பசில் ராஜபக்ச பாராளுமன்றம் செல்கிறார் – தேர்தல் ஆணையம் வர்த்தமானி மூலம் அறிவிப்பு

கடந்த சில நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டுவந்த பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகை நேற்று உறுதியாகிவிட்டது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கெட்டகொட கமகே ஜயந்த பெரேரா தனது பதவியைத் துறந்த காரணத்தால் உருவாக்கப்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்கு அனுமதி தரும்படி , பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தேர்தல் ஆணையத்தைக் கேட்டிருந்தார். அரசியலமைப்பின் 99A கட்டளையின் பிரகாரம் தேர்தல் ஆணையம் விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இவ்வனுமதியை வழங்கியிருந்தது. இதைத் தொடர்ந்து இவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன பசில் ராஜபக்சவை பரிந்துரைத்திருந்தது. இதந் விளைவாக பசில் ராஜபக்ச அக் கட்சியின் நியமன பாராளுமன்ற உறுப்பினராக தேர்தல் ஆணையத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.

இதே வேளை, மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் பசில் ராஜப்கசவுக்கு வழங்கப்பட்டிருந்த நிதி  அமைச்சை பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. தற்போது மஹிந்த ராஜபக்ச வசம் இருக்கும் நிதி அமைச்சை அவர் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என முன்னர் செய்திகள் வெளிவந்திருந்த போதிலும் இறுதியில் அவ்வமைச்சை விட்டுக்கொடுக்க அவர் தயாராகவுள்ளாரெனவும் அதற்குப் பதிலாக அவருக்கு பொருளாதார திட்டங்கள் மற்றும் நடைமுறையாக்கல் அமைச்சு வழங்கப்படுமெனக் கூறப்படுகிறது. 

அத்தோடு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோதாபய ராஜபக்சவுக்கு விருப்பமில்லை எனவும் அவரது இடத்தில் பசில் ராஜபக்சவை நிறுத்துவதற்கு கட்சி உறுப்பினர்கள் தயாராகுவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. உடல் நலம் காரணமாக மஹிந்த ராஜபக்ச அரசியலிலிருந்து ஓய்வுபெற உத்தேசித்துள்ளதாகவும் அப்படி நடைபெறும் பட்சத்தில் நாமல் ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்கலாம் எனவும் அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.