பயங்கரவாதத்தை அழித்ததுபோல் ஆசிரியர் வேலைநிறுத்தையும் அழிப்பேன் – அமைச்சர் வீரசேகரா சூளுரை!
“ஆசிரியர் வேலைநிறுத்தம் நீதியானதோ இல்லையோ அதை நான் நியாயப்படுத்தவில்லை என்பதோடு பயங்கரவாதத்தை அழிப்பதற்கு இணையாகவே அதையும் நான் பார்க்கிறேன்” என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரா சூளுரைத்துள்ளார்.
” பிரதான பாடசாலைகளிலிருந்து சில ஆசிரியர்கள் நேற்று என்னை வந்து சந்தித்திருந்தார்கள். அப்போது, ‘தாம் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை எனவும், மாணவர்களுக்கு தொடர்ந்தும் இணையவழியாகக் கற்பித்து வருவதாகவும்’ தெரிவித்திருந்தார்கள். இப்படியான ஆசிரியர்கள் பலருக்கு வேலைநிறுத்தத்தைத் தலைமைதாங்குபவர்கள் கொலை மிரட்டல் செய்திருக்கிறார்கள்.
பல ஆசிரியர்கள் சுய விருப்பில் அல்லாது யாரோ ஒருவரது அழுத்தத்தின் பேரிலேயே இவ் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள். சில ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காது தொடர்ந்து மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து வருகிறார்கள். எனக்கு வந்த புகார்களை நான் உடனேயே புலன் விசாரணைப் பிரிவிடம் கொடுத்து அந்நபர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளேன்.
பயங்கரவாதத்தை நாம் அழித்தோம் என்பது உங்களுக்குத் தெரியும். அது நியாயமானதோ இல்லையோ, பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவில்லை என்பதால்தான் நாம் அதனை அழித்தோம். அதே போலத்தான் ஆசிரியர் வேலை நிறுத்தமும். அதற்கான காரணம் நியாயமானதோ இல்லையோ, நாம் அதை நியாயப்படுத்தவில்லை. பாடசாலைக் குழந்தைகள் இதனால் துன்புறுகிறார்கள். இதனால் தான், வேலைநிறுத்தம் செய்பவர்களை நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் ” ஓரிரு நபர்களின் அழுத்தத்தால், தயவு செய்து வேலை நிறுத்தம் செய்யாதீர்கள்.அது மாணவர்களின் கல்வியைப் பாதிக்கிறது. இவ் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கும் இரண்டு நபர்களை நாம் அறிவோம். அதில் ஒருவர் காசு துவைப்பில் குற்றம் சுமத்தப்பட்டவர். மற்றவர் மீதும் பாரதூரமான குற்றச்சாட்டுகள் உண்டு” என அமைச்சர் வீரசேகர விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.