பயங்கரவாதத் தடைச்சட்டத் திருத்தங்கள் ஆழமற்றவை – மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடல்
இலங்கை அரசினால் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத் திருத்தம் போதுமான அளவுக்கு ஆழமானது அல்ல எனவும் அது சர்வதேச அழுத்தங்களைச் சமாளிக்கவெனப் பூசி முழுகப்பட்டு அவசரம் அவசரமாகப் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இச் சட்டத்தின் மிக மோசமான பகுதிகளை இத் திருத்தம் தொட்டுக்கொள்ளவே இல்லை என ஐ.நா.மனித உரிமைகள் நிபுணர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியனவும் தெரிவித்துள்ளன.
பாராளுமன்றத்தில் அவசரம் அவசரமாக நிறைவேற்றும் நோக்கோடு அரசாங்கம் குழு விசாரணைகளை (committee hearings) அனுமதிக்கவில்லை. இதனால் இத் திருத்தங்கள் தொடர்பாக மனித உரிமைகள் அமைப்புக்களின் ஆலோசனைகளை அது கருத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை. அது நடைபெற்றிருந்தால் இச் சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைய மாற்றுவதற்கு முயன்றிருக்கலாம்.
இத் திருத்தங்களின் பின்னரும் சந்தேகநபர் ஒருவரைக் குற்றப்பதிவு ஏதுமின்றி, ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்காது, பிணையில் செல்ல அனுமதிக்காது, ஒரு வருடம் மட்டும் தடுத்து வைக்க முடியும். துன்புறுத்தலுக்கு எதிரான பாதுகாப்புக்களை வழங்காமல் பொலிஸ் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்புக்களை வழங்குவதற்கு இது வழி செய்கிறது. பொருளாதார நெருக்கடியால் மக்களிடமிருந்து அழுத்தங்களை எதிர்நோக்கும் கோதாபய நிர்வாகம் சர்வதேச உதவிகளைப் பெறும்பொருட்டு அவசரம் அவசரமாக இக் கண்துடைப்பு திருத்தங்களை நிறைவேற்றித் தாம் ‘முன்னேற்றங்களை’ ஏற்படுத்தியுள்ளதாகத் தம்பட்டமடித்துள்ளது எனக் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக மேலெழுந்தவாரியான தடுத்துவைப்பு, துன்புறுத்தல் ஆகியவற்றின் மூலம் பெரும்பாலும் சிறுபான்மை இன மக்களையும், சிவில் சமூகத்தினரையுமே அரசாங்கம் நசுக்கி வருகிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட அன்றுகூட மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு வரும்படி பணிக்கப்பட்டுள்ளமை சட்டபூர்வமான செயற்பாடுகளைக் கூடப் ‘பயங்கரவாதத் தடுப்பு’ என்ற போர்வையில் அரசு தடுக்க முனைவதையே காட்டுகிறது. மேலும் ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்ளவேண்டி வருமென்பதால் இவ்வாணை பின்னர் திருப்பிப் பெறப்பட்டுவிட்டது.
கடந்த வாரம் மட்டுவிலில் நடைபெற்ற காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் பொலிஸ் நடவடிக்கைகளினாம் மோசமாக நசுக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்த அமெரிக்க அரச நிர்வாகங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நியூலண்ட் கண்காணிப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் தடுத்து வைப்பு, மிரட்டல் ஆகியவற்றை நிறுத்தும்படி அரசாங்கத்திடம் கேட்டிருந்தார்.
மிகவும் நெருக்கடியான பொருளாதாரச் சூழலில் சர்வதேச உதவிகளைக் கேட்டு நிற்கும் இலங்கை அரசாங்கம், உண்மையான மனித உரிமைகள் திருத்தம், துர்ப்பிரயோகங்களை நிறுத்துதல், நீதியை நிலைநிறுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே வெளிநாடுகளிலுள்ள நண்பர்களும், பங்காளிகளும் அந்நாட்டிற்கு உதவமுடியுமென்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.