பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும்படி கோரி நாடு தழுவிய ரீதியில் கையெழுத்து வேட்டை

சுமந்திரன், ஜோசெப் ஸ்டாலின், சேயோன் ஆகியோர் முன்னெடுப்பு

1979 இல் தற்காலிக நடவ்டிக்கையெனக் கூறி 6 மாதங்களுக்கு மட்டுமெனக் கொண்டுவரப்பட்டு 40 வருடங்களாகப் பிரயோகத்திலிருந்துவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக்கோரி நாடு தழுவிய ரீதியில் கையெழுத்து இயக்கம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சி (Ilankai Thamil Arasuk Katchi), எல்லோருக்கும் நீதி (Justice for All) மற்றும் தொழிற்சங்கங்கள், இளைஞர்கள் முன்னணியின் கூட்டமைப்பு (Alliance of Trade Union & Mass Youth Organizations) ஆகிய அமைப்புகள் இணைந்து இவ்வியக்கத்தை ஆரம்பித்துள்ளன. இதன் ஒழுங்கமைப்பாளர்களாக கே.செயோன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஜோசெப் ஸ்டாலின் ஆகியோர் செயற்பட்டு வருகிறார்கள்.

“இந்த நாற்பது வருட காலத்தில் அரசாங்கங்கள் தமக்கு எதிராந கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களை நசுக்கவே இச் சட்டத்தைப் பாவித்து வந்துள்ளன. இது இப்போதும் நடைமுறையிலுள்ளது. காலிமுகத் திடலில் நடைபெற்ற அமைதியான அரகாலயா போராட்டத்தை நசுக்க இப்போது அது பாவிக்கப்படுகிறது” என இவ்வொழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் சனியன்று (10) ஆரம்பித்துவைக்கப்பட்ட இவ்வியக்கம் அம்பாந்தோட்டையில் முடிவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

“இதன் மூலம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதே எமது நோக்கம். இதில் அனைவரும் இணைந்து தமது கையெழுத்துக்களைப் போட்டு எமது நோக்கத்தை நிறைவு செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அமைப்பாளர்கள் பொதுமக்களிடம் கேட்டுவருகிறார்கள்.