World

பதவி விலகுமுன் மரணதண்டனைகளைத் துரிதப்படுத்தும் ஜனாதிபதி ட்றம்ப்!


ஜனவரி 20, 2021 இல் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன் மத்திய சிறையில் மரண தண்டனைக்காகக் காத்திருக்கும் கைதிகளின் தண்டனைகளை நிறைவேற்றுவதை ட்றம்ப் நிர்வாகம் துரிதப்படுத்தி வருகிறது.

தற்போது 5 கைதிகள் மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ளார்கள். இவர்கள் அனைவரதும் மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டால், இந்த வருடம் ஜூலை மாதத்திலிருந்து 13 மரணதண்டனைகளை நிறைவேற்றிய ஜனாதிபதி என்ற ஸ்தானத்தை ட்றம்ப் எடுத்துக்கொள்வார். கடந்த 100 வருடங்களுக்கு மேல் இப்படி எதுவும் நிகழ்ந்ததில்லை.

பொதுவாக, ஆட்சி மாற்றத்தின்போது மரணதண்டனைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்பது அமெரிக்காவின் 130 வருடகால மரபு.

தான் பதவிக்கு வந்தால் மரணதண்டனையை ஒழிப்பேன் என பைடன் கூரியாதால் ட்றம்ப் இம் முயற்சியில் இறங்கியிருக்கிறார் எனப் பலர் விசனிக்கிறார்கள். ஏற்கெனவே இருக்கும் சட்டத்தைத் தாம் பிரயோகிப்பதாக சட்டமா அதிபர் வில்லியம் பார் கூறுகிறார்.

தடைசெய்யப்பட்டிருந்த மரணதண்டனையை 1988 இல் அமெரிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்தது. ஆனாலும் வெகு சில தண்டனைகளையே அர்சு நிறைவேற்றியிருந்தது.



1988 இலிருந்து 2016 இல் ட்றம்ப் பதவியேற்கும்வரை 3 மரணதண்டனைகளே நிறிவேற்றப்பட்டிருந்தன. இவை அனைத்தும் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் காலத்தில் நடைபெற்றிருந்தன. 2003 இலிருந்து மத்திய அர்சினால் தண்டனையேதும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் மாநிலங்கள் தொடர்ந்தும் மரணதண்டனைகளை நிறைவேற்றி வருகின்றன. கடந்த வருடம் மட்டும் அமெரிக்க மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக 22 மரணதண்டனைகளை நிறைவேற்றியுள்ளன. பல மாநிலங்கள் மரணதண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி விட்டன.

அமெரிக்க மக்கள் மரணதண்டனை விடயத்தில் அதிகம் அக்கறை காட்டவில்லை. 2019 இல் எடுக்கப்பட்ட கல்லப் கருத்துக்கணிப்பில் 60% அமெரிக்கர்கள் மரணதண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனையைத் தேர்ந்தெடுத்திருந்தனர்.

தற்போது மரணதண்டனை வழங்குவதற்குத் தயார் செய்யப்பட்டிருக்கும் 5 பேர்களில் நால்வர் கறுப்பினததைச் சேர்ந்தவர்கள். இத் தெரிவில் அரசியல் பின்னணி இருப்பதாக மனித உரிமை செயற்பாட்டாளர் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த கோடை காலத்தில் கறுப்பின மக்களின் பொலிஸ் கொலைகள் தொடர்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றபோது மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் அனைவரும் வெள்ளையர்கள். தேர்தலில் ஏகோபித்த கறுப்பின மக்களின் வாக்குகள் பைடனுக்கு வழங்கப்பட்டமையின் பழிவாங்கலாக இது இருக்கலாமென்ற சந்தேகமும் இருக்கிறது. அதே வேளை குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன இனம் என்பதைப் பொறுத்தும் மரணதண்டனை வழங்குதல் வேறுபடுகிறது.

தற்போது மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்காகக் காத்திருக்கும் 40 வயதுடைய பிறாண்டன் பேர்னார்ட் மற்றும் 56 வயதுடைய அல்ஃபிரெட் பூர்ஜுவா ஆகியோரது தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால் 2020 இல் மொத்தம் 10 பேர் தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களாவர். இது ஒரு வரலாற்று நிகழ்வு. அமெரிக்காவில், ஒரு வருடத்தில் 10 பேருக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டது 1886 இல்.



பேர்னார்ட், 18 வயதாகவிருக்கும்போது, 1999 இல், கொலை, கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர். தண்டனை நிறைவேற்றப்பட்டால், கடந்த 70 வருடங்களில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட மிக இளைய குற்றவாளியாவார்.

இவரது வழக்கில் கடமையாற்றி, உயிரோடிருக்கும் 9 ஜூரர்களில், 5 பேர் மற்றும் இவரது மரணதண்டனைக்காக வாதாடிய சட்டத்தரணி ஆகியோர் இவரது மரணதண்டனையை நிறுத்தும்படி கேட்டுள்ளார்கள். ஆனாலும் ட்றம்ப் நிர்வாகம் பதவியிலிருந்து விலகுவதற்கு முதல் இவற்றை நிறைவேற்றுவதன் மூலம் தன் பழிவாங்கலைத் தீர்த்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளது.