பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரும் கடிதத்தை சுமந்திரனிடம் சஜித் பிரேமதாச கையளித்தார்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக்கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடெங்கும் கையெழுத்து இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தனது நிலைப்பாட்டை விளக்கும் கடிதமொன்றை இன்று (மார்ச் 10) கூட்டமைபின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனிடம் கையளித்தார்.

கடிதமாக வரையப்பட்ட இவ்வறிக்கையில், சர்வதேச நியமங்களுக்கு அமைய யங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டுமென எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயவும் கோரிக்கையை முன்வைக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

“43 வருடங்களுக்கு முன்னர் இயற்றப்பட்ட இச் சட்டம் பல பலவீனங்களைக் கொண்டிருக்கிறது. இதைப் பாவித்து அரசியலில் முரண்படுபவர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். போர் முடிந்து 12 வருடங்கள் நிறைவாகியும் இச் சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. இலங்கயின் நீதி பரிபாலனத்தை மழுங்கடித்து அதன் அதிகாரங்களைக் குறைக்கும் இச்சட்டம் முற்றாக அகற்றப்பட வேண்டும்” என இக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.