Spread the love

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஹோஷியாப்பூர் என்னுமிடத்தில் 19 வயதுப் பெண்ணொருவர் ஒரு ஆடவருடன் காதல் கொண்டமைக்காக அவரது குடும்பத்தாரால் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

பெண்ணின் தாயார் மகளுக்குத் தூக்க மாத்திரைகளைக் கொடுத்ததாகவும், பின்னர் இதர குடும்பத்தினர் அப்பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு இரகசியமாக அவரது உடலைத் தகனம் செய்துவிட்டதாகவும் அறியப்படுகிறது.

இது தொடர்பாக பஞ்சாப் காவல்துறை அக் குடும்பத்திலுள்ள 5 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இவர்களில் ஒருவர் பஞ்சாப் முதலமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் கடமை செய்யும் காவற்துறை உத்தியோகத்தராவார்.

கொலைசெய்யப்பட்ட பெண்ணின் தாயாரான பல்விந்தர், ஏப்ரல் 22 அன்று தனது மகள் ஜஸ்பிறீத் காவுரைக் காணவில்லை எனவும், வீட்டில் எவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் எங்கோ சென்று விட்டதாகவும் காவற்துறையில் முறைப்பாடு செய்திருந்தார். அத்தோடு, பாஜ்லான் கிராமத்தைச் சேர்ந்த அமன்பிறீத் சிங்க் மீது, இது குறித்துத் தான் சந்தேகம் கொள்வதாகவும் அவர் தன் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.


முறைப்பாடு செய்த மறுநாள், தனது மகளை, கார்ஷங்கர் ரயில்வே நிலையத்துக்கருகில் கண்டுபிடித்து, வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டதாக பல்விந்தர் காவுர் காவற்துறைக்கு அறிவித்திருந்தார்.

கொல்லப்பட்ட பெண் அமன்பிறீத் என்பவரைக் காதலித்து வந்ததாகவும், காணாமற் போனபோது அவர் தனது காதலரின் வீட்டுக்குச் சென்றிருந்தார் எனவும், இதை அறிந்த உறவினர் கிராமத்துப் பஞ்சாயத்தின் உதவியுடன் பெண்ணைக் கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருந்தார்கள் எனவும் காவற்துறை விசாரணையின்போது தெரியவந்திருக்கிறது.

இறந்தவரின் தாய், மாமனார் மற்றும் மைத்துனர் ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்தபோது இது நடைபெற்றிருக்கிறது.

Print Friendly, PDF & Email
Related:  வங்காளம், ஒடிசா | வாட்டி வதைக்கும் சூறாவளி அம்பன்