‘பண்டோரா பேப்பர்கள்’ – உலகை அதிர்த்துவரும் ‘பணக்காரரின் புதையல்கள்’


இலங்கையின் ராஜபக்ச குடும்பமும் மாட்டியது

உலகின் பணக்காரார்களும், அரசியல்வாதிகளும், விளையாட்டு வீரர்களும், திருடர்களும் தமது பணத்தைப் பதுக்கிவைத்திருக்கும் இடங்கள், நாடுகள் பற்றிய இரகசியங்களைப் புட்டு வைத்திருக்கிறது, சர்வதேச புலன்விசாரணை ஊடகவியலாளர்களின் கூட்டமைப்பான International Consortium of Investigative Journalists (ICIJ).

இந்த விசாரணையின் மூலம் இலங்கையின் ஆளும் ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான நிருபாமா ராஜப்கசவும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளார்.

அதிக வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காகவும், குறுக்கு / குற்ற வழிகளில் சம்பாதித்த பணத்தை மறைத்துவைப்பதற்காகவும் உலகின் குற்றவளிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் தூரநாடுகளில் உள்ள இரகசியம் காக்கும் வங்கிகளை நாடுவதுண்டு. இதற்காக அவர்கள் நிறுவனங்களில் பெயர்களில் தமது கணக்குகளைத் திறந்து சேமிப்புகளை இட்டு வைப்பது வழக்கம். பனாமா, பிரிட்டிஷ் வேர்ஜின் ஐலண்ட்ஸ், டுபாய், சேஷெல்ஸ், கேமன் ஐலண்ட்ஸ், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இப்படியான திருட்டுப்பணத்தை ஒளித்து வைக்க உதவுகின்றன.

இப்படியான கருப்புப்பண முடக்கம் பற்றி சில வருடங்களின் முன்னர் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் வெளிவந்த அறிக்கையில் பல பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருந்தன. சுமார் இரண்டுவருட ஆராய்ச்சிகளின் பின்னர் இப்போது மேலும் பல கருப்புப்பணக் கிடங்குகளையும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களையும் கிண்டி எடுத்துப் பிரபலப்படுத்தியுள்ளது சர்வதேச புலன்விசாரணை ஊடகவியலாளர்களின் அமைப்பு.

உலகம் முழுவதிலுமிருந்து 600 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர் பங்குபற்றிய இவ்வூடகவியலாளர் கூட்டமைப்பின் விசாரணை உலக வரலாற்றிலேயே முதலாவது எனப் புகழப்படுகிறது.

பல நாடுகளின் அதி பணக்காரர்கள் தமது வருமானத்திற்குரிய வரியைச் செலுத்தாமல் குறைந்த வரி செலுத்தும் நாடுகளில் நிறுவனங்களைத் திறந்து அவற்றின் பெயரில் வருமானமாகத் தமது பணத்தை இட்டுவைக்கின்றனர். இந் நாடுகள் இவ்வங்கிக் கணக்குகள் பற்றிய இரகசியங்களைக் காத்துவருவதனாலும், இந்நாடுகளிலுள்ள வங்கிகள் ஸ்திரமானவையாகவும் பாதுகாப்பானவையாகவும் உள்ளமையாலும் பெரும்பாலான ‘திருடர்கள்’ தமது பணத்தை இந்நாடுகளில் பதுக்கி வைக்கின்றனர்.

தற்போது, இவ்வூடகவியலாளரின் கூட்டமைப்பு ‘பண்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் 300 க்கும் அதிகமான ‘திருடர்களின்’ வங்கிக் கணக்குகள் பற்றிய முழு விபரங்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. இதில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரோணி பிளையர் முதல் ஜோர்தான் அரசர் அப்துல்லா வரை 35 அரச தலைவர்களும், சச்சின் ரெண்டுல்கார் போன்ற விளையாட்டு வீரர்களும் சிக்கியிருக்கின்றனர்.

இதில் மிகவும் அருவருப்பான விடயமென்னவென்றால், ‘தமது நாடுகளின் வரிப்பணம் செல்வந்தர்களால் வேறு நாடுகளில் முடக்கப்படுகிறது’ எனவும், ‘ஊழலை ஒழிப்போமெனவும்’ கூக்குரலிட்டு ஆட்சிக்கு வந்த முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரோணி பிளையர், தற்போதைய செக்கோஸ்லவேக்கிய ஜனாதிபதி ஆண்ட்றேஜ் பாபிஸ் போன்றோர்கூட தமது கருப்புப் பணங்களை வெளிநாடுகளில் புதைத்து வைத்திருப்பது. பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தனது முன்னள் எதிரியான ஷெரீஃபைச் சிறைக்கனுப்பியது ‘பனாமா பேப்பர்ஸ்’ இல் வந்த அவரது திருட்டை அம்பலமாக்கியதன் மூலம் தான். தற்போது கானின் நெருங்கிய நண்பர்களும், அமைச்சர்களும் ‘பண்டோரா பேப்பர்ஸ்’ மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளார்கள்.



இலங்கையின் நிருபாமா ராஜப்கச விடயமும் சுவாரஸ்யமானது. இவர் ராஜபக்சக்களின் மைத்துனி. முந்திய ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர். இவரது கணவர் திருக்குமார் நடேசன், ஒரு தமிழர். கணவனும் மனைவியுமாக ஆரம்பித்த நிறுவனமொன்றின் கீழ் அவர்கள் லண்டன், சிட்னி ஆகிய நகரங்களில் ஆடம்பர வதிவிடங்களை வாங்கி வைத்திருக்கிறார்கள் என்கிறது ‘பண்டோரா பேப்பர்ஸ்’. இலங்கை அரசாங்கத்துடன் வெளிநாடுகளின் நிறுவனங்கள் செய்யும் அனைத்து ஒப்பந்தங்களும் நடேசன் மூலமாகவே கையாளப்படுகிறது எனவும் அதற்குக் கிடைக்கும் தரகுப்பணம் வெளிநாட்டு திருட்டுக் கணக்குகளில் போடப்படுகிறது எனவும் தற்போது தெரியவருகின்றது.

அத்தோடு தென்னாசிய ஓவியச் சேர்ப்புக்களில் நாட்டமுள்ள நடேசன் இலங்கை அரசாங்கத்தின் பெயரில் அவற்றை வாங்கி விற்பதிலும் ஈடுபட்டு வருவதாக அறியப்படுகிறது. ‘பண்டோறா பேப்பர்ஸ்’ இன் செய்திகளின் படி, 2018 இல் மட்டும், பசிபிக் கொமோடிற்றீஸ் என்ற நிறுவனத்தின் மூலம் 31 தென்னாசிய ஓவியங்களை ஜெனீவா ஃப்றீபோர்ட்டிலுள்ள அதி பாதுகாப்பு மிக்க கிட்டங்கிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன எனவும் இவற்றிற்கு அங்கு வரிப்பணம் எதுவும் செலுத்தப்படத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூரிலுள்ள ஏசியாசிற்றி அறக்கட்டளை நடேசன் போன்றவர்களின் வெளிநாட்டுப் பதுக்கல்களுக்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந் நிறுவனத்தின் மின்னஞ்சல் தொடர்புகளை ஆராய்ந்த ஊடகவியலாளர் கூட்டமைப்பு, 2011 வரை நடேசனின் பதுக்கல் பணத்தின் தொகை $160 மில்லியனுக்கு மேல் எனக் குறிப்பிட்டுள்ளது. ஏசியாசிற்றி நிறுவனம் மட்டும் நடேசன் – நிருபாமாவுக்குச் சொந்தமான $18 மில்லியன்களை நிர்வகித்திருக்கிறது.

2016 இல் நடேசன் மீது பணப்பதுக்கலுக்கான வழக்கொன்று பதியப்பட்டு நிலுவையிலுள்ளது.

தற்போது உருவாக்கப்பட்டுவரும் துறைமுக நகரமும் இப்படியான பணப்பதுக்கல் நாடாகப் பரிணமிக்கலாமென்ற ஊகங்களும் வெளிவந்துள்ளன. அதேவேளை பிரதமர் ராஜபக்சவின் பதுக்கல் பணம் தற்போது சேஷெல்ஸ் நாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இன்னொரு தகவலும் வெளிவந்துள்ளது.

நிருபாமா ராஜபக்ச பற்றிய தகவல்