பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளிலும் தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டிருப்பவர்களின் பெயர்களை உடனடியாகத் தருமாறு இலங்கையின் மனித உரிமைகள் ஆணையம் பொலிஸ் மா அதிபருக்கு அவசரக் கடிதமொன்றை எழுதியுள்ளது.
“நீங்கள் ஏற்கெனவே அறிந்ததன்படி, இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தின் 1996 சட்ட பிரிவு இல. 21இன் உப பைரிவு 11(d) யின் பிரகாரம் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களின் நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணிக்க்கும் பொறுப்பு எமக்குண்டு. எனவே தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அனைவரது தகவல்களையும் எமக்குத் தரவேண்டும்” என அக்கடிதத்தில் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முதல், அக்டோபர் 28 அம்று ஆணையம் இதே போன்றதொரு கோரிக்கையை பொலிஸ் மாஅதிபருக்கு அனுப்பியிருந்தது எனினும் அதற்கு பதிலேதும் கிடைத்திருக்கவில்லை.
“தேசிய பொலிஸ் ஆணையத்தின் இறுதிக் கூட்டத்தின்போது குற்றஞ்சாட்டப்பட்ட பலர் அவர்களது விருப்பங்களுக்கு எதிராக வாக்குமூலங்களை அளிக்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள் என முறைப்பாடு செய்திருந்தது பற்றிக் கூறியிருந்தோம். அவர்களைத் தலைமையலுவகத்துக்கு அடிக்கடி கொண்டுசென்று அங்கு ஏற்கெனவே சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்ட வாக்குமூலக் கடிதங்களில் கையெழுத்து வைக்கும்படி அவர்கள் வற்புறுத்தப்படுவதாகவும், கையெழுத்து வைத்தால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள், மறுத்தால் பொய்க்குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்படும் என மிரட்டப்படுவதாகவும் நான் ஏற்கெனவே கூறியிருந்தோம்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.