பட்டினியால் வாடிய தன் குழந்தைகளுக்காக இரண்டு பப்பாளிப் பழங்களை கடனாகக் கேட்ட தந்தை!
தென்னிலங்கையில் நிலைமை மோசம்?

அனுராதபுரத்தைச் சேர்ந்த சாவித்திரிபுரம் என்ற இடத்தில் 50 வயதுத் தந்தை ஒருவர் கடைக்காரர் ஒருவரிடம் அவரது தோட்டத்தில் விளைந்த பாப்பாளி மரத்திலிருந்து இரண்டு பழங்களைக் கடனாகத் தந்துதவுமாறு கேட்ட சம்பவத்தை நேரில் கண்ட இதர வாடிக்கையாளர் விபரித்ததாக தென்னிலங்கை ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு, மூன்று நாட்களாகத் தனது பிள்ளைகள் எதையும் சாப்பிட்டிருக்கவில்லை எனக்கூறி அத் தந்தை இரண்டு பப்பாளிப் பழங்களைக் கடனாகக் கேட்டதாகவும் அச் சிறிய கடைக்காரர் உடனடியாக அவற்றைக் கொடுத்து உதவியதாகவும் இச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு வாடிக்கையாளரை மேற்கோள் காட்டி ஊடகங்கள் இச் செய்தியை வெளியிட்டுள்ளன.
இன்னுமொரு பெண் தன் அயலவர் தான் வாங்கிய 200 கிராம் மாவில் ரொட்டிகளைச் செய்து அதில் இரண்டைத் தனது குழந்தைக்கும் எஞ்சிய ஒன்றை அவரது கணவருடன் பகிர்ந்துண்டதாகவும் அக்குடுப்பத்தின் அயலவர் ஒருவர் குறிப்பிட்டதாக அறியப்படுகிறது. கணவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வேலைக்குப் போகமுடியாத நிலையில் தேவையான மருந்துகளையே வாங்கமுடியாத நிலையில் அப்பெண் இருப்பதாக அயலவர் தெரிவித்ததாக அறியப்படுகிறது.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் பற்றி பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும், பொருளாதார நிபுணர்களும் பொதுவெளியில் விவாதித்து வரும் நிலையில் சாதாரண ஏழை மக்கள் நாளாந்தம் அனுபவித்து வரும் இன்னல்களைச் சிங்கள ஊடகங்கள் தவிர்த்து வருகின்றன. இவற்றில் பல அரசுக்கு ஆதரவானவையாக இருப்பினும் பல அச்சம் காரணமாக அரசுக்கெதிரான செய்திகளை வெளியிடுவதில்லை எனவும் கூறப்படுகிறது. சில தென்னிலங்கை ஆங்கில ஊடகங்கள் இச்செய்திகளை வெளிக்கொணர்ந்தாலும் அவை கிராமிய மக்களிடம் சென்றடைவதில்லை.