NewsSri Lanka

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பாவனையை உடன் நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவரும்படி எழுப்பப்பட்ட கோரிக்கைகளினால் இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லையாதலால் அதை மீளப்பெறுவதோடு அது வரை அதன் பாவனையை உடனடியாக இடைநிறுத்தும்படி சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அரசைக் கேட்டுள்ளது.

கொழும்பைச் சேர்ந்த பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹேஜாஸ் ஹிஸ்புல்லாவின் பிணை விடுதலை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசியாவுக்கான பணிப்பாளர் யாமினி மிஷ்ரா மேற்படி கருத்தைத் தெரிவித்துள்ளார்.

“ஹேஜாஸ் ஹிஸ்புல்லாவைப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்திருப்பதை வரவேற்கும் அதே வேளை ‘பயங்கரவாதத்தின் பேரில்’ கைதுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் இன்னும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களையும் விரைவில் பிணையில் செல்ல அனுமதிப்பதுடன், குற்றம் சாட்டப்படாதவர்கள் சர்வதேச சட்டங்களுக்கமையை உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும். அதே வேளை பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மீளப்பெறுவதுடன், அதன் பிரயோகத்தின்மீது உடனடியாகத் தடையுத்தரவு போடப்படவேண்டும்” என மிஷ்ரா கேட்டுள்ளார்.

கொழும்பைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான ஹேஜாஸ் ஹிஸ்புல்லா ஏப்ரல் 2020 இல் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரை நீதிமன்றத்துக்கு கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படும் ஒவ்வொருதடவையும் அவர் மீது ஆதாரமற்ற குற்றங்களை பொலிசார் பதிவுசெய்துவந்தனர்.

இதே போன்று இன ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் கவிதைகளை எழுதினார் என்ற குற்றச்சாட்டுகளுடன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த அஹ்னாஃப் ஜசீம் என்ற இளைஞர் 19 மாதங்களுக்குத் தடுத்துவைக்கப்பட்ட பின்னர் இரண்டு மாதங்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டிருந்தார்.