பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) | திருத்தம் அல்லது புதிய சட்டம்?


நல்லாட்சி அரசாங்கத்தின் வரைவைப் பின்பற்றலாம்?

ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. மற்றும் மனித உரிமை அமைப்புகளின் அழுத்தம் காரணமாக தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் திருத்துவதற்கு அல்லது புதிதாக இன்னுமொரு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை அரசு முயற்சிகளை எடுத்துவருகிறது.

இதற்காக ஜனாதிபதியின் பணிப்பின் பேரில், பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தலைமையில் பத்துப் பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

1979 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் 48 இலுள்ள விமர்சனத்துக்குரிய சில அம்சங்களை நீக்குவது அல்லது முந்திய நல்லாட்சி அரசினால் வரையப்பட்ட புதிய பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தை (counter-terrorism law) உபயோகிப்பது தொடர்பாக இக் குழு ஆராயவுள்ளதாக அறியப்படுகிறது.

ஐ.நா.மனித உரிமைகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை தற்போதுள்ள சட்டத்தை சர்வதேச தரத்துக்கு நிகராக மாற்றியமைக்கும்படி அழுத்தம் கொடுத்து வருகின்றன.

கோதாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதும், டிசம்ப்ர் 2019 இல், நல்லாட்சி அரசாங்கத்தினால் வரையப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட வரைவை நீக்கிக் கொண்டது.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்திலுள்ள, சர்வதேச நியமங்களுக்கு முரணான அம்சங்களை ஆராய்ந்து அவற்றுக்கு மாற்றீடுகளை முன்வைக்கும்படி இதை ஆராயும் விசேட குழுவுக்கு ஜனாதிபதியின் செயலாளர் விஜேசுந்தர பணித்துள்ளார். இதன் பிறகு இக்குழு தனது அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸின் தலைமையிலான எட்டுப் பேர் கொண்ட அமைச்சவைக்குழுவுக்கு வழங்கும். இந்த அமைச்சரவைக் குழுவில் தினேஷ் குணவர்த்தன, டக்ளஸ் தேவானந்தா, டல்லஸ் அழகப்பெருமா, பசில் ராஜபக்ச, உதய கம்மன்பில மற்றும் அலி சப்றி ஆகியோர் அடங்குவார்கள்.