பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குங்கள் – இலங்கை அரசுக்கு கனடிய தமிழர் பேரவை 10 அம்சக் கோரிக்கை

போர் முடிவுற்று 13 வருடங்களாகியும் தமிழ் மக்களது அபிலாட்சைகள் குறித்து இலங்கை அரசு கவனமெடுக்கத் தவறியுள்ளமையைச் சுட்டிக்காட்டி இலங்கை அரச தலைவர்கள் மற்றும் பொறுப்புள்ள அதிகாரிகளுக்கு கனடிய தமிழர் பேரவை கடிதமொன்றை அனுப்பியுள்ளது. கனடிய தமிழர் பேரவையின் உறுப்பினரும் கனடிய ஊடகவியலாளர்களில் ஒருவருமாகிய பஞ்சலிங்கம் கந்தையா அவர்கள் மூலம் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு நேரடியாக கொடுக்கப்பட்ட இக் கடிதத்தில் கனடிய தமிழர் பேரவையால் முன்வைக்கப்பட்ட 10 அம்சக் கோரிக்கை பட்டியலிடப்பட்டுள்ளது.

2019 இல் பதவியேற்ற ராஜபக்ச அரசு மீள்பரிசீலனை செய்த புலம்பெயர் தமிழர் அமைப்புகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த கனடிய தமிழர் பேரவையை ரணில் விக்கிரமசிங்க அரசு ஆகஸ்ட் 2022 பட்டியலிலிருந்து நீக்கியிருந்தது. இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து கனடிய தமிழர் பேரவை தனது 10 அம்சக் கோரிக்கையை இலங்கை அரசுக்கச் சமர்ப்பித்திருக்கிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கை சென்றிருந்தபோது ஊடகவியலாளர் திரு பஞ்சலிங்கம் கந்தையா அவர்கள் பேரவையின் கடிதத்தை அமைச்சர் ராஜபக்சவிடம் சமர்ப்பித்திருந்தார்.

இது குறித்து கனடிய தமிழர் பேரவையினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை இங்கே தரப்படுகிறது.