பட்டினியால் வாடும் குழந்தைகள் அழுவதில்லை


By Nicholas Kristof, The New York Times

இக் கட்டுரை ‘நியூ யோர்க் ரைம்ஸ்’ ஜனவரி 2, 2021 இதழில் நிகொலஸ் கிறிஸ்ரோஃப் என்பவரால் எழுதப்பட்டுப் பிரசுரமானது. தமிழில்: சிவதாசன்

Nicholas Kristof
நிகொலஸ் கிறிஸ்ரோஃப்

பட்டினியால் வாடுதல் என்பது மிகுந்த வலி தருவதும், இழிவுபடுத்தப்படுவதுமான ஒரு நிகழ்வு. தோல் உரிந்துபோகிறது, முடி உதிர்கிறது, மனம் மாய உலகத்தில் சஞ்சரிக்கிறது, வைட்டமின் A குறைபாட்டால் சில வேளகளில் பார்வைய இழக்கவும் நேரிடுகிறது. ஊனுருக உடல் தன்னையே தனக்கு உணவாக்கிக் கொள்கிறது; தசையும் ஏன் அதன் இதையத்தையுமே அது உண்டு தீர்த்துவிடுகிறது.

இருந்தும், யேமென் நாட்டின் ஏடன் நகரைச் சேர்ந்த, நான்கு வயதுடைய, வெறும் 14 இறாத்தல்கள் எடையைக் கொண்ட அப்டோ சாயிட்டை மருத்துவமனைக்குக் கொண்டுவந்தபோது அவன் அழவில்லை. பட்டினியால் வாடும் குழந்தைகள் அழுவதோ அல்லது முகத்தைச் சுளிப்பதோ இல்லை. மாறாக, அவர்கள் அமைதியாகவும், எதிலும் ஆர்வமற்றவர்களாகவும், எந்தவிதமான முகபாவங்களைக் காட்டிக்கொள்ளாதவர்களாகவும் இருக்கிறார்கள். பட்டினியால் வாடும் ஒரு உடல் அழுவதனால் தனது சக்தியை விரயமாக்கிக் கொள்வதில்லை. ஒவ்வொரு கலோரியையும் தன் உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அது உபயோகிக்கிறது.

மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுச் சில கணங்களில் அப்டோ இறந்துவிடுகிறான். எனது நண்பரும், படப்பிடிப்பாளருமான கைல்ஸ் கிளார்க் அப்டோவின் கடைசித் தருணங்களைப் படம்பிடித்துக்கொண்டார்.

அப்டோ (நன்றி: The New York Times)

இக் கட்டுரையோடு இணைக்கப்பட்டதுட்பட அவரது பல படங்கள் பார்ப்பதற்கு வலி தருபவை. ஆனாலும், அப்டோவினது உட்படப், பல குடும்பங்கள் இப்படியான படங்களை எடுக்க இசைகின்றன. உலகைச் சுற்றிவரும் இப் படங்கள் மூலம், காரணமற்றுப் பட்டினியால் இறந்துபோகும் தமது குழந்தைகளின் நிலை கண்டு உலகம் விழித்துக்கொள்ள வேண்டுமென அவர்கள் ஏங்குகிறார்கள்.2017 இல் ஐ.நா.வினால் அறிவிக்கப்பட்ட, தென் சூடானில் சில மாதங்களுக்கு நீடித்த ஒன்றைத் தவிர, 2020 வரை உலகம் பஞ்சத்தை எதிர்கொள்ளவில்லை. ஆனால் தற்போது யேமென், தென் சூடான், பேர்கினோ ஃபாசோ, வட கிழக்கு நைஜீரியா உட்படப் 16 நாடுகள் பேரழிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன என ஐ.நா. எச்சரிக்கிறது.

(நன்றி: The New York Times)

வழக்கமாக, வருடத்தின் இந்நாட்களில், நான் ஏற்கெனவே எழுதிய குழப்பம் தரும் கட்டுரைகளைச் சமன்படுத்துவதற்காக ‘கடந்துபோன வருடம் மனித வரலாற்றிலேயே மிகச் சிறந்த ஒன்று’ என்பதுபோல எழுதுவதுண்டு. ஆனால் 2020 அப்படியானதொன்றல்ல. அது வரலாற்றில் கொடியதொரு வருடம். மாதமொன்றிற்கு 10.000 குழந்தைகளைப் பறிகொடுத்த வருடமது என்கிறது யூனிசெஃப்.

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் ஏற்பட்ட இப் பின்னடைவை மேலும் மோசமாக்கியமைக்கு, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலக வங்கி போன்ற அமைப்புகளின் அலட்சிய, பாகுபாடு காட்டும், உறைந்துபோன மனப்பாங்குதான் காரணம்.

தற்போதுள்ள உலக நெருக்கடிக்கு முக்கியமான ஆனால் மறைமுக காரணம் கொறோணாவைரஸ். எண்பதுகளைத் தாண்டியவர்கள் இறந்துபோகும் பணக்கார நாடுகளுக்கு வெளியே, பொருளாதாரம் தடைப்படுவதால் குழந்தைகள் பஞ்சத்துக்கு ஆளாகி இறந்து போவதும், மருந்துகள் தடைப்படுவதால் மத்திய வயதினர் எயிட்ஸ் போன்ற நோய்களால் இறந்துபோவதும் எனப் பல மரணங்கள் நிகழ்கின்றன.

மனித இன்னல்களின் இன்றய தலைநகரம், உலக நாடுகளில் மிக மோசமான மனித அவலங்கள் நிகழும் நாடென ஐ.நா.வினால் அறிவிக்கப்பட்ட, யேமென் தான். புது வருடத்தை வரவேற்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அப்டோ போன்ற யெமானியக் குழந்தைகள் பட்டினியால் இறந்துபோகின்றன.யேமென் நாட்டின் இன்னல்கள் மிகவும் சிக்கலானவை. எப்போதுமே ஏழ்மையான இந்த நாடு போரினாலும், ஒபாமா மற்றும் ட்றம்ப் நிர்வாகங்களின் உதவியுடன், சவூதி அரேபியாவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் பொருளாதாரத்தடையினால் சின்னாபினாப்பட்டுப்போன ஒன்று. கொலரா, கொறோணாவரஸ்களால் மட்டுமல்ல, ஈரானின் உதவியுடன் அதிகாரத்திலிருக்கும் ஹூதி பிரிவினரால் மேலும் சிதைக்கப்பட்டுவரும் ஒரு நாடு. உதவி வழங்கும் நாடுகள் தத்தம் பிரச்சினைகளில் மூழ்கிப் பார்வைகளை அகற்றிக்கொண்டதனால் மேலும் பரிதவிக்கும் நாடு.

இதனால் தான் அப்டோ இறந்து போனான்.

கொறோணாவரைஸ் புள்ளிவிபரத்தைப் பார்த்தீர்களானால், வறுமையான நாடுகள் இக் கொடிய நோயைத் தவிர்த்துக்கொண்டு விட்டதாக நீங்கள் நினைப்பீர்கள். அபிவிருத்தியடைந்துவரும், குறிப்பாக ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள, நாடுகளில் பெரும்பாலானவை கோவிட் -19 இனால் ஏற்பட்ட பேரிழப்புகளைத் தவிர்த்திருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அதன் மறைமுக விளைவுகள் பேரிடர்களுக்குக் காரணமாகவிருந்துள்ளன. மக்கள் நடமாட்ட முடக்கங்கள் கூலித் தொழிலாளர்களது வருமானங்களைப் பறித்துக்கொண்டன. நோயாளிகள் மருந்துகளைப் பெற முடியாமல் அவதிக்குள்ளாகுகின்றனர். மலேரியா, போலியோ, எயிட்ஸ் போன்ற வியாதிகளுக்கெதிரான நடவடிக்கைகள் தடைப்பட்டுப் போயின. இந் நாடுகளில் பஞ்சமும், நோய்களும், படிப்பறிவின்மையும் தலைவிரித்தாடுகின்றன.

விளைவுகள் முடிவற்றவை. இப் பெருந்தொற்றின் நேரடி, மறைமுக விளைவுகளினால் 13 மில்லியன் இளம் பெண்கள் குழந்தைத் திருமணத்திற்கு வலியுறுத்தப்படுவார்கள்; 2 மில்லியன் பெண் குழந்தைகள் பிறப்புறுப்புச் சிதைப்புக்கு (genital mutilation) உட்படுத்தப்படுவார்கள்; கருத்தடை வசதிகளின் தட்டுப்பாடு காரணமாக 15 மில்லியன் தேவயற்ற கருக்கொள்ளல்கள் நிகழ வாய்ப்புண்டு என எச்சரிக்கிறது ஐ.நா. மேலதிகமாக 72 மில்லியன் குழந்தைகள் படிப்பறிவு பறிக்கப்பட்டவர்களாப் போகிறார்கள் என்கிறது உலக வங்கி.கொறோணாவைரஸின் காரணமாக அப்டோவைப் போல் 168,000 குழந்தைகள் பஞ்சத்தால் மடியப் போகிறார்கள் என்கிறது ஒரு நிபுணர்கள் குழு.

2020, 2021 இல் புத்திக் கூர்மையின்றியோ அல்லது பார்வைகளை இழந்தோ, பலர் தப்பிப் பிழைக்கலாம். பணக்கார நாடுகளின் பாராமுகத்தால் நிலைமை மேலும் மோசமடையலாம்.

சில ஏழ்மையான நாடுகள் தமது மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கு தடுப்பூசியை வழங்கலாம். இதனால் இப் பெருந்தொற்று இந் நாடுகளில் மேலும் பல காலம் வாழப் போகிறது. இதற்கு ஒரு காரணம், அமெரிக்கா மற்றும் பல பணக்கார நாடுகளிலுள்ள தடுப்பூசியைத் தயாரிக்கும் நிறுவனங்கள், தமது மருந்துகளை ஏழை நாடுகள் தயாரிக்க முடியாமல் சட்டபூர்வமாகத் தடுத்து வைத்துள்ளமையே.

அப்படியிருந்தும், குழந்தைகளின் இறப்பு அல்லது மிகக் கொடுமையான பஞ்சத்தில் வாழும் மக்கள் என்ற ஒப்பீட்டு எண்ணிக்கையைப் பொறுத்தவரை, மனித வரலாற்றின் ஐந்து சிறந்த வருடங்களில் ஒன்றாக 2020 இருக்கிறது. தற்போதுள்ள பெருந்தொற்று நெருக்கடியிலிருந்து மீள உலகம் மிகவும் ஆக்ரோஷமான நடவடிக்கையில் இறங்கினால் சில வேளைகளில் 2020 ஆண்டை, வரலாற்றின் தெளிவற்ற ஒரு புள்ளியாக மாற்றப்பட முடியும்.

நிக்கொலஸ் கிறிஸ்ற்றோஃப், நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் 2001 முதல் பத்தி எழுத்தாளராகப் பணி புரிகிறார். டார்ஃபுர் படுகொலை, சீனா மீதான கட்டுரைகளுக்காக அவர் இரண்டு புளிட்சர் பரிசுகளைப் பெற்றவர்.