்போது அமைந்திருக்கும் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினால் பாவிக்கப்படும் கட்டிடமே புதிய தடுப்பு முகாமாக மாற்றியமைக்கப்படவிருக்கிறது.

கோதாபய ஆட்சிக்கு வந்ததிலிருந்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சிறுபான்மைத் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிய கட்டிடத் திறப்பின் மூலம் இந்நடவடிக்கை மேலும் விரிவாக்கப்படவிருக்கிறதோ என்ற சந்தேகமும் அச்சமும் சிறுபான்மை இனங்களின் மனங்களில் எழுவதைத் தவிர்க்க முடியாது என மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் (1979), 9ஆவது பிரிவின் 1ம் உபபிரிவின்படி “ஒருவர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என அமைச்சர் சந்தேகித்தால், அவரை 3 மாதங்களுக்கு மேற்படாத காலத்துக்குத் தடுத்துவைக்கும்படி அமைச்சர் ஆணையிட முடியும். அமைச்சரின் நிலைப்பாட்டைப் பொறுத்து இது ஒவ்வொரு 3 மாதங்களும் புதுப்பிக்கப்பட்டு மொத்தம் 18 மாதங்கள் வரை நீடிக்கப்படலாம்”

இச் சட்டத்தை மீளப்பெறுவதற்கு அல்லது மாற்றுவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் சபை தீர்மானம் 30/1 இன் பிரகாரம், முந்தைய அரசு இணங்கியிருந்தது. இருப்பினும், அது மாற்றியமைக்கப்பட்டால் மேலும் பாரதூரமான வகையிலும் மாற்றப்படலாமெனவும் எனவே அதை அறவே நீக்கிவிடவேண்டுமெனவும் தமிழர் தரப்பு கோரிக்கையை முன்வைத்திருந்தது.