பயங்கரவாதத் தடைச்சட்டப் பிரயோகத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பு!
ஜி.எஸ்.பி.+, சர்வதேச நாணய நிதிய உதவிகளுக்கு ஆபத்து
உள்நாட்டு, வெளிநாட்டு எதிர்ப்புகளையும் மீறி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்டத் தலைவர்களைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் பதஹ்வியை வகிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கையெழுத்திட்டுள்ளார். இவ்விடயம் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு முரணானது எனவும் இலங்கையில் ஜனநாயகம் சீரழிந்துபோவதற்கு இது வழிவகுக்கப் போகிறது எனவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் எச்சரித்துள்ளார். அதே வேளை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகத்துக்கு இலங்கை அரசு விதித்திருந்த தற்காலிக தடை பற்றி அது கவனத்தில் கொள்ளவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவும் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை ஆகியனவும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்காவிட்டால் இலங்கையின் இறக்குமதிகளுக்கு வழங்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இரத்துச்செய்யக்கூடுமென சென்ற வருடம் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை எச்சரித்திருந்தது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகத்தை உடனடியாக நிறுத்தவேண்டுமென மார்ச் 2022 இல் ஐக்கியநாடுகள் மனித உரிமைச்சபையின் விசேட தூதுவர் கேட்டுக்கொண்டதற்கு பதிலளித்த அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மிகவும் அவசரமான தேவைகளைத் தவிர தாம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பிரயோகிக்கப் போவதில்லை எனவும் இது குறித்து பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரட்ண இச்சட்டத்தின் பிரயோகத்திற்கு தற்காலிக தடையொன்றுக்கு உத்தரவிட்டிருள்ளார் எனவும் ஜூன் 2022 இல் தெரிவித்திருந்தார்.
சமீபத்த்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குசெய்தார்கள் எனக்கூறி பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய மாணவ தலைவர்களான வசந்தாஅ முதலிகே, கல்வேவ சிறிதம்ம தேரர், ஹஷந்தா ஜாவந்த குணதிலகா ஆகியோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 18, 19 ஆகிய திகதிகளில் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள்.
இவர்களின் கைதுகள் பற்றி குறிப்பிடும்போது சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பணிப்பாளர் யாமினி மிஷ்ரா “ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைதுசெய்வதற்கு மிக மோசமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பாவிப்பதன் மூலம் இலங்கை மேலும் கீழ்த்தரமான நிலைக்குச் சென்றிருக்கிறது. பயங்கரவாதத் தடைச்சட்டம் இலங்கையில் மிக மோசமாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வரலாறு உண்டு. அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள், ஊடகவியலாளர்கள், சிறுபான்மை இனங்கள் ஆகியோரைக் கட்டுப்படுத்தும் கருவியாகப் பயன்பட்ட இச் சட்டத்தை நீக்கும்படி சர்வதேசங்க்ஜள் குரல்கொடுத்தமை சரியானதென்று இப்போது புரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மூவரின் கைது தொடர்பாக ஐ.நா. விசேட தூதுவர் மேரி லோலர் குறிப்பிடுகையில் இது இலங்கையின் ஒரு கரிநாளாகக் கருதப்படுமெனத் தெரிவித்துள்ளார். அத்தோடு இக் கட்டளையைப் பிறப்பிக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க கையெழுதிடக்கூடாது என அவர் கேட்டிருந்தார். இதே வேளை ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தியாளர் குழுவும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகம் இலங்கையை பொருளாதார ரீதியில் மேலும் பாதகமான நிலைமைக்கு இட்டுச் செல்லும் என எச்சரித்திருந்தார். இவை எல்லாவற்றையும் உதாசீனம் செய்துவிட்டு ரணில் விக்கிரமசிங்க மூவரையும் கைதுசெய்வதற்கான அதிகாரத்தை பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பாவித்து நடைமுறப்படுத்தியுள்ளார்.