NewsSri LankaWorld

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பாவனையைக் குறையுங்கள் – இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தல்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளாய்வு செய்வதற்கு முதல் மனித உரிமைகள் போன்ற விடயத்தில் சில முன்னேற்றங்களைச் செய்யவேண்டும்

கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இலங்கை அரசு, சர்வதேச நியமங்களுக்கு அமையத் திருத்தங்களை மேற்கொள்ள எடுத்த முயற்சிகளை வரவேற்கும் அதே வேளை, அது நிறைவேறும்வரை அச்சட்டத்தின் பிரயோகத்தைக் குறைத்துக்கொள்ளும்படி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்கு ஆணித்தரமாகக் கூறியுள்ளது.

நேற்று (பெப்ரவரி 08) பிரஸ்ஸெல்ஸில் நடைபெற்ற இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான 24 ஆவது சந்திப்பின்போது தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான, அளவிடக்கூடிய, உறுதியான மற்றும் சரிபார்க்கக்கூடிய பெறுபேறுகளை இலங்கையில் அடைவதே தமது நோக்கம் என இலங்கையின் தரப்பு தெரிவித்திருந்தது. இதற்கு ஆதாரமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மீது இலங்கை அரசினால் வர்த்தமானி அறிக்கை மூலம் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்வைக்கு வழங்கப்பட்டிருந்தன. இவற்றைப் பரிசோதித்த ஒன்றியம் அவற்றில் முக்கிய அம்சங்களின் குறைபாடுகள் பற்றிய தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் சர்வதேச நியமங்களுடன் உடன்படக்கூடிய திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படும்வரை அச் சட்டத்தின் பிரயோகத்தைக் குறைத்துக்கொள்ளும்படி இலங்கைக்கு மிகவும் கடுமையாக அறிவுறுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகளுக்கேற்ப தாம் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக இலங்கை வாக்குறுதியளித்திருந்தது. இச் சந்திப்பைத் தொடர்ந்து இருதரப்பும் இணைந்து அறிக்கையொன்றை (கீழே இணைக்கப்பட்டுள்ளது) வெளியிட்டுள்ளன.

இக் காலகட்டத்தில், பொலிஸ் மா அதிபர் விடுத்த கட்டளைகளுக்கிணங்க, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இலங்கை தொடர்ந்து குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அதே வேளை, இச்சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்படாது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போரை உடனடியாக விடுதலை செய்வதற்கு உரிய நடைமுறை, நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐ.ஒ. இலங்கையைக் கேட்டிருக்கிறது.

சுமுகமான சூழ்நிலையில் நடைபெற்ற் இக்கூட்டத்தில் நல்லிணக்கம், மனித உரிமைகள், வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம், சூழல், பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், சிறுபான்மை இனங்கள், பெண்கள், குழந்தைகள், தொழிலாளர், கருத்து வெளியிடுதல், ஒன்றுகூடல் உரிமைகள் போன்ற பலவும் கலந்துரையாடப்பட்டன.

நல்லிணக்கம் தொடர்பான விடயங்களில், குறிப்பாக காணாமற் போனவர்களுக்கான அலுவலகம் (OMP), இழப்பீடுகளுக்கான அலுவலகம் (OR), தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் (ONUR) மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் (HRCSL), சுயாதீன நிறுவனங்கள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எடுத்துக்கூறியிருந்தது.

ஜெனிவா மனித உரிமைகள் ஆணையம் மற்றும் அதன் பொறிமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், இலங்கையில் சுயாதீன நிறுவனங்களின் சுதந்திரமான செயற்பாடுகளை அனுமதித்தல், சிவில் சமூகங்களும், பல்லின மக்களும் செயற்படுதலுக்கான வெளிகளை வழங்குதல் போன்ற விடயங்கள் மற்றும் நீதித்துறை, இன நல்லிணக்கம் போன்ற விடயங்களில் இலங்கையின் ஒத்துழைப்பும் ஊடாடலும் அவசியம் என்பதையும் ஒன்றியம் வலியுறுத்தியிருந்தது.

இதே வேளை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதியாகும் பல பொருட்களுக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருக்கும் தடைகளை நீக்க்குமாறு ஒன்றியம் மிகவும் இறுக்கமான வேண்டுகோளொன்றையும் விடுத்திருந்தது. வெளிநாட்டுச் செலாவணிப் பற்றாக்குறையால் ஒன்றிய் அநாடுகளிலிருந்து இறக்குமதியாகௌம் பல பொருட்களின்மீது இலங்கை தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இச்சந்திப்பைத் தொடர்ந்து அவற்றைச் சாதகமாகப் பரிசீலனை செய்வதாக உறுதியளித்திருக்கிறது.

ஜி.எஸ்.பி. பிளஸ் விடயத்தில் வரிச்சலுகையைப் பெறவிரும்பும் நாடுகள், மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சூழல் பாதுகாப்பு, நல்லாட்சி தொடர்பான 27 சர்வதேச உடன்படிக்கைகளை அனுசரித்துப் போவது அவசியமானது. கடந்த செப்டெம்பர் 2021 இல் இலங்கை சென்றிருந்த ஐ.ஒ. கண்காணிப்புக்குழு தயாரித்தளித்த அறிக்கையில் பல போதாமைகள் இருந்தது எனவும் அவற்றின் மீதான புதிய தகவல்கள் ஏதும் இருந்தால் இலங்கை அவற்றைச் சமர்ப்பிக்கலாம் எனவும் ஒன்றியம் இலங்கைக்கு அறிவிறுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

இச் சந்திப்பிற்கு ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கைச் சேவைகளின் பதில் நிர்வாகப்பணிப்பாளர் செல்வி பவோலா பொம்பலானி மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேயும் இணைத்தலைமை வகித்தனர். இரு தரப்பினதும் அடுத்த சந்திப்பு 2023 இல் கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.